ஸ்ரீபெரும்புதுார்–படப்பையில் 26.64 கோடி ரூபாயில் பன்னடுக்கு மேம்பாலம் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை அடிக்கல் நாட்டியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வண்டலுார்- – வாலாஜாபாத் சாலையானது, சென்னை – – திருச்சி ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார் — மீஞ்சூர் வெளிவட்ட சாலை, சிங்கபெருமாள்கோவில் — ஸ்ரீபெரும்புதுார் சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது.ஒரகடம், வல்லம் பகுதியில் உள்ள ‘சிப்காட்’ தொழிற்பூங்காக்களில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், வண்டலுார்- – வாலாஜாபாத் சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதையடுத்து, நான்கு வழியான வண்டலுார் – வாலாஜாபாத் சாலையை ஆறு வழியாக விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.முதற்கட்டமாக வண்டலுார் முதல் ஒரகடம் வரை 150 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.வண்டலுார்- – வாலாஜாபாத் நெடுஞ்சாலையும், படப்பை- – புஷ்பகிரி சாலையும் இணையும் பகுதியில் படப்பை பஜார் உள்ளது. இங்குள்ள புஷ்பகிரி சாலை வழியே குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், முடிச்சூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், படப்பை பஜார் பகுதியில் நுழைந்து ஒரகடம், வண்டலுார், வாலாஜாபாத் பகுதிக்கு செல்கின்றன.அதேபோல் ஒரகடம், வண்டலுாரில் இருந்து வரும் வாகனங்கள், படப்பை வழியே புஷ்பகிரி சாலையில் நுழைந்து செல்கின்றன.இரண்டு சாலைகள் சந்திக்கும் படப்பை பஜாரில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.நெரிசலை குறைக்க படப்பையில் பை – -பாஸ் சாலை அமைக்க முதலில் திட்டமிடப்பட்டது.பை – பாஸ் சாலை செல்லும் இடத்தில் நீர்நிலைகள் உள்ளதாலும், தனியார் நிலத்தை கையகப்படுத்த பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்தாலும் அத்திட்டம் கைவிடப்பட்டது.இதையடுத்து வண்டலுார் – -வாலாஜாபாத் நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், படப்பை பஜாரில் நுழையாமல், மேம்பாலத்தின் மீது செல்லவும், அதன் கீழ், புஷ்பகிரி சாலையில் வாகனங்கள் செல்லவும் திட்டமிடப்பட்டது.அதற்காக 26.64 கோடி ரூபாய் மதிப்பில் பன்னடுக்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.இப்பாலம் அமைக்கும் பணியை செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் நடந்த விழாவில், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.காலை, மாலை நேரங்கள், முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் படப்பையில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இப்பாலம் அமைப்பதால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.தவிர, படப்பையில் மேம்பால பணி நிறைவுற்றவுடன், படப்பை, ஒரகடம் செல்லும் வாகனங்களுக்கு பேருதவியாக இருக்கும். ஒரகடம் தொழிற்பேட்டைக்கு, தென் தமிழகத்தில் மூலப் பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள், கால தாமதமின்றி விரைவாக செல்லும் என வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.பஸ் நிலையம் இணைப்புபடப்பை பன்னடுக்கு மேம்பாலம் 690.95 மீட்டர் நீளம், 17.20 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது.
வண்டலுாரில் இருந்து வாலாஜாபாதிற்கு நேராக செல்லவும், படப்பை பேருந்து நிலையத்தின் உள்ளே திரும்பி செல்லும் வகையிலும் பாலம் அமைய உள்ளது. 18 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்படும்.-நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர்விரைந்து முடிக்க வேண்டும்?பாலம் அமைக்கும் பணியால் படப்பையில் நிச்சயம் போக்குவரத்து நெரிசல் குறையும். புறவழிச்சாலைக்கு பதில், மேம்பாலம் அமைப்பதை வரவேற்கிறோம். கட்டுமானப் பணி நடக்கும் காலங்களில், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மேம்பாலத்தை கட்டி முடிக்க வேண்டும்.-படப்பை பொதுமக்கள்ஆதரவும், எதிர்ப்பும்மேம்பாலம் அமைவதால், படப்பை பஜாருக்குள் வரும் வாகனங்கள் நேரடியாக பாலத்தின் வழியாக படப்பையை தாண்டி சென்றுவிடும். இதனால், வணிகர்களுக்கு விற்பனை குறைந்துவிடும் என்பதால், பஜாரில் கடை வைத்துள்ள வியாபாரிகள், பாலத்திற்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர்
அதேநேரத்தில் பாலம் அமைவதால் சாலை விரிவாக்கம் நடக்காது. இதனால், சாலையோர கட்டடம், நிலம் வைத்துள்ள உரிமையாளர்கள், பாலத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கின்றனர்.பாலத்தின் அளவு வண்டலுார்- – வாலாஜாபாத் சாலை, படப்பை ஆதனச்சேரி துாய சகாய அன்னை சர்ச் அருகே பாலம் துவங்குகிறது. 690.95 மீட்டருக்கு நீளும் பாலம், படப்பை பஜார் பகுதியை கடந்து, சவுத் இந்தியன் வங்கி அருகே முடிகிறது. பாலத்தின் மீது நான்கு வழித்தடமும், பாலத்தின் கீழ் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைகிறது.