Share on Social Media


கால்பதிக்க நினைக்கும் திரிணாமுல் காங்கிரஸ்!

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குள் திரிணாமுல் காங்கிரஸைத் தேசியக் கட்சியாக்கிவிட வேண்டுமென்ற முனைப்பில் மற்ற மாநிலங்களிலும் கால்பதிக்கும் முடிவிலிருக்கிறார் மம்தா. கடந்த சில தினங்களுக்கு முன்னர், கோவாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மம்தா, ஆளும் பா.ஜ.க-வுக்கு எதிரான பிரசாரங்களை முன்வைத்து வாக்கு சேகரித்தார். “பா.ஜ.க பலமாக மாறியதற்குக் காங்கிரஸ்தான் காரணம்” என்று காங்கிரஸையும் வெளுத்து வாங்கினார். கோவா முழுவதும் மம்தா பானர்ஜியின் பேனர்களும், போஸ்டர்களும் நிறைந்திருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன.

மேலும், திரிணாமுல் காங்கிரஸின் மூத்த தலைவர்களான மஹுவா மொய்த்ரா, டெரெக் ஓ பிரையன், சுகாதா ராய், பாபுல் சுப்ரியோ உள்ளிட்டோரும் கோவாவில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன. பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைகளோடு கோவாவில் களமிறங்கியிருக்கும் மம்தா, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்ட பிரபலங்களைக் கட்சியில் சேர்த்துவருகிறார். காங்கிரஸிலிருந்து வெளியேறிய தலைவர்களையும் கட்சியில் இணைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.

Mamata Banerjee

Mamata Banerjee
AP Photo/Bikas Das

கோவாவின் முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ (Luizinho Faleiro), காங்கிரஸிலிருந்து விலகி மம்தாவோடு கைகோர்த்திருக்கிறார். மாநிலக் கட்சிகளையும் தங்களோடு இணைத்துக்கொள்ளப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன. “பா.ஜ.க ஆளும் கோவாவில், காங்கிரஸைவிட அதிக இடங்களில் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டுவருகிறார் மம்தா. அப்படி காங்கிரஸை முந்திவிட்டால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் தவிர்க்க முடியாத சக்தியாகத் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்” என மம்தா நினைப்பதாகச் சொல்லப்படுகிறது.

முந்துவது யார்?

“கோவாவை ஆளும் பா.ஜ.க அரசு, பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துவந்தாலும், அங்கு வலுவான எதிர்க்கட்சி இல்லாதது அந்தக் கட்சிக்கு ப்ளஸ். மூத்த தலைவர்களை இழந்த காங்கிரஸ், மாநிலக் கட்சிகளோடு கூட்டணி அமைத்தாலும் வெற்றிபெறுவது கடினம். காரணம், ஆம் ஆத்மியும், திரிணாமுல் காங்கிரஸும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளைக் கணிசமாகப் பிரிக்கும் என்பதுதான். அதேபோல சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியும் வாக்குகளைப் பிரிக்கும். தலா மூன்று எம்.எல்.ஏ-க்களை கையில் வைத்திருக்கும் மாநிலக் கட்சிகளான மகாராஷ்டிரவாடி கோமன்தாக் கட்சியும், கோவா ஃபார்வட் கட்சியும் இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, உள்ளூர் செல்வாக்கு பெற்ற தலைவர்களைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.கதான் தேர்தல் ரேஸில் முந்தி நிற்கிறது. சமீபத்திய ஏபிபி சி-வோட்டர் கருத்துக் கணிப்பும் பா.ஜ.க-வுக்கு சாதகமான சூழல் இருப்பதாகவே சொல்லியிருக்கிறது. இருந்தும், தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலிருப்பதால் காட்சிகள் எப்படி வேண்டுமானாலும் மாறலாம்” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *