Share on Social Media


செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெருங்களத்தூரை அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில் தேர்தல் நடந்து முடிந்தது. இந்த ஊராட்சியில் 9-வது வார்டுக்கு பிரபல ரௌடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி விஜயலட்சுமி போட்டியிட்டார். இவரை எதிர்த்து விஜயலட்சுமியின் சகோதரி கெஜலட்சுமி மனுதாக்கல் செய்தார். வேட்பு மனுவை அவர் வாபஸ் பெற்றதால் போட்டியின்றி விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டார்.

வழக்கறிஞர் பால்கனகராஜிடன் விஜயலட்சுமி

இவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நேரத்தில் போலீஸார் நெருக்கடி கொடுப்பதாகக் கூறி டிஜிபி அலுவலகத்தில் மனுகொடுத்திருந்தார். கவுன்சிலரான பிறகு விஜயலட்சுமி, பதவி ஏற்க நேற்று சென்றார். அப்போது அங்குச் சென்ற போலீஸார், விழா மேடையிலிருந்து விஜயலட்சுமி இறங்கி வந்தபோது கஞ்சா வழக்கில் கைது செய்வதாகக் கூறி அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அதற்கு விஜயலட்சுமியின் ஆதரவாளர்கள், குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணைக்குப்பிறகு விஜயலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

Also Read: சென்னை: ரூ.10,000 மதிப்பிலான செல்போனுக்காக ரௌடி கொலை! – சிக்கிய நண்பர்

இந்தச் சூழலில் நெடுங்குன்றம் ஊராட்சியில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடந்தது. அதில் துணைத் தலைவராக கவுன்சிலர் விஜயலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே விஜயலட்சுமி தேர்வு செய்யப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

இதுகுறித்து பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநிலச் செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் கூறுகையில், “நெடுங்குன்றம் சூர்யாவும் அவரின் மனைவி விஜயலட்சுமியும் பா.ஜ.க.வில் இணைந்தனர். இந்தத் தேர்தலில் பா.ஜ.க.வின் ஆதரவோடு விஜயலட்சுமி போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் விஜயலட்சுமி கவுன்சிலரானார். இது ஒரு தரப்புக்கு பிடிக்கவில்லை. விஜயலட்சுமி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பல இடையூறுகளை ஒரு தரப்பு செய்தனர். அதையும் மீறிதான் விஜயலட்சுமி கவுன்சிலராகினார். அந்த காழ்ப்புணர்ச்சியால்தான் பதவி ஏற்றுவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கிய கவுன்சிலர் விஜயலட்சுமியை போலீஸார் கஞ்சா வழக்கில் கைது செய்திருக்கிறார்கள். இந்த வழக்கை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம்.

01863ea1 00a4 41c2 bee8 7620dd59489b Tamil News Spot
வழக்கறிஞர் அலெக்ஸிஸ் சுதாகர்

ஏற்கெனவே எஸ்.சி, எஸ்.டி ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், மாநில மகளிர் ஆணையத்துக்கு புகாரளித்திருக்கிறோம். செங்கல்பட்டு மாவட்டத்திலிருக்கும் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் தூண்டுதலின்பேரில்தான் இந்த கைது நடவடிக்கை நடந்திருக்கிறது. கவுன்சிலர் விஜயலட்சுமி கைது செய்யப்பட்ட தகவலையடுத்து பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், வழக்கறிஞர் அணியின் மாநில தலைவர் பால்கனகராஜ் ஆகியோர் என்னை கவுன்சிலர் விஜயலட்சுமிக்கு சட்டரீதியாக உதவும்படி தெரிவித்தனர். உடனடியாக கவுன்சிலர் விஜயலட்சுமிக்கு உதவ சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம். விஜயலட்சுமிமீது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருகின்றனர். அதனால்தான் அவரை கஞ்சா வழக்கில் விழா மேடையிலேயே கைது செய்திருக்கின்றனர். தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தனர். இருப்பினும் மக்கள், சக கவுன்சிலர்களின் ஆதரவு இருந்ததால் விஜயலட்சுமி, சிறையில் இருந்தாலும் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்” என்றார்.

பிரபல ரௌடி நெடுங்குன்றம் சூர்யாவும், அவரின் மனைவி கவுன்சிலர் விஜயலட்சுமியும் சிறையில் இருக்கின்றனர். இந்தச் சூழலில் விஜயலட்சுமியை சக கவுன்சிலர்கள் துணைதலைவராக தேர்வு செய்யப்பட்டதை பா.ஜ.க.வினர் கொண்டாடிவருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *