Share on Social Media


புதுச்சேரியில் ஜூலை 16-ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதையடுத்து அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டன பள்ளி நிர்வாகங்கள். ஆனாலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கல்வித்துறை மூலம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கவில்லை.

பள்ளிகள் தொடக்கம்

அதனால் முதல்வர் அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் பெற்றோர்களுக்கு எழுந்தது. அதேநேரத்தில், கொரோனா தொற்று பரவல் முழுமையாக குறையாததால் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்த அறிவிப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி, அ.தி.மு.க மாநில செயலளர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், “கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

puducherry Tamil News Spot
புதுச்சேரி அரசு

இதனால் நாளை 16-ம் தேதி பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் என்று அரசு முடிவெடுத்திருந்தது. ஆனால், புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று முழுமையாக குறையாத நிலை நிலவுகிறது. ஆசிரியர்கள் மற்றம் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி போட்டு கொள்கின்ற நிலையை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முதல்வரிடமும், என்னிடமும் கோரிக்கை வைதிருந்தனர்.

அதனால் இன்று கவர்னரை சந்தித்து பள்ளி, கல்லூரியை திறப்பது தொடர்பாக பேசினேன். தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரி திறப்பதை சற்று தள்ளி வைப்பது என்று அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா சூழ்நிலை மற்றும் பக்கத்து மாநிலங்களின் சூழ்நிலைகளை ஆராய்ந்து ஏதுவான சூழல் உருவாகின்ற நேரத்தில் மீண்டும் கவர்னர், முதல்வரிடம் கலந்தாலோசித்து பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தேதியை அறிவிப்போம். அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் என்று கல்வித்துறை இயக்குநரிடம் நானும், முதல்வரும் அறிவுறுத்தியுள்ளோம்.

Also Read: புதுச்சேரி: `ஜனவரி 4-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கும்!’ – அமைச்சர் கமலக்கண்ணன்

இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தரிடமும் பேசிவிட்டு, அனைத்து கல்லூரிகளுக்கும் ஆன்லைனில் தான் தேர்வு நடத்த வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளேன். தனியார் பள்ளிகள் முழு கட்டணம் வசூலிப்பதாக அரசிடம் புகார் வந்துள்ளது. இதுதொடர்பாக கண்காணிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. நாம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு அரசாங்கம். எனவே, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தான் நம்முடைய அரசை நடத்த முடியும்” என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *