Share on Social Media


கோவை;ஊரடங்கு பாதிப்பில் இருந்து, இன்னும் மக்கள் மீளாத நிலையில், நிலுவை வரியுடன், அடுத்த ஆறு மாதத்துக்கான சொத்து வரியை இப்போதே செலுத்தச் சொல்லி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தொழில்துறையினர் உட்பட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியே பிரதான வருவாய்; 5.20 லட்சம் வரி விதிப்புதாரர்கள் இருக்கின்றனர். ஏப்., – செப்., மற்றும் அக்., – மார்ச் என, ஆறு மாதத்துக்கு ஒருமுறை சொத்து வரி வசூலிக்கப்படும்.கடந்த, 2020ல் கொரோனா தொற்று முதல் அலை பரவிய போது, ஏப்., முதல் செப்., வரை ஆறு மாதம் பொதுமக்கள், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகினர்.வேலையிழப்பு, பொருளாதார இழப்பை சந்தித்தனர். இருந்தாலும், சொத்து வரி செலுத்த, கோவை மக்கள் தயங்கவில்லை. 2020-2021ம் நிதியாண்டில், ரூ.172.99 கோடி சொத்து வரி செலுத்தினர்.
கொரோனா இரண்டாவது அலை, மக்களை புரட்டிப் போட்டு விட்டது. ஒவ்வொரு குடும்பத்தினரும், வெவ்வேறு விதமான பாதிப்புகளை சந்தித்தனர்.மருத்துவ செலவு, உயிரிழப்பு, நோய் தாக்கம், தொழில் முடக்கம், வருவாய் இழப்பு, வங்கி கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி என, பல்வேறு இன்னல்களை, மக்கள் சந்தித்து வருகின்றனர்.பொருளாதார ரீதியாக இன்னும் மீளவில்லை. இதையறிந்தே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.4,000 நிவாரண உதவியை, தமிழக அரசு வழங்கியது.
மாநகராட்சி நோட்டீஸ்!
இத்தகைய இக்கட்டான சூழலில், சொத்து வரி செலுத்தச் சொல்லி, வரி விதிப்புதாரர்களின் மொபைல் போனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்புவது மட்டுமின்றி, மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.இதில், 2021-2022 மார்ச் வரையிலான (செப்., – மார்ச்) அடுத்த ஆறு மாதத்துக்கான சொத்து வரியை, இப்போது செலுத்தச் சொல்லி, அனுப்பியுள்ள நோட்டீஸ், தொழில்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நோட்டீஸில், ‘இறுதி அறிவிப்பு கிடைத்த மூன்று நாட்களுக்குள் தொகை செலுத்தத் தவறினால், குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும். அல்லது மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நிலுவை தொகை முழுவதும் வசூலிக்கப்படும் என இறுதியாக அறிவிக்கப்படுகிறது’ என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொழில்துறையினர் கூறுகையில், ‘ஊரடங்கு தளர்த்தப்பட்டு கொஞ்ச நாட்களே ஆகின்றன. கொரோனா தொற்று பரவலால், முடங்கியுள்ள தொழில்துறை மீண்டு வர, இன்னும் சில மாதங்களாகும்.வரி செலுத்த அவகாசம் கோரி வரும் சூழலில், நிலுவை வரியுடன் அடுத்த ஆறு மாதத்துக்கான வரியையும் செலுத்தச் சொல்லி, 3 நாட்கள் கெடு விதித்து நோட்டீஸ் வினியோகிப்பது, தொழில்துறையை நசுக்குவதற்கு சமம்.நோட்டீஸ் அனுப்புவதை, மாநகராட்சி நிறுத்த வேண்டும். கொரோனா முதல் அலை பரவியபோது, வரி செலுத்த மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டது.
அதேபோல், இப்போதும் அவகாசம் வழங்க வேண்டும். குடிநீர் இணைப்பு துண்டிப்பு, ஜப்தி போன்ற கடுமையான நடவடிக்கையில் இறங்கக்கூடாது’ என்றனர்.மறைப்பது ஏன்?இதுதொடர்பாக, உதவி கமிஷனர் (வருவாய்) அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ஆகிய இருவரிடம் கேட்டபோது, ‘நோட்டீஸ் வழங்கவில்லை’ என்றனர். ஆனால், மாநகராட்சியில் இருந்து அனுப்பிய நோட்டீஸ் பிரதியை, தொழில்துறையினர் நேற்று வெளியிட்டதால், மாநகராட்சி வருவாய் பிரிவினரால் மறைக்க முடியவில்லை.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *