Share on Social Media

அரசியல் வரைபடங்கள் போல் விளையாட்டு வரைபடங்களும் மாறிக்கொண்டே இருப்பவைதான். பொலிட்டிக்கல் மேப்களில் இருந்து சோவியத் யூனியன் காணாமல் போனதுபோல், அவ்வப்போது ஒலிம்பிக் மேப்களில் இருந்து சோவியத்தின் தங்கை ரஷ்யா காணாமல் போய்விடும். ஒவ்வொரு தசாப்தத்திலும் இதுபோன்ற மாற்றங்கள் விளையாட்டில் நடந்துகொண்டேதான் இருக்கும். கிரிக்கெட்டில் மட்டும் இம்மாற்றங்கள் அதிவேகமாக நிகழும்.

2003 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய கென்யா, இன்றைய வரைபடத்தில் இல்லை. ஆப்கானிஸ்தான் புதிதாய் முளைத்திருக்கிறது. இலங்கை மெதுவாய் மறைந்துகொண்டிருக்கிறது. இந்தியர்களால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நவீன வரைபடங்களில் பாகிஸ்தான் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. பச்சை வண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக பழுப்பாகிக்கொண்டே இருந்தது. இன்னும் சில ஆண்டுகளில் பாகிஸ்தான் இல்லாத கிரிக்கெட் வரைபடம் வெளியாகியிருக்கும். ஆனால், தரையும், நீரும், மழையும் காவியாய் மாறாமல் இருக்க, ‘இந்து’குஷ் மலைகள் மீதேறி பச்சைக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருக்கிறார் பாபர் ஆசம்! இந்தத் தனி ஒருவன், வரலாற்றுப் பக்கங்களில் தன் பெயரை எழுதி, பாகிஸ்தானை வரலாறு ஆகாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்!

20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே சூப்பர் ஹீரோக்களாக இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே விளங்கினார்கள். பான்டிங், டி வில்லியர்ஸ், ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் கொண்டாடப்பட்டாலும் அவர்கள் என்னவோ உப ஹீரோக்களாகவே கருதப்பட்டார்கள். சச்சினுக்குப் பிறகு தோனி, இப்போது கோலி என்று கிரிக்கெட் மாறவில்லை. மார்வெல் கூட கேப்டன் மார்வெல், பிளாக் பாந்தர் என்று பரிணாமம் கண்டுவிட்டது. ஆனால், கிரிக்கெட் மாறவில்லை. இந்த ஆதிக்கத்தின் உச்சமாக ஒருநாள் தரவரிசையில் 1258 நாள்கள் நம்பர் 1 இடத்தில் இருந்தார் விராட் கோலி. இப்போது கிங் கோலியை பின்னுக்குத்தள்ளி, அந்த சிம்மாசனத்தில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார் பாகிஸ்தான் கேப்டன்!

எண்களை வைத்துப் பேசுவோமா இல்லை எல்லையற்ற அவர் திறன் பற்றிப் பேசுவோமா. 80 போட்டிகளில் 30 ’50+ ஸ்கோர்கள்’, சுமார் 56 என்ற சராசரி – நம்பர்கள் பொய் சொல்லாது என்று சொன்னால் இவர் விஷயத்தில் உண்மைதான். எண்கள் கடந்து பேசினோம் என்றால், நிச்சயம் யாரும் மாற்றுக்கருத்து கொள்ள முடியாது. ஏனெனில், ஒப்பற்ற அழகியல் கொண்ட வீரர் அவர். எல்லோரும் விமானத்தில் பறப்பது தனி அனுபவம் என்பார்கள். ஒருசிலர் கார் ஓட்டுவதிலேயே விமானத்தில் இருப்பதுபோன்ற அனுபவம் ஏற்படுத்துவார்கள். இவர் இரண்டாம் ரகம். தரை மார்க்கமாகத்தான் இவரது ஷாட்கள் இருக்கும். ஆனால், பந்துகள் என்னவோ காற்றில்தான் மிதந்து செல்லும். அப்படியொரு வித்தகர் அவர்.

கிரிக்கெட் நிபுணர்கள் உலகம் இவரை ‘one of the best’ என்று ஏற்றுக்கொண்டு மூன்று வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவரது கிளாசிக் கவர் டிரைவ்களையும், லேட் கட்களையும், அநாயச ஃபிளிக்குகளையும் உச்சி முகர்ந்து கொண்டாடி முடித்துவிட்டார்கள். ஆனால், மக்களின் நாயகனாக மாற மாஸாக ஒரு சம்பவம் செய்தாகவேண்டுமே. இதோ இப்போது செய்துவிட்டார். ஒப்பற்ற ஒருநாள் வீரரை, ரன் மெஷினை, 21-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரரை முந்தியிருக்கிறார் ஆசம். ஐ.பி.எல் போட்டிகளை ஒத்திவைத்துவைத்துவிட்டு, ஐ.பி.எல் தொடரிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர்களை நாம் உற்றுநோக்கவேண்டிய நேரம் இது!

போர்டு குழப்பங்கள், சூதாட்ட சர்ச்சைகள், சீனியர்கள் ஓய்வு, தொடர்ந்து மாறும் பயிற்சியாளர் குழு என சோகங்களும் சோதனைகளும் நிகழ்ந்ததாகவே இருந்தது பாகிஸ்தான் கிரிக்கெட். ஐ.பி.எல் தான் கிரிக்கெட் என்று மாறிவரும் காலகட்டத்தில் அந்தத் தொடரிலிருந்தும் புறக்கணிக்கப்பட்டார்கள் பாக் வீரர்கள். சொந்த ஊரில், தாங்கள் எந்த மைதானங்களில் விளையாடவேண்டும் என்று அந்த வீரர்கள் கனவு கண்டிருப்பார்களோ அந்த மைதானங்களில்கூட ஆட முடியாது சூழ்நிலை. ஒட்டுமொத்த உலகமும் பாகிஸ்தான் மீது பாராமுகம் காட்டத் தொடங்கிவிட்டது.

Babar Azam

கடந்த 20 ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் எனும் ஜாம்பவான் அடிபட்டு அலறிய கதை பார்த்துவிட்டோம், இலங்கை கத்துக்குட்டியாய் மாறும் படலமும் நம் முன்னே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், இத்தனை இன்னல்களை சந்திக்கும் பாகிஸ்தான் உலக அரங்கில் தாக்குப்பிடிக்க முடியுமா! கடினம். மிகவும் கடினம். ஆனால், தேசத்துக்கு வரும் தீங்குகளைத் தடுத்து நிறுத்தி, தன் வரலாறைத் தாங்கிப் பிடிப்பவன்தானே சூப்பர் ஹீரோ. பாபர் எனும் சூப்பர் ஹீரோ, பாகிஸ்தான் கிரிக்கெட்டைத் தூக்கிப் பிடித்திருக்கிறார்.

தன்னைச் சுற்றிலும் கன்சிஸ்டென்ஸி இல்லாத வீரர்கள். நிரந்தரம் இல்லாத மேனேஜ்மென்ட். ஆனால், எதுவும் இவரைத் தடுக்கவில்லை. ஒவ்வொரு அணிக்கு எதிராகவும், ஒவ்வொரு கண்டத்திலும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மைதானத்திலும் தன் கிளாஸ் ஆட்டத்தால் பாகிஸ்தானை மீட்டுக்கொண்டிருந்தார். வெறும் கையில் சண்டை செய்தவனுக்கு உடை வாளைக் கொடுத்தது பாகிஸ்தான். கேப்டன் ஆன கையோடு, ஒவ்வொரு போட்டியிலும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கிவிட்டார்.

AP21104561051191 Tamil News Spot
Babar Azam

உலகின் நம்பர் 1 ஒருநாள் வீரராக புதன்கிழமை மதியம் அறிவிக்கப்படுகிறார் அவர். மகத்தான சாதனை செய்ததால் ஓய்ந்திருக்கலாம். சற்று ஆசுவாசப்பட்டிருக்கலாம். ஆனால், அவர் ஓயவில்லை. தான் இந்தியர் இல்லை. என்னதான் மாஸான சம்பவம் செய்தாலும், விரைவில் மக்கள் மறந்துவிடுக்கூடும். அதனால் அன்று இரவே இன்னும் பெரிதாக ஒரு சம்பவம் செய்கிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டியில் 204 ரன்களை சேஸ் செய்கிறது பாகிஸ்தான். ஐம்பத்தி ஒன்பதே பந்துகளில் 122 ரன்கள் எடுத்து மெர்சல் காட்டினார். பாகிஸ்தானை வெற்றி பெறவைத்தார். கிரிக்கெட் வரைபடத்தில் பாகிஸ்தானின் ஒதுக்கப்படாமல் இருக்க, தனி ஆளாக சண்டை செய்துகொண்டிருக்கிறார் இந்த 26 வயது இளைஞர். அதில் ஜெயித்துக்கொண்டும் இருக்கிறார்.

இவருக்குப் பெயர் வைத்தவர் நிச்சயம் தீர்க்கதரிசியாகத்தான் இருக்கவேண்டும். இவர் என்னவாக உருவாகவேண்டும், எப்படி அறியப்படவேண்டும் என்று ஆசைப்பட்டு, அனுமானித்துப் பெயர் வைத்திருக்கிறார்கள் – பாபர்…. ‘ஆசம்’!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *