Share on Social Media

நாட்டில் 5 ஜி மொபைல் சோதனையை மேற்கொள்ள தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு, மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. 5 ஜி மொபைல் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜுஹி சாவ்லா தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு ஆன்லைன் மூலம் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த ஆனலைன் லிங்கை ஜூஹி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதன் மூலம், விசாரணை நடைபெற்ற போது குறுக்கிட்ட சிலர், ஜூஹி நடித்த படங்களின் பாடல்களைப் பாடி இடையூறு ஏற்படுத்தினர்.

அமைதியாக இருக்கும்படி நீதிபதி ஒருவரை அதட்டினால், மற்றொரு நபர் பாடலை பாடி கோர்ட் நடவடிக்கைக்கு தொடர் இடையூறு செய்தார். இதனால் நீதிபதி கடும் கோபம் அடைந்தார்.

இதற்கிடையே வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூஹியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இது தொடர்பாக தனது உத்தரவில் பேசிய நீதிபதி,“ விளம்பர நோக்கில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. ஜுஹி சாவ்லா சமூக வலைத்தளத்தில் விசாரணைக்கான லிங்கை பதிவிட்டிருக்கிறார். 3 பேர் விசாரணைக்கு இடையூறாக பாடல் பாடினர். இதில் இருந்தே இந்த மனு விளம்பரத்திற்காகத்தான் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிகிறது.” என்றார்.

கோர்ட் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தவர் யார் என்பதை டெல்லி போலீஸார் கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதி ஆர்.மிதா உத்தரவிட்டார். “மனுதாரர் 5 ஜி தொழில் நுட்பத்திற்கு எதிரான தனது கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் நேரடியாக கோர்ட்டிற்கு வந்துள்ளார். மனுதாரர் முதலில் அரசிடம் தங்களது தரப்பு கருத்தை தெரிவிக்கவேண்டும்.

ஜுஹி சாவ்லா

ஜுஹி சாவ்லா

அங்கு நியாயம் கிடைக்காத பட்சத்தில் கோர்ட்டுக்கு வரவேண்டும். மனுதாரரின் இச்செயல் சட்ட நடவடிக்கைகளை அவமதிப்பதாகும். எனவே மனுதாரருக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். மனுவை 33 பேர் சேர்ந்து தாக்கல் செய்து இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி சட்டத்தில் அதற்கு இடமில்லை என்றும் தெரிவித்தார்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 5 ஜி தொழில் நுட்பம் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரிவின் கீழ் வராது என்று தெரிவித்தார். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 5 ஜி தொழில் நுட்பம் அரசின் கொள்கை முடிவு என்றும் இது தவறானது கிடையாது என்றும் தெரிவித்தார். ஜுஹி சாவ்லா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தீபக் வாதிடுகையில், “5 ஜி தொழில் நுட்பம் அமல்படுத்தப்பட்டால் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் தாவரங்கள் மொபைல் போன் டவரில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் பாதிப்பு ஏற்படும். 5 ஜி தொழில் நுட்பத்தில் தற்போது இருக்கும் கதிர்வீச்சை விட 10 முதல் 100 மடங்கு அதிக அளவில் கதிர்வீச்சு இருக்கும்” என்று வாதிட்டார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *