Share on Social Media


விரைவில் உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று பா.ஜ.க-வும், காங்கிரஸும் தற்போதிலிருந்தே தேர்தல் பணிகளை முழு வீச்சில் தொடங்கியிருக்கின்றன. அதிக சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமின்றி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட உத்தரப்பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி கடந்த சில மாதங்களாகவே தேர்தல் வேலைகளைத் தீவிரமாகச் செய்துவருகிறார். அதே நேரத்தில் பா.ஜ.க சார்பிலும் பல முக்கிய பிரமுகர்கள் முகாமிட்டுத் தேர்தல் பணிகளைச் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அண்மையில் நடந்து முடிந்த மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. தேர்தல் முடிவுக்கு முன்புவரை பா.ஜ.க தான் வெற்றிபெறும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் மம்தா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

தேசிய தேர்தல் களத்தில் மம்தா!

மம்தாவின் வெற்றி தேசிய அளவில் பெரிதாகக் கவனம் பெற்றது. மேலும், வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சிகளை மம்தா தீவிரமாகச் செய்துவருகிறார். இந்த பணிகள் ஒருபுறமிருக்க மம்தா மேற்கு வங்கத்தைத் தாண்டி, விரைவில் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு தனது கட்சியைத் தேசிய அளவில் பெரிதாக்கவேண்டும் என்ற மற்றொரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். மம்தாவின் வருகை பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற பெரும் கட்சிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமா என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

FGkQOayVEAMrRXC Tamil News Spot
கோவாவில் மம்தா

கோவாவைப் பொறுத்தவரைக் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 17 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸில் தற்போது வெறும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டனர். ஒரு காலக்கட்டத்தில் கோவாவில் ஆட்சி அதிகாரத்திலிருந்த காங்கிரஸ் தற்போது பலமிழந்து போயிருக்கிறது. விரைவில் வரவிருக்கும் கோவா சட்டமன்றத் தேர்தலில் தாங்கள் இழந்த செல்வாக்கை மீண்டும் கைப்பற்றி, ஆட்சியைப் பிடிக்கத் தீவிர தேர்தல் பணியைச் செய்துவரும் காங்கிரஸுக்குத் தேர்தல் களத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருக்கின்றன.

கோவாவில் தற்போதைய சூழலில் கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு காரணங்களால் ஆளும் பா.ஜ.க அரசின் மீது அதிருப்தி மனநிலை நிலவுகிறது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகளும் கோவாவில் கால்பதிக்க வியூகம் வகுத்து வருகின்றன. சமீபத்தில் கோவாவுக்குப் பயணம் மேற்கொண்ட மம்தா அங்கிருக்கும் மாநிலக் கட்சிகளை ஒன்றிணைந்து பணியாற்ற வரவேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார். மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, சுகாதா ராய் போன்ற பல்வேறு முக்கிய பிரமுகர்களும் கோவாவில் முகாமிட்டுத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள்.

FFh71uPVUAAHcud Tamil News Spot
சரத்பவார், மம்தா பானர்ஜி

காங்கிரஸைச் சீண்டும் திரிணாமுல் காங்கிரஸ்!

சமீபத்தில் மும்பை சென்ற மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜியிடம், `ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு சரத்பவார் தலைமை வகிப்பாரா’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மம்தா, “ஐக்கிய முற்போக்குக் கூட்டணியா அப்படியென்றால் என்ன? அந்த கூட்டணி இப்போது இல்லை. அது என்ன செய்து கொண்டிருக்கிறது. அரசியலில் தொடர்ந்து செயலாற்றவேண்டியது அவசியம். தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்தால் என்ன செய்ய முடியும். மாற்றுக் கூட்டணி வலுவாக இருக்க வேண்டும். இதனை என்னால் தனியாகச் செய்ய முடியாது. போராடத் தயாராக இல்லாதவர்களை நாம் என்ன செய்ய முடியும்.” என்று பேசினார்.

தொடர்ந்து பேசியவர், “அரசியல் ரீதியாக பா.ஜ.க இந்த நாட்டிலிருக்கக் கூடாது என்று நான் போராடுகிறேன். காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் போட்டியிடலாம் என்றபோது, நாங்கள் ஏன் கோவாவில் போட்டியிடக்கூடாது. மோடியை அதிக பலம் வாய்ந்தவராக மாற்றுவதே காங்கிரஸ் கட்சி தான். பா.ஜ.க-வுக்கு விளம்பரம் தேடித்தரும் செயலை காங்கிரஸ் செய்துகொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி ஒரு நல்ல தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததின் காரணமாக இன்று நாடு கஷ்டப்படுகிறது. மேற்கு வங்கத்தில் பா.ஜ.க-வுக்கு எதிராக மோதாமல் என்னோடும், என் கட்சியோடும் மோதினார்கள்” என்று காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார்.

Tamil News Spot
ராகுல் காந்தி

மம்தாவின் இந்த விமர்சனத்துக்குக் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரஞ்சன் சவுத்ரி, “ஒட்டுமொத்த இந்தியாவும் மம்தா… மம்தா என்று கூக்குரலிடுவது போல் அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். ராகுல் காந்தியை விமர்சனம் செய்துவிட்டு எந்த ஒரு தனிக்கட்சியும் பா.ஜ.க-வை எதிர்த்துப் போராட முடியாது. இந்தியாவின் ஜனநாயகத்துக்கும், நாட்டுக்குக் காவல் புரியவும் காங்கிரஸ் கட்சி தான் ஒரே மாற்று” என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், காங்கிரஸ் கட்சி “ஆழ்ந்த உறைநிலைக்கு போய்விட்டது. இப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப எதிர்க்கட்சிகள் மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்பார்த்து வருகின்றன” என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ஜாகோ பங்களாவில் ஒரு கட்டுரை வெளியானது. இந்த கட்டுரை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேகாலயாவின் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மா, 12 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களோடு திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். அதற்கு சில வாரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவா முன்னாள் முதல்வர் லூய்சின்ஹோ திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தார். மேலும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்களும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FF1LXBjVQAE6Ip Tamil News Spot
ப.சிதம்பரம்

இது போன்ற அரசியல் சுழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ப.சிதம்பரம், “மம்தா பானர்ஜி என் நண்பர். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டு அனைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும். பா.ஜ.க இல்லாத எதிர்க்கட்சி தேவை என்று சஞ்சய் ராவத் கூறியிருந்தார். அவர் மிகவும் பொறுப்பான கருத்தைக் கூறியிருக்கிறார் என்று நினைக்கிறேன். அவரின் கருத்துக்கு நான் முழுவதுமாக உடன்படுகிறேன். எங்களுக்கு ஒரு வகையான அணுகுமுறை இருக்கிறது. மம்தாவுக்கு வேறு ஒரு வகையான அணுகுமுறை இருக்கிறது. இந்த இரண்டு அணுகுமுறைகளும் ஒன்றிணைந்தால் அது நாட்டுக்கு தான் நல்லது” என்று பேசினார்.

Also Read: பலமிழந்த காங்கிரஸ்; நெருக்கடியில் பாஜக; கால்பதிக்கும் மம்தா! – கோவா தேர்தல் ரேஸில் முந்துவது யார்?

“தற்போதைய தேர்தல் களநிலவரப்படி கோவா உள்ளிட்ட சில மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த சூழலைப் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற பல்வேறு கட்சிகள் அந்த மாநிலத்தில் தடம் பாதிக்க நினைக்கின்றன. அதனால், வாக்குகள் பல பக்கம் சிதறும் சூழல் தான் உருவாகும். அது காங்கிரஸுக்குப் பாதகமாக அமையும் என்பதைவிட, பா.ஜ.க-வுக்குச் சாதகமாக அமையும் என்பதே உண்மை நிலவரம்” என்கிறார்கள் தேசிய அரசியலை உற்றுநோக்கும் அரசியல் விமர்சகர்கள்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் என்ன மாற்றம் வேண்டுமென்றாலும் நடக்கலாம். என்ன நடக்கும் என்பதைச் சற்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.