Share on Social Media


புதுச்சேரி : காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் பி.எச்டி., மாணவர் சேர்க்கை, இந்தாண்டு கைவிடப்பட்டுள்ள சூழ்நிலையில், அந்த சீட்டுகளின் எண்ணிக்கையை உயர் கல்வித் துறை அதிகரிக்க வேண்டும்.

புதுச்சேரி, லாஸ்பேட்டையில் உள்ள, தாகூர் கலைக் கல்லுாரி வளாகத்தில் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம் அமைந்துள்ளது. கடந்த 1989ல், துவங்கப்பட்ட இம்மையத்தில், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., உள்ளிட்ட 16 முதுகலை பட்டப் படிப்பு துறைகள் உள்ளன. மேலும், 8 பிரிவுகளில் பி.எச்டி., ஆய்வு பட்டங்களும் வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவு தேர்வு மூலம் பி.எச்டி., படிப்பிற்கு மாணவர் சேர்க்கை நடப்பது வழக்கம். இந்த கல்வியாண்டு காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் 16 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்ட சூழ்நிலையில் பி.எச்டி., மாணவர் சேர்க்கை மட்டும் கைவிடப்பட்டுள்ளது.நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான கல்லுாரிகளை உள்ளடக்கிய தர வரிசைப் பட்டியலில் 50வது இடத்தை பிடித்து முத்திரை பதித்த காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில்

இந்தாண்டு பி.எச்டி., மாணவர் சேர்க்கை இல்லை என்பது மாணவர்கள் மத்தியில் ஏமாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.காரணம் என்னபி.எச்டி., மாணவர் சேர்க்கைக்கு புதுச்சேரி பல்கலைக் கழகத்தினை சார்ந்து இருக்காமல், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையமே தனியாக நுழைவு தேர்வு நடத்தி சேர்க்க முடிவு செய்தது.இதன்படி புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு கடிதம் எழுதி ஒப்புதல் பெற்றது.

புதுச்சேரி பல்கலைக் கழகமும் நுழைவு தேர்வு பட்டியலில் இருந்து காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தினை நீக்கி விட்டு, மாணவர் சேர்க்கையை ஆரம்பித்து விட்டது.அதன் பிறகு, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், பல்கலைக்கழக மானிய குழு விதிமுறைகளை பார்க்கும்போது ஏற்கனவே உள்ள தன்னாட்சி நிறுவனங்களுக்கு இது பொருந்தாது என்பதும், அதன்படி பி.எச்டி., படிப்பு ஆரம்பிக்க முடியாது என்பதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், மீண்டும் கடிதம் எழுதி சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, தனது தவறினை பல்கலைக்கழகம் திருத்திக்கொண்டு, கடந்தாண்டு சேர்ந்த பி.எச்டி., மாணவர்களுக்கு மட்டும் பதிவு எண்ணை தற்போது வழங்கியுள்ளது.இருப்பினும் காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்திற்கு தனியாக இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்த முடியாது என கைவிரித்துவிட்டது.

அடுத்த கல்வியாண்டு நுழைவு தேர்வில் இந்த கல்வியாண்டு பி.எச்டி., காலியிடங்களை சேர்த்து நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் 16 துறைகள் இருந்தாலும், 8 துறைகளில் மட்டுமே தற்போது பி.எச்டி., படிப்பு உள்ளது. இதில் 160 சீட்டுகள் மட்டுமே உள்ளது. தற்போது 130 மாணவர்கள் பி.எச்.டியில் படித்து வருகின்றனர்.உதவி பேராசிரியர் நான்கு மாணவர்களுக்கும், இணை பேராசிரியர் 6 மாணவர்கள் வரை பி.எச்டிக்கு வழிகாட்ட முடியும். பாரதிதாசன் உள்பட பல்வேறு அரசு கல்லுாரிகளில் பி.எச்டி., முடித்த திறமை யான பேராசிரியர்கள் உள்ளனர்.

இவர்களை காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்திற்கு மாற்றினால், 16 துறைகளிலும் பி.எச்டி., ஆரம்பிக்க முடியும். இதன் மூலம் பி.எச்டி., சீட்டுகள் 320 ஆக உயர்ந்து, நிறைய மாணவர்களுக்கு பயில வாய்ப்பு கிடைக்கும்.காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், ஏற்கனவே ஆராய்ச்சி மையமாக புதுச்சேரி பல்கலைக் கழகம் அங்கீகரித்துள்ளதால், எந்த பிரச்னையும் இருக்காது. சுலபமாக பிற துறைகளில் பி.எச்டி., ஆரம்பிக்க அனுமதி கிடைக்கும். இது தொடர்பாக உயர்கல்வி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.