Share on Social Media


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான ‘பராசக்தி’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததோடு தமிழ் சினிமா வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்ற மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக நிலைத்து நின்றது. அதேபோல் பல வெற்றிப் படங்களில் நடித்தும் வித்தியாசமான படங்களில் நடிப்பவர் திறமை வாய்ந்த நடிகர் என்றெல்லாம் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றும் திரைவானில் மின்னிக்கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கார்த்தியின் அறிமுகப் படம் ‘பருத்திவீரன்’ பல காரணங்களுக்காகத் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ள திரைப்படம்.

மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு தரமான சினிமா, அரிதான வாழ்வியல் படைப்பு என்று ரசிகர்களால் மட்டுமல்லாமல் விமர்சகர்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட ‘பருத்திவீரன்’ 2007 பிப்ரவரி 23 அன்று வெளியானது. இன்றோடு அந்தப் படம் வெளியாகியும், சினிமா ரசிகர்களுக்கு கார்த்தி அறிமுகமாகியும் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

மாறுபட்ட காதல் படமான ‘மெளனம் பேசியதே’, உளவியல் அம்சங்களை உள்ளடக்கிய க்ரைம் த்ரில்லர் படமான ‘ராம்’ எனத் தன்னுடைய முதல் இரண்டு படங்களிலேயே ரசிகர்கள், விமர்சகர்களின் பெரும் மதிப்பைப் பெற்றுவிட்ட இயக்குநர் அமீர். ‘பருத்திவீரன்’ இயக்குநராக அவருடைய மூன்றாம் படம் மட்டுமல்ல ஒரு படைப்பாளியாக அவருடைய மாஸ்டர் பீஸ் என்றும் சொல்லலாம். இதற்குப் பிறகு அவர் இயக்கத்தில் ‘ஆதிபகவன்’ என்னும் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியாகியுள்ளது.

கிராமங்களின் இன்னொரு யதார்த்தம்

மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த தாய்க்கும், ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த தந்தைக்கும் பிறந்து பெற்றோரை இழந்து சித்தப்பாவிடம் வளர்ந்து அவருடன் சேர்ந்து சண்டித்தனம் செய்துகொண்டு திரியும் இளைஞன் தன் மாமன் மகளின் அப்பழுக்கற்ற காதலால் மதிக்கத்தக்க மனிதனாகக் கனிவதும் அந்தப் பெண்ணைப் பெற்றவர்கள், சுற்றத்தினரின் சாதிய மேட்டிமை உணர்வால் அந்தக் காதலுக்குக் கிடைக்கும் எதிர்ப்பும் அதனால் காதலர்களுக்கு என்ன ஆகிறது என்பதும்தான் ‘பருத்திவீரன்’ படத்தின் ஒன்லைன். இந்தக் கதைக்கு அனைத்து இயல்பான மனித உணர்வுகளையும் உள்ளடக்கிய உயிர்ப்பும் மிக்க திரைக்கதை அமைத்து மிக மிக யதார்த்தமான உண்மைக்கு மிக நெருக்கமான கிராமிய வாழ்வை தன் திரைமொழியால் பதிவு செய்திருப்பார் இயக்குநர் அமீர்.

மதுரையை ஒட்டிய கந்தக பூமியாக விளங்கும் கிராமங்களின் வெக்கையை உணர வைத்திருப்பார். கிராமங்கள் என்றால் விவசாயம், வயல்காடு, ஆற்றங்கரை, வெள்ளந்தியான மனிதர்கள், ஆலமரத்தடி பஞ்சாயத்து, திண்ணைப் பேச்சுகள் என்றே அதுவரை தமிழ் சினிமாவின் மிகப் பெரும்பாலான கிராமத்துப் படங்கள் காண்பித்துவந்தன. ஆனால், கிராமங்களின் இன்னொரு தவிர்க்க முடியாத யதார்த்தமான சாதி மேட்டிமை உணர்வை, தீண்டாமையை, சாதிய ஒடுக்குமுறைகளை, அதனால் எளிய மனிதர்களின் வாழ்வு தொடங்குவதற்கு முன்பே சிதைவுறுவதை எந்த சமரசமும் இன்றி பதிவு செய்தது என்பதனாலும்தான் ‘பருத்திவீரன்’ வரலாற்றின் மிக முக்கியமான திரைப்படமாகிறது.

1614070047343 Tamil News Spot

சாதனைபுரிந்த கலைஞர்கள்

மூத்த நடிகர் சிவகுமாரின் மகன், அப்போது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுவிட்ட நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரையில் தடம் பதித்தார். முதல் பட நடிகர் என்று சொன்னால் நம்ப முடியாத அளவு தோற்றம். உடை, கண்பார்வை, உடல் மொழி என அனைத்திலும், ஊதாரியாகத் திரியும், மற்றவர்களை மிரட்டிப் பணம் பறித்து அடாவடி செய்யும் கிராமத்து இளைஞனைக் கண்முன் நிறுத்தினார் கார்த்தி. அன்று முதல் இன்றுவரை நடிப்பில் பல்வேறு பரிமாணங்களைக் காட்டிவருகிறார்.

இயக்குநர், கதாநாயகனுக்கு அடுத்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் திரைவாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் என்று ‘பருத்திவீர’னை அடையாளப்படுத்தலாம். அதுவரை மேலைநாட்டுப் பாணியை ஒத்திருக்கும் இசைக்காக மட்டுமே அறியப்பட்டிருந்த யுவன் தன்னால் நாட்டாரியல் இசைக் கருவிகளில் கிராமத்து மண்மனம் வீசும் இசையைக் கச்சிதமாகவும் அற்புதமாகவும் அளிக்க முடியும் என்று பாடல்களில் மட்டுமல்லாமல் பின்னணி இசை மூலமாகவும் நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்தார்.

‘அறியாத வயசு’, ‘அய்யய்யோ’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு தமிழ் சினிமாவின் கிராமத்துக் காதல் பாடல் தொகுப்புகளில் என்றென்றும் தவிர்க்க முடியா இடம் பிடித்தன. ‘ஊரோரம் புளியமரம்’ பாடல் நாட்டாரியல் இசைக் கருவிகளை சினிமாவுக்கான எந்த மாற்றங்களையும் செய்யாமல் அப்படியே ஒலிக்கச் செய்த அரிதான பாடல். அந்தப் பாடலும் அந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் பாடல்களில் ஒன்று. படம் முழுக்கவே தமிழ் நாட்டாரியல் இசையை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தியதற்காக யுவன் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப்பெறுவார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அது நிகழவில்லை.

1614070065343 Tamil News Spot

ஆனால் ‘பருத்திவீரன்’ படத்துக்கும் படத்தில் பணியாற்றியவர்களுக்கும் தேசிய விருது உட்படப் பல விருதுகள் கிடைத்தன. படத்தொகுப்பாளர் ராஜா முகமது சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை வென்றார். ஒரு எளிய கிராமத்துப் பெண்ணின் சுயநலமற்ற காதலையும் உண்மையான காதல் கொடுக்கும் ஆவேசத்தையும் வைராக்கியத்தையும் வெகு இயல்பாகவும் சிறப்பாகவும் வெளிப்படுத்தியதற்காகப் படத்தின் நாயகி பிரியாமணி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

அரிதான விருதைப் பெற்ற நாயகி

1968-லிருந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. லட்சுமி ( ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’), ஷோபா ( ‘பசி’), சுஹாசினி (‘சிந்து பைரவி’), அர்ச்சனா (‘வீடு’) ஆகியோர் மட்டுமே பிரியாமணிக்கு முன்பு தமிழ்த் திரைப்படத்துக்காகத் தேசிய விருது வென்ற நடிகைகள். அபார நடிப்புத் திறமை கொண்ட இந்த நடிகைகளின் பட்டியலில் பிரியாமணியும் ஒருவரானார். அதுவும் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்தின் நாயகிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது என்பது பிரியாமணியின் சாதனையை மேலும் சிறப்பானதாக்குகிறது.

மேலும், தமிழக அரசு ‘பருத்திவீர’னை அந்த ஆண்டின் சிறந்த படமாகத் தேர்வு செய்து விருதளித்ததோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருதையும், கார்த்திக்கு சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசையும் அளித்தது.

இப்படிப் பல விருதுகளையும் அங்கீகாரங்களையும் விமர்சகர்களின் பாராட்டையும் ரசிக மனங்களில் நீங்கா இடத்தையும் பெற்றுவிட்ட ‘பருத்திவீரன்’ தமிழ் சினிமாவைத் தலைநிமிரச் செய்த அரிதான திரைப்படங்களில் ஒன்று என்று மிகையின்றிச் சொல்லலாம்.

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *