அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா சார்பில் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆர்ட்டிமிஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், 2025-ல்மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணிகளில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். நிலவு மட்டுமின்றி செவ்வாய்க் கோள், விண்வெளி நிலையம் ஆகியவற்றுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தையும் நாசா முன்னெடுத்து வருகிறது.
இதனிடையே, இத்திட்டத்தின் கீழ் நிலவுக்கு செல்ல விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என நாசா அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இருந்து சுமார் 12,000 விண்வெளி வீரர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில், அதிலிருந்து 10 பேரை நாசா தேர்வு செய்துள்ளது. அவர்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் அனில் மேனனும் ஒருவர். அமெரிக்க விமானப்படையில் கர்னலாக பணிபுரியும் இவர், அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’திட்டத்தில் முதல் மருத்துவராகவும் பணியாற்றி வந்தார்.