Share on Social Media


ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி: பா.ஜ., போல ஏதாவது ஒரு இடத்தில் நிவாரண உதவி வழங்கி வருபவர்கள் நாங்கள் இல்லை. நாள் முழுதும் நிவாரண உதவி வழங்கி வருகிறோம். ஸ்டாலின் தலைமையிலான எங்கள் அரசு நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறது.

நிவாரண உதவி வழங்குவது பெரிதல்ல. அத்தகைய நிலை ஏற்படாத வண்ணம், வௌ்ள நீர் வழிந்தோட ஏற்பாடு செய்வது தான் சிறந்த ஆட்சி. 50 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில், பணம் தான் தண்ணீராக செலவழிக்கப்பட்டதே தவிர, தண்ணீர் போக வழியில்லாமல் போய் விட்டதே!

பா.ஜ.,வில் அதிருப்தியுடன் இருக்கும் ராஜ்யசபா எம்.பி., சுப்ரமணியசாமி அறிக்கை: ‘பிரதமர் மோடியின் ஆட்சியால் ஈர்க்கப்பட்ட இந்தியர்கள் ஏராளமானோர் தாய்நாடு திரும்பி வருகின்றனர்’ என்கின்றனர். ஆனால், ஆறு லட்சம் பேர், இந்திய குடியுரிமை வேண்டாம் என நிராகரித்துள்ளனர்; அது ஏன்?

எங்கேயோ தோண்டி, துருவி புள்ளிவிபரத்தை எடுத்துள்ளீர்கள். தமிழகத்திலிருந்தோ அல்லது டில்லியிலிருந்தோ யாரும் நிச்சயம் குடியுரிமை வேண்டாம் என சொல்லி இருக்க மாட்டார்கள். எனவே, உங்கள் புள்ளிவிபரத்தால் எந்த பாதிப்பும் இல்லை!

தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் தலை சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது என, தமிழக அரசு பெருமிதம் தெரிவிக்கிறது. ஆனால், ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், சென்னையை வெள்ளத்தில் மிதக்க விட்டு விட்டனரே!

‘இனி எத்தகைய வௌ்ளம் வந்தாலும், துளி கூட பாதிப்பு இல்லாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்’ என, தமிழக அரசு அறிவித்துள்ளது; பார்ப்போம், அவர்களின் செயல்திறனை!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: ஆணவமாக செயல்படுவது என் இயல்பு இல்லை என்பது பலருக்கும் தெரியும். எமக்குள் தலைவன்- – தொண்டன் உறவில்லை; அண்ணன்- – தம்பி உறவே இருக்கிறது. இயக்கமே என் குடும்பம்! இயக்கத் தோழர்களே எனது உறவினர்கள். காய்ச்சல், தலைவலி என படுத்தாலும் இவர்களே எனக்கு துணை.

இருந்தாலும், தம்பிகள் அனைவரும் கழிவு நீரில் நிற்க, நீங்கள் அவர்கள் தோளை பிடித்து, சேரில் நடந்து, காருக்குள் குதித்தீர்களே… அப்போது, தம்பிகளை பற்றி நினைக்கவில்லையா?


இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை
: தமிழகத்தில் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் மழை நிவாரண பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பு தொடராமல் இருக்க நாம் முயற்சிக்க வேண்டும். பன்னாட்டு கட்டுமான தொழில் ஆலோசகர்களிடம் கலந்தாலோசித்து, தொலைநோக்கு பார்வையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும்.

பன்னாட்டு கட்டுமான வல்லுனர்கள் புதிய சட்டசபை வளாகம் போல அருமையான ஏற்பாடுகளை செய்வர். ஆனால், அதை மருத்துவமனையாக மாற்றியது போல, நம்மவர்கள் மாற்றி விடுவரே!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *