Share on Social Media


புதுச்சேரியில், பா.ஜ.,விடம் சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை என்ற நெருக்கடியை, என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுத்த, பா.ஜ., முயல்கிறது. வித்தைகள் மூலம் விபரீத அரசியலை அரங்கேற்ற துடிக்கின்றனர். ரங்கசாமி, மவுனசாமியாக இருந்து, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்க போகிறாரா என்பது, ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக உள்ளது.

– திராவிடர் கழக தலைவர் வீரமணி

‘என்.ஆர்.காங்., தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி, விபரம் தெரிந்தவர்; அவர் பார்த்துக் கொள்வார். நாம், நம் கழகத்திலிருந்து, யாராவது சாமி கும்பிட கோவிலுக்கு போக விடாமல் பார்த்துக் கொள்வது தான் நல்லது…’ என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில், பல வகையான தளர்வுகள் அறிவித்து, அவற்றை அரசு அமல்படுத்தி வருகிறது. கேபிள ‘டிவி’ ஆப்பரேட்டர்கள், முக்கிய பங்கு வகிக்கின்றனர். கேபிள்கள் பழுதாகும் போது, அவற்றை சீர்செய்ய செல்லும் பணியாளர்களுக்கு அரசு கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அவர்களுக்கு உரிய அனுமதி அட்டையை வழங்கி, பணிகள் தடைபடாமல் காக்க வேண்டும்.
– த.மா.கா., தலைவர் வாசன்

‘வீட்டில் நீண்ட நேரம், ‘டிவி’ பார்ப்பதால் வந்த வினையோ…’ என, கிண்டலாக கேட்கத் துாண்டும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை.

கொரோனாவால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
-த.மா.கா., மகளிர் அணி தலைவர் ராணி கிருஷ்ணன்

‘உங்கள் கட்சியில் மகளிரணி இருக்கிறது என்பதே, தமிழக அரசின் இந்த அறிவிப்பு வந்த பிறகு தான் தெரிய வருகிறது. எப்படியோ, இதுபோல பல பிரிவுகளும் வெளியே தெரிய, மாநிலத்தின் எல்லா தரப்பினருக்கும் சலுகைகள் கிடைக்க வேண்டும்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., மகளிர் அணி தலைவர் ராணி கிருஷ்ணன் அறிக்கை.

மத்திய அரசின் தவறான கொள்கைகளால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஏற்கனவே தள்ளாடி வந்தன. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் சம்மட்டி அடி விழுந்து விட்டது. எனவே குறைந்தபட்சம், மின்சார கட்டணத்தையாவது ரத்து செய்ய வேண்டும்.
– நடிகர் கமல்

‘மின்சார கட்டணத்தை ரத்து செய்து, கடை வாடகைக்கும், சில மாதங்கள் விலக்கு அளித்தால், இந்த தொழில் துறையினர் தப்பிப்பர்…’ என, கூறத் தோன்றும் வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல் அறிக்கை.

ஊரடங்கை நீட்டித்தால், ஏழை, எளிய மக்கள் பாதிப்படைய கூடிய வாய்ப்புள்ளது. உணவு பிரச்னை வரும். வேலைவாய்ப்புகள் இல்லாததால், முதியவர்கள், தினக்கூலி தொழிலாளர்களுக்கு, ஊரடங்கை அரசு நீட்டிக்கும் பட்சத்தில், உணவு வழங்க கூடிய தேவை இருக்கும்.
– கரூர் காங்., – எம்.பி., ஜோதிமணி

‘நீங்கள் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல், ரேஷன் கடைகளை இன்னும் முழுதுமாக திறந்து விட்டு விடப் போகின்றனர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், கரூர் காங்., – எம்.பி., ஜோதிமணி பேட்டி.

தமிழக முதல்வர் ஸ்டாலின் பேட்டி கொடுக்கும் போதும், பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதும், அவரும், அவருடன் இருப்பவர்களும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அதை கடைப்பிடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.
– இந்து முன்னணி தலைவர் ஜெயகுமார்

‘எதற்கெடுத்தாலும் விழா; எல்லா இடங்களிலும் கூட்டம்; சமூக விலகலே கடைப்பிடிப்பதில்லை. இனிமேலாவது செய்தால் சரி தான்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், இந்து முன்னணி தலைவர் ஜெயகுமார் அறிக்கை.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *