Share on Social Media


பந்தலூர் : பந்தலூர் அருகே உள்ளது உப்பட்டி மேஸ்திரிகுன்னு. இந்த பகுதியில் கொரோனா பரிசோதனை செய்ததில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவர்களை சிகிச்சைக்காக அழைத்துபோது அவர்கள் வர மறுத்து வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்டது உப்பட்டி மேஸ்திரிகுன்னு. இங்கு 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மேஸ்திரிகுன்னு பகுதி கட்டுப்பாட்டு பகுதிக்குள் கொண்டு வரப்பட்டது. நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் லீனாசைமன் உத்தரவின்பேரில் அப்பகுதி முழுதும் கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதி முழுவதும் சுகாதாரத்துறையினர் தங்கள்  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் தினேஷ் மற்றும் சுகாதாரத்துறையினர் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் கொண்டு வந்தனர். ஆம்புலன்சை பார்த்த நோயாளிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவ பணியாளர்களிடம் ஆம்புலன்சில் ஏற முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது.

நோய் குறித்து நீண்ட நேரம் விளக்கி கூறியும் எந்த பயனும் இல்லை. இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை எச்சரிக்கை செய்தனர். இதனையடுத்து அவர்கள் ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் ஏற மறுத்து வாக்குவாதம் செய்த  வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *