Share on Social Media


சென்னை: தமிழகத்தில் இனி திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என அண்ணாமலை தெரிவித்து 3 நாட்கள் கடந்து விட்டது. இன்று வரை அமைதி காக்கிறது அதிமுக. பாஜகவின் திட்டங்களுக்கு மறைமுகமாக உதவி புரிகிறதா அதிமுக? என கேள்வி எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏக்கள் கிடைத்ததுமே தமிழ்நாட்டில் வலுவான காலூன்றுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது பாஜக. குறிப்பாக கொங்கு மண்டலத்தை குறிவைத்து அக்கட்சி காய் நகர்த்துகிறது. கொங்கு மண்டலத்தின் பட்டியல் பிரிவை சேர்ந்த எல்.முருகனுக்கு மத்திய அமைச்சர் பதவியை கொடுத்துள்ள பாஜக, அங்கு பெரும்பான்மையாக உள்ள சமுதாயத்தில் இருந்து மாநில தலைவரை தேர்வு செய்துள்ளது.

அண்ணாமலை தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவராக பொறுப்பேற்றதும் இனி திமுக, பாஜக இடையே தான் போட்டி என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தற்போது உள்ள திமுக, அதிமுக என்ற இருதுருவ அரசியலில் அதிமுகவின் இடத்தில் இனி பாரதிய ஜனதா தான் வீச்சிருக்கும் என்ற அண்ணாமலையின் பேச்சு எதோ எதோ போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்ற ஒன்றல்ல அதிமுகவின் வாக்குகளை பாஜகவுக்கு மாற்ற மறைமுகமாக வேலைகள் நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் பாஜகவின் நோக்கத்தை பகிரங்கமாகவே போட்டுடைத்தார் அண்ணாமலை. பாஜகவின் அண்மை கால செயல்பாடுகளும் அதற்கு கட்டியம் கூறுகின்றன.

மேற்கு மாவட்டங்களை பொறுத்தவரை நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும் சாதகமாக அமைந்துள்ளன. 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடிக்க காரணமான அக்கட்சி எப்போதும் வலுவாக திகழும் மேற்கு மாவட்டங்களுக்கு தான் இப்போது பாஜக குறி வைத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைத்துள்ள ஒரே மத்திய அமைச்சரையும், கட்சியின் மாநில தலைவரையும் அங்கிருந்தே தேர்வு செய்திருப்பது உறுதி படுத்துகிறது. தற்போதைய நிலையில் மேற்கு மாவட்டங்களில் பாஜக வலுவாக உள்ளதா? என்ற கேள்வியை முன்வைத்தால் இல்லை என்பதே நாடாளுமன்ற தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை.

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை, கொங்கு நாடு என்று மேற்கு மாவட்டங்களை மையமாக கொண்டு பாரதிய ஜனதா செய்யும் அரசியல் அதிமுகவிலும் அடிமட்ட அளவில் சலசலப்பை ஏற்படுத்தாமல் இல்லை. ஆனால் தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிராக இனி பாஜக மட்டுமே என்று அண்ணாமலை அழுத்தம் திருத்தமாக பேசிய பிறகும் கூட அதிமுக தலைவர்கள் மௌனம் காப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாறாக பாஜக தலைவர் அண்ணாமலையில் கருத்துகளில் தவறு ஏதும் இல்லை என்ற வகையில் தான் அதிமுக-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எதிர்வினையாற்றியுள்ளார். ஒரு மாநிலத்தில் வேரூன்ற அங்குள்ள வலுவான மாநில கட்சிகளில் ஒன்றை கபிலிகரம் செய்வது பாஜகவின் உப்திகளில் ஒன்று.

உத்திரப்பிரதேசத்தில் மாயாவதி, கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் என்று உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம். திரிபுராவில் காங்கிரஸ், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வாக்குகளை கவர்ந்தே பாரதிய ஜனதா வலுவான கட்சியாக காலூன்றியது. இதே பார்முலாவை தான் தமிழ்நாட்டிலும் பாஜக கையிலெடுத்துள்ளது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வன், எடப்பாடி பழனிசாமி என்று ஆளுக்கு ஒருபுறம் நடித்துக்கொண்டிருக்கும் அதிமுக இனியாவது விழித்துக்கொள்ளுமா? அல்லது பாஜக நடைபோடும் பாதையில் தன்னையே பலிகடா ஆக்கிக்கொள்ளுமா? என்பதற்கு காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *