Share on Social Media


கொரோனா வைரசால் பேரழிவு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. காங்கிரசை சேர்ந்த முன்னாள் பிரதமர் நேரு ஆட்சியின் போதும் பெருந்தொற்றுகள் ஏற்பட்டன. பொது சுகாதார முறை மற்றும் விஞ்ஞான ரீதியில் அவற்றை அவர் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அந்த ஞானம், இப்போதைய பிரதமர் மோடியிடம் இல்லை.
– காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா

‘ஒருவரை போல மற்றொருவர் இல்லை என ஒப்பிடுவது தவறு. நேரு போல ராகுல் சிறப்பாக செயல்படுகிறாரா; கேள்விக்கு பதில் சொல்லுங்க…’ என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா அறிக்கை.

இது, பிரதமர் மோடியின் புதிய இந்தியா. தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கும் அரசு. ‘டுவிட்டர்’ போன்ற ஒரு சமூக ஊடகம் மட்டுமே, இந்தியாவின் சட்ட திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி சொல்ல எவ்வித தகுதியும் இல்லை.
– தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

‘டுவிட்டர் செயல்பாட்டில் மத்திய அரசுக்கு சந்தேகம் எழுந்துள்ளதால் தான், அந்த நிறுவனம் கோபத்தில், பேச்சுரிமை, கருத்துரிமை என கூப்பாடு போடுகிறதோ…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை.

நம் நாட்டில் செயல்படும் பெரும்பாலான அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும், பா.ஜ.,வின் அச்சுறுத்தலுக்கு பயந்து, அக்கட்சியின் ஊதுகுழலாக மாறி விட்டன. சமூக ஊடகங்கள் தான், கருத்து சுதந்திரத்திற்கு அடிப்படையாக உள்ளன. அவற்றின் வாயையும் மூட, மத்திய பா.ஜ., அரசு முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.
– விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

‘சமூக ஊடகங்கள் தான், சமூகத்திற்கு கேடு என, அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எப்போதும் போல நீங்கள், தேவையற்றவற்றை தேவை என்பது போல பதிவிடுகிறீர்கள்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.

லட்சத்தீவை, மத்திய அரசு தன் காலனியாக நடத்துகிறது. அங்கு வாழும், 70 ஆயிரம் மக்கள் மீது, மத்திய மோடி அரசு ஏன் இவ்வளவு வன்மம் கொண்டு செயல்படுகிறது என்பது தெரியவில்லை. அவர்களின் உணவு பழக்க வழக்கங்களில் தலையிட மத்திய அரசுக்கு உரிமையில்லை.
– காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்

‘பிற மாநில, யூனியன் பிரதேச விவகாரங்கள், பிரச்னைகளில் நீங்கள் மட்டும் ஒருதலைப்பட்சமாக தலையிடலாமா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை.

நாட்டின் முதல் பிரதமர் நேரு யார் என தெரியாத, பா.ஜ.,வினருக்கு எளிதாக புரியும்படி சொல்கிறேன். மோடி அழித்துக் கொண்டுள்ள அனைத்தையும் உருவாக்கிய மாபெரும் தலைவர் தான் நேரு.
– கரூர் காங்., பெண் எம்.பி., ஜோதிமணி

‘லஞ்சம், ஊழல், முறைகேடு, ஒரே கட்சி ஆட்சி, தனிநபர் துதிபாடல், கட்சியில் கோஷ்டி சண்டை போன்றவற்றை மோடி அழித்து விட்டார் என்பதற்காக இப்படி கோபப்படுகிறீர்களோ…’ என, கேட்கத் தோன்றும் வகையில், கரூர் காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை.

சென்னை, ஆழ்வார்பேட்டையில், 50 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத சிகிச்சை மையத்தை, எம்.எல்.ஏ., உதயநிதி திறந்து வைத்துள்ளார். சமூக இடைவெளி இல்லாமல், இப்படி ஒரு திறப்பு விழா நிகழ்வு, ஊரடங்கு சமயத்தில் தேவையா? திரும்பும் திசை எல்லாம், மரண ஓலம் கேட்கும் இன்றைய சூழலில், விழா வைத்து திறக்க வேண்டுமா?
– அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா

‘புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது என, மக்களுக்கு தெரிய வேண்டாமா… அதனால் தான், உப்பு பெறாத நிகழ்ச்சிகள் கூட விழாவாக நடத்தப்படுகின்றன…’ என, சொல்லத் தோன்றும் வகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை.

‘தனியார் நிறுவன உதவியுடன் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்படுத்துவோம்’ என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். எந்த தனியார் நிறுவனம்; ‘கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு’ தயாரிப்பதற்கான உரிமம் பெற்றுள்ளது; எத்தனை ஆண்டுகள் அனுபவம் உள்ள நிறுவனம் போன்ற விபரங்களை வெளியிடுங்கள்.
– தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

‘முதல்வருக்கு அறிக்கை எழுதிக் கொடுத்தவர்கள் எல்லா விபரங்களையுமா எழுதிக் கொடுப்பர்… கொஞ்சம், ‘வெயிட்’ பண்ணுங்க…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.

பள்ளிகளில் பாலியல் பலாத்காரங்கள் தொடராமல் இருக்க, ஆசிரியர்கள் மற்றும் இதர பள்ளி ஊழியர்கள் மத்தியில் பாலின நிகர்நிலை பயிற்சிகளை நடத்த வேண்டும். ‘போக்சோ’ சட்டப் பிரிவுகள் குறித்தும் அவர்களுக்கு போதிக்க வேண்டும். பள்ளி நிர்வாக தரப்பினரும், அத்தகைய பயிற்சிகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
– மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்

‘இது தான் நியாயமானது. யாரோ ஒருவர் அத்துமீறினார் என்பதற்காக, பள்ளியை மூடுவோம் என சொல்வது எந்த வகையிலும் நியாயமில்லாதது. கம்யூ.,க்கள் அவ்வப்போது கொடி பிடித்தாலும், நியாயமாகத் தான் சில நேரங்களில் பேசுகின்றனர்…’ என, பாராட்ட தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடியின் அருமையான ஆட்சியில், ஆறுகளில் பாலாறும், தேனாறும் ஓடுவதுடன், அவ்வப்போது பிணங்களும் மிதக்கின்றன. இதை எந்த ஊடகங்களும் கண்டிக்கவில்லை.
– முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா

‘பாலாறும், தேனாறும் எப்படி ஓடாதோ அதுபோல, ஆறுகளில் பிணங்களும் மிதப்பதில்லை. கங்கை மற்றும் சரயு நதியில் சிலர் போட்டுச் சென்றவற்றை, மத்திய அரசே செய்தது போல சொல்வது சரி தானா…’ என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ஜ.,விலிருந்து வெளியேறியுள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *