Share on Social Media


ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரை விடுதலைசெய்ய, மாநில உரிமையை மத்திய அரசிடம் பறிகொடுத்த அ.தி.மு.க., அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இந்த விவகாரம் இன்னும் இழுத்தடிக்கப்படுகிறது. இந்த தவறை, தி.மு.க., அரசு சரி செய்ய வேண்டும்.
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

‘பத்தாண்டுகளுக்கு முன், தி.மு.க., அரசு தானே தமிழகத்தில் இருந்தது. அப்போது ஏன், இந்த ஏழு பேரை விடுவிக்கவில்லை; இதெல்லாம் அரசியலுங்க…’ என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.

குஜராத்தில் புயல் சேதத்தை பார்வையிடச் சென்ற பிரதமர் மோடி, 1,000 கோடி ரூபாயை அள்ளி வழங்கியுள்ளார். இதுபோல புயல் பாதித்த பிற மாநிலங்களை அவர் சுற்றிப் பார்க்கவில்லை. அந்த மாநிலங்களுக்கு இவ்வளவு அதிகமாக கொடுக்கவும் இல்லை.
– பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி

‘புயல் பிற மாநிலங்களில் சும்மா வீசி மட்டுமே சென்றது. குஜராத் கடற்கரை நகரங்களை புரட்டி போட்டு விட்டதே… அரசியல் காரணங்களுக்காக, நிவாரண நிதியை கொச்சைப்படுத்தாதீர்கள்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி அறிக்கை.

நகரங்களில் இருப்பவர்கள் கிராமங்களுக்கு செல்ல ஏதுவாக, அரசு மற்றும் தனியார் பஸ்களை, சனி, ஞாயிற்று கிழமைகளில் இயக்க, முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்திருந்தார். இதன் மூலம் கிராமங்களுக்கும் தொற்று பரவி விடும்.
– காங்., – எம்.பி., கார்த்தி சிதம்பரம்

‘உண்மை தான். அதிக கெடுபிடி இல்லாத அரசு என மக்கள் கருதுவதற்காக இவ்வாறு செய்கின்றனர். இதன் மூலம், கொரோனா பரவி விடும் என்பது உண்மை தான்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., – எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை.

பெருந்தொற்றில் தமிழகம் தள்ளாடிக் கொண்டிருக்கையில், முதல்வர் ஸ்டாலின் மிகவும் ஆடம்பரமாக, 50க்கும் மேற்பட்ட கார்கள் உடன் வர, நகர்வலம் வருகிறார். இதுவே, கொரோனா தொற்றை அதிகரிக்கும்.
– தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம்

‘முதல்வர் ஸ்டாலின் மட்டுமின்றி, அவர் மகன் உதயநிதியும் இப்படித் தான். அவர்களை சுற்றி எப்போதும், பத்து, இருபது பேர் நிற்கின்றனர். சமூக விலகல் என்பது அவர்களுக்கு கிடையாதோ என்ற எண்ணம் டாக்டர்களுக்கு வருகிறது…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் அறிக்கை.

கொரோனா தொற்று பரவி வருவதால், சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதனால், சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள் ஏழு பேரையும் விடுதலை செய்ய, ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்.
– இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன்

‘இதே, இ.பி.எஸ்., அரசு என்றால், அடிமை அரசு, எடுபிடி அரசு என வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லி இருப்பீர்கள். உங்கள் நட்பு அரசு என்பதால், பந்தை ஜனாதிபதியிடம் உருட்டி விடுகிறீர்களா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை.

எதிர்க்கட்சித் தலைவராகியுள்ள முன்னாள் முதல்வர், இ.பி.எஸ்.,சுக்கு, அரசு பங்களாவை ஒதுக்கியதில், முதல்வர் ஸ்டாலின் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார் என, தி.மு.க.,வினர் போற்றி புகழ்கின்றனர். அரை நுாற்றாண்டு காலமாக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்கள், சென்னையை சேர்ந்தவர்கள். அதனால், அந்த தேவை இல்லாமல் போயிற்று. ஸ்டாலின் நேர்மையாக இருந்தாலும், அவரின் உடன்பிறப்புகள் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறதே!
– தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம்

‘இதற்கு முன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்கள், பல பங்களாக்களை சொந்தமாக வைத்திருந்தனர். பல ஆண்டுகள் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்த, இ.பி.எஸ்.,சுக்கு அப்படி சேர்க்கத் தெரியவில்லையோ…’ என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் அறிக்கை.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *