Share on Social Media


இந்தியா – சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைக் கோட்டை நிர்ணயிப்பது தொடர்பான பிரச்னை நீடித்து வருகிறது. இருநாட்டு வீரர்களும் தங்கள் பாதுகாப்புப் பணிகளுக்காக வரையறுக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ளும்போது இருதரப்பினருக்கும் சண்டைகள் ஏற்படுவது வழக்கம். ஆனால், அந்தச் சண்டைகள் நடக்கும்போது ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது என்கிற உடன்பாடு பின்பற்றப்பட்டு வந்தது. எனவே, இருதரப்பினருக்குமான பிரச்னைகள் எப்போது வாக்குவாதமாகவே இருக்கும். ஆனால், கடந்த 2020-ம் ஆண்டு மே மாதத்தில் இரு தரப்பினருக்குமிடையே கை கலப்பு ஏற்பட்டதாகவும், இரும்பு கம்பிகள், கற்களைக் கொண்டு மாறி மாறி தாக்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்திய எல்லை

மோதலுக்குக் காரணம்!

கடந்த 2020 மே மாதத் தொடக்கத்தில் லடாக்கிலுள்ள இந்தியப் பகுதிகளான பாங்காங் ஏரியை ஓட்டிய பகுதியில் ஒரு சாலைப் பணியையும், கல்வான் பகுதியிலுள்ள தர்புக்-சையோக்-தௌலத் பெக் ஓல்டி (Darbuk-Shayok-Daulat Beg Oldie) சாலையை இணைக்கும் ஒரு சாலைப் பணியையும் தொடங்கியிருந்தது இந்திய அரசு. இந்த சாலைப் பணியை எதிர்த்த சீனா, எல்லையில் மே 5, 6-ம் தேதிகளில் அதிகளவில் ராணுவப் படைகளைக் குவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய-சீனா எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தின் விளைவாகத்தான் இரு தரப்பு ராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதாகச் சொல்லப்பட்டது.

மே மாதத்தில் கை கலப்பில் தொடங்கிய சண்டைகள், ஜூன் மாதத்தில் துப்பாக்கிச்சூடு வரை சென்றது. ஜூன் 15, 16-ம் தேதிகளில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய வீரர்கள் வீர மரணமடைந்துவிட்டனர் என்றும், பூஜ்ஜியத்துக்கும் குறைவான வெப்பநிலை காரணமாகப் படுகாயமடைந்திருந்த 17 இந்திய வீரர்களும் உயிரிழந்துவிட்டனர் என்றும் இந்திய ராணுவம் செய்தி வெளியிட்டது. சீன ராணுவம் தரப்பிலும் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்டது. எனினும், அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. சுமார் எட்டு மாதங்கள் கழித்து நான்கு வீரர்கள் மட்டும் இறந்துவிட்டதாகத் தகவல் தெரிவித்தது சீனா.

தொடர்ந்து, இருநாட்டு வெளியுறவுத் துறை அதிகாரிகள், ராணுவ தளபதிகள் ஆகியோரிடையே நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், இருநாடுகளுமே ஓரளவு படைகளைத் திரும்பப் பெற்றன. எல்லைப் பதற்றமும் சற்றே தணிந்தது. தற்போது மீண்டும் இந்திய-சீன எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

பதற்றம் நிலவக் காரணம் என்ன?

அண்மையில் சீன ராணுவம் திபெத் பகுதியிலிருந்த தங்களது வீரர்களை ஸிஜியாங் பகுதிக்கு மாற்றியிருக்கிறது. இந்தப் பகுதியானது இமய மலையை ஓட்டியிருக்கும் சர்ச்சைக்குரிய பகுதி. அதோடு போர் ஆயுதங்களையும், விமானங்களையும், பீரங்கிகளையும் எல்லைப் பகுதிகளில் சீனா நிறுத்தி வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், எல்லைப் பகுதியில் பீரங்கி குண்டுகளிலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் பதுங்கு குழிகள் அமைக்கும் பணியிலும் சீன ராணுவம் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாயின.

54302220 b65d 4ce8 aaf7 1a1072383290 Tamil News Spot
இந்தியா – சீனா

Also Read: இந்தியா – சீனா… எப்போது முடியும் எல்லைப்பிரச்னை?

இந்திய எல்லையில் மேற்கொண்டிருக்கும் அதிரடி நடவடிக்கைகள் குறித்து சீன வெளியுறவுத் துறையிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, “போதிய ஆதாரங்கள் இல்லாமல் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது” எனக் கூறியது.

இந்தநிலையில், கூடுதலாக சுமார் 50,000 ராணுவ வீரர்களை எல்லைப் பகுதிகளில் நிறுத்தியிருக்கிறது இந்தியா. அதோடு, சீன எல்லைகளில் மூன்று முக்கிய இடங்களில் இந்தியப் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. இதனால், மீண்டும் இந்திய-சீன எல்லையில் போர்ச் சூழல் நிலவி வருவதாகத் தெரிகிறது.

Offensive Defence!

ஏற்கெனவே இந்திய-சீன எல்லையில் சுமார் இரண்டு லட்சம் இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்திருக்கின்றன. இது கடந்த ஆண்டைவிட 40 சதவிகிதம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது. “முன்பெல்லாம் சீன ராணுவ வீரர்களின் ஊடுருவலைத் தடுப்பதற்காகத்தான் இந்திய எல்லையில் வீரர்கள் நிறுத்தப்படுவார்கள். ஆனால், தற்போது முன்னெச்சரிக்கையாக அங்கே வீரர்களைக் குவித்திருக்கிறது இந்திய ராணுவம். இதனை `Offensive Defence’ அதாவது எதிர்ப்புடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கை எனலாம்” என்கிறது ராணுவ வட்டாரங்கள்.

இந்தப் பதற்றமான சூழல் குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வாங்-வென்பின், “எல்லையில் நிலைமை சீராக உள்ளது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டுவருகிறோம். இரு நாட்டு ராணுவக் குவிப்பால் ஏற்பட்டிருக்கும் பதற்றம் தணிந்து, பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து, அமைதி நிலை திரும்பும்” என்றார்.

16c38459 f791 490b 900d 72155812e8ec Tamil News Spot
இந்திய – சீன எல்லை

முன்னாள் இந்திய ராணுவ உயரதிகாரியான டி.எஸ்.ஹூடா, “எல்லையில் அதிக வீரர்களைக் குவிக்கும்போது இரு தரப்பினரும் மிக ஆவேசமாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். அப்போது தற்செயலாக நிகழும் சிறு சம்பவம்கூட பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் எல்லைக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் மீறப்பட்டு இரு தரப்பினருக்குமிடையே மோதல்கள் ஏற்படக்கூட வாய்ப்புகள் இருக்கின்றன” என்று எச்சரித்திருக்கிறார்.

பலத்தை காட்ட நினைக்கும் சீனா!

இந்திய-சீன எல்லைப் பதற்றம் குறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் சிலர், “கடந்த சில நாள்களாகவே எல்லையில் வீரர்களைக் குவிப்பதோடு, சாலைகள் அமைப்பது, ஹெலிகாப்டர் தளங்கள் உருவாக்குவது, பதுங்கு குழிகள் தோண்டுவது என எல்லையின் உள்கட்டமைப்புகளைப் பலப்படுத்தும் நோக்கில் சீன செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊடகத்தில் சீன ராணுவத்தின் பலத்தை விளக்கும் கட்டுரைகளும், இந்தியாவை எச்சரிக்கும் வகையிலான செய்திகளையும் வெளியிட்டு வருகிறது சீனா. கடந்த சில காலமாக, இந்தியாவுக்கு எதிராக நிற்கும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டவும் தொடங்கியிருக்கிறது. சர்வதேச அரங்கில் பலமான நாடு எனத் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள நினைக்கிறது சீனா.

b2c44665 7899 4394 99cd 2593a5dc8764 Tamil News Spot
இந்தியா – சீனா மோதல்

Also Read: `வூஹான் ஆய்வகத்திலிருந்து பரவிய கொரோனா..?’ – அதிர வைக்கும் அமெரிக்க உளவுத்துறை அறிக்கை?!

சீனா மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளால், இந்தியாவோடு உளவியல் ரீதியான போரை அந்த நாடு நிகழ்த்தி வருகிறது என்றே சொல்லலாம். ஒருபக்கம் இந்தியாவோடு அமைதி பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டு, இன்னொரு பக்கம் எல்லையில் ராணுவப் படைகளையும், ஆயுதங்களைக் குவித்து வருகிறது . இதன் மூலம் உளவியல் ரீதியாக இந்தியாவை அச்சுறுத்த நினைக்கிறது சீனா.

சீனாவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கு இந்தியாவும் தனது ராணுவ பலத்தைக் காட்ட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அதனால்தான் எப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான வீரர்களையும், போர் விமானங்களையும் எல்லையில் நிறுத்தியிருக்கிறது இந்தியா. 45 ஆண்டுகளாக இந்திய-சீன எல்லையில் நிலவி வந்த அமைதி, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற மோதலால் தகர்க்கப்பட்டது. தற்போது ஓராண்டு கழித்து அங்கு மீண்டும் நிலவு வரும் பதற்றமான சூழல், மோதலில் முடியாமல் அமைதியில் முடியும் என நம்புவோம்” என்கிறார்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *