Share on Social Media


ராஜஸ்தானில் 2022-ம் ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கு, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், விலைவாசி உயர்வு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவற்றில் பா.ஜ.க அரசு மெத்தனம் காட்டுவதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டிசம்பர் 12-ம் தேதி அன்று பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணிக்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விலைவாசி உயர்வு குறித்த தன் கருத்துகளை மக்கள் மத்தியில் பகிர்ந்துகொண்டார். கூடவே, இந்து, இந்துத்துவவாதிகள் பற்றி ராகுல் காந்தி பேசியது, அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.

ராகுல் காந்தி

ஜெய்ப்பூரில் பேசிய ராகுல் காந்தி, “விலைவாசி உயர்வு குறித்து யார் கேள்வி கேட்டாலும், அவர்களை இந்து மதத்துக்கு எதிரானவர்களைப் போல பா.ஜ.க சித்தரித்துவருகிறது. இந்தத் தருணத்தில் `நானும் ஒரு இந்துதான்’ என்பதைச் சொல்லிக் கொள்கிறேன். இங்கு என்னுடன் நிற்கும் பலரும் இந்துக்கள்தான். ஆனால், நாங்கள் இந்துத்துவவாதிகள் அல்ல. இந்துவுக்கும், இந்துத்துவவாதிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இந்து என்பவர் மற்ற மதங்களை மதிக்கத் தெரிந்தவர். யாரையும் அச்சுறுத்தமாட்டார். எந்த இந்துமத புத்தகங்களிலாவது முஸ்லிம்களையும், சீக்கியர்களையும் தாக்கச் சொல்லிக் கூறப்பட்டிருக்கிறதா? நான் பல இந்து உபநிடதங்களைப் படித்திருக்கிறேன். அப்படி எந்த நூலிலும் குறிப்பிடவில்லை!” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “உண்மையைத் தேடி சத்தியாகிரகம் நடத்திய மகாத்மா காந்தி ஒரு இந்து. அவரைச் சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு இந்துத்துவவாதி. இந்து என்பவர் உண்மையைத் தேடுபவர். இந்துத்துவவாதி என்பவர் அதிகாரத்தைத் தேடுபவர். இந்துத்துவவாதிகள், அதிகாரத்துக்காக எதையும் செய்வார்கள். என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். மகாத்மா காந்தி, தன் வாழ்நாள் முழுவதும் உண்மையைப் புரிந்துகொள்வதில் செலவிட்டார். இறுதியில், அவரை இந்துத்துவவாதி ஒருவர் மூன்று முறை நெஞ்சில் சுட்டுக் கொன்றார்” என்றும் பேசியிருந்தார் ராகுல் காந்தி.

இவ்வாறு ராகுல் காந்தி பேசியது பா.ஜ.க-வினரிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகளைச் சம்பாதித்திருக்கிறது. ராகுலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய மேற்கு வங்க மாநில பா.ஜ.க தலைவர் மஜும்தார், “ராகுல் தன்னை இந்து என அழைத்துக்கொண்டதே நாங்கள் செய்த சாதனைதான். ஆனால், அவர் தேர்தல் வரும்போது மட்டுமே இந்துவாக இருப்பவர். தேர்தல் சமயங்களில் மட்டும் கோயில்களுக்குச் சுற்றுலா செல்வார். தேர்தல் முடிந்துவிட்டால் பீச் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்வார். இந்து என்பதை மறந்துவிடுவார்” என்று பேசியிருக்கிறார்.

இந்து தேசியவாத அமைப்பான விஷ்வ இந்து பரிஷத், “இந்திய அரசியல் தலைவர்களில், ராகுல் காந்தி ஒரு மாயை. அவருக்கு இந்து பற்றியோ, இந்துத்துவம் பற்றியோ ஒன்றும் புரியவில்லை. மகாத்மா காந்தி பற்றி அவர் பேசியிருக்கிறார். ஆனால் காந்தியை, ராகுல் வாசித்ததில்லை போல. காந்தி ஜி ஸ்வராஜ்யம் என்றால் ராம ராஜ்ஜியம் என்று கூறியிருக்கிறார்” என்று கருத்துத் தெரிவித்திருக்கிறது.

2cd80efa 6c81 4572 89df 1f1546c87199 Tamil News Spot
ஒவைசி

Also Read: பி.ஜே.பி. பிரசாரத்தை முறியடித்து வெற்றி… மிதமான இந்துத்துவ வாதியா கெஜ்ரிவால்?

ராகுல் காந்தி, `இந்து ராஜ்ஜியத்தைக் கொண்டுவர விரும்புகிறோம்’ என்று பேசியதற்குத் தன் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் ஒவைசி. “ராகுலும், காங்கிரஸும்தான் இந்தத்துவாவுக்கு உரமிட்டனர். இப்போது பெரும்பான்மை வாதத்தை அறுவடை செய்ய முயல்கின்றனர். மீண்டும் இந்துக்களை ஆட்சிக்குக் கொண்டு வருவதுதான் மதச்சார்பற்ற செயல்திட்டமா? இந்தியா, இந்துக்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து பாரத தேசத்தவர்களுக்கும் சொந்தமானது. அனைத்து மதத்தினருக்கும், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் சொந்தமானதுதான் இந்தியா!” என்றிருக்கிறார் ஒவைசி.

காங்கிரஸுக்கு கைகொடுக்குமா ராகுலின் பேச்சு?

இந்த நிலையில், `ராகுல் காந்தி இந்து, இந்துத்துவா பற்றிப் பேசியதன் காரணம் என்ன… அது தேசிய அரசியலில் காங்கிரஸுக்குக் கைகொடுக்குமா?’ என்கிற விவாதங்கள் கிளம்பியிருக்கின்றன. “இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ், தற்போது மூன்று மாநிலங்களில் மட்டுமே ஆட்சியிலிருக்கிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சிகளுடன் கூட்டணியிலிருக்கிறது. 2014-ம் ஆண்டு, மத்தியில் பா.ஜ.க ஆட்சியமைத்த பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் வலுவிழக்கத் தொடங்கிவிட்டது காங்கிரஸ். காங்கிரஸுக்கு எப்போதும் கைகொடுத்துவந்த சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை, மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகள் பலவும் பிரித்துவிட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளைக் கணிசமாகக் கவர்ந்துவருகிறது பா.ஜ.க. வலுவிழந்து கிடக்கும் காங்கிரஸை மீட்டெடுக்க நாட்டிலிருக்கும் பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. இந்த நிலையில்தான், இந்துக்களின் வாக்குகளைக் காங்கிரஸ் பக்கம் இழுக்க, ராகுல் காந்தி இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் எனத் தோன்றுகிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

p36c Tamil News Spot
சோனியா காந்தி, ராகுல் காந்தி

Also Read: `மம்தாவை இயக்கும் மோடி’ – மோதலைத் தொடங்கிய திரிணாமுல் காங்., காங்கிரஸ் – பலன் பாஜக-வுக்கா?!

மேலும், “மதச்சார்பின்மை பற்றிப் பேசிவந்த ராகுல், `இந்தியாவில், இந்து ராஜ்ஜியத்தைக் கொண்டுவர விரும்புகிறோம்’ எனப் பேசியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளைத் தொடர்ந்து எதிர்த்துவந்தவர், இன்று `நானும் ஒரு இந்துதான்’ என்றிருக்கிறார். `பா.ஜ.க, மதத்தை அரசியலோடு கலக்கிறது’ என விமர்சித்தவர், இன்று தானே மதத்தைக் கையிலெடுத்திருக்கிறார். அந்த நிலைக்குக் காங்கிரஸ் தள்ளப்பட்டிருக்கிறது. ராகுலின் பேச்சு இந்துக்களைக் கவருமா என்பது தெரியவில்லை. ஆனால், இந்தியாவின் மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை இது பெரிதும் கவர்ந்திருக்காது. எனவே இதன் மூலம், தன்னகத்தே எஞ்சியிருக்கும் சிறுபான்மை வாக்காளர்களை, காங்கிரஸ் கட்சி இழக்கக்கூட வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. அதோடு 2024 நாடாளுமன்றத் தேர்தலில், தங்களோடு கூட்டணி வைக்கக் காத்திருக்கும் மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவையும் காங்கிரஸ் இழக்கக்கூடும்” என்கிறார்கள் தேசிய அரசியலை உற்றுநோக்குபவர்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *