Share on Social Media


திரையில் சிறப்பாக நடித்த சிவாஜியால், நிஜ வாழ்க்கையில் அத்தனை சிறப்பாக நடிக்க முடியவில்லையோ… என்னவோ. அவர் சென்ற பல திசைகள் எங்கிலும் துரோகமும் ஏமாற்றமுமே பரிசாக கிடைத்தது.

1971-ம் ஆண்டு முதல் முதல் 1981-ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார் சிவாஜி. ‘’நீங்கள்தான் தலைவராக இருக்க வேண்டும்’’ என்ற பலர் கேட்டுக் கொண்டதாலும், எம்.ஜி.ஆர் விரும்பியதாலும் இந்தப் பொறுப்பை அவர் ஒப்புக் கொண்டார். இவர் தலைவராக இருந்த சமயத்தில்தான் சங்கத்திற்கு கட்டடம் கட்டப்பட்டது. வங்கியில் கடன் வாங்கியது போதாதென்று, சிவாஜியின் தலைமையில் தமிழ்நாடு முழுக்க பல நாடகங்கள் போடப்பட்டு நிதி சேர்க்கப்பட்டது.

இந்தக் கட்டடத்திற்காக தமிழக அரசு கடன் தரும் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் கிடைத்தது கொஞ்சம்தான். சிவாஜி தலைவராக இருந்த போது பொருளாளராக இருந்தவர் விகே ராமசாமி. அவர் தனது சுயசரிதையில்சொல்லியிருப்பது இதுதான்.

எம்ஜிஆர் - சிவாஜி

எம்ஜிஆர் – சிவாஜி

‘’அரசு தரவிருக்கும் கடனுக்காக நடையாக நடந்தோம். ஆனால் ‘நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். மீதியை அடுத்த நிர்வாகம் வந்து அடைத்துக் கொள்ளட்டுமே’’ என்று சொன்னார் எம்.ஜி.ஆர். ஏனெனில் அப்போது அரசியலில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் எதிரும் புதிருமாக நின்றார்கள். “அப்பனுக்கு சாராயம்… பிள்ளைக்கு சத்துணவா?” என்று அரசியல் கூட்டங்களில் ஆவேசமாகப் பேசினார் சிவாஜி.

இதை தனிப்பட்ட அவமதிப்பாக எடுத்துக் கொண்ட எம்.ஜி.ஆர், தன்னுடைய சதுரங்க ஆட்டத்தை நடிகர் சங்க கடன் விவகாரத்தில் காண்பித்தார். இதனால் அரசு கடன் கிடைக்காமல், வங்கியில் வாங்கப்பட்ட கடன், வட்டி ஏறி பெரும் நிதிச்சுமையில் சங்கம் தள்ளாடியது. இதனால் மனம் வெறுத்துப் போன சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி ஆகியோர் தங்களின் நடிகர் சங்க பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர். அன்றிலிருந்து நடிகர் சங்கத்தின் பக்கமே சிவாஜி சென்றதில்லை. ஏன் அவர் இறந்த போது கூட அவரது உடல் நடிகர் சங்க கட்டடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவில்லை.

அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி, தன்னுடைய போட்டியாளர்களின் அசைவுகளை தொடர்ந்து கண்காணித்து அந்தச் சதுரங்க ஆட்டத்திற்கேற்ப காய்களை நகர்த்துவதில் வல்லவராக இருந்தார் எம்.ஜி.ஆர். இதை அவரது ஆளுமைத்திறனின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும். ஆனால் சிவாஜியிடம் இந்தச் சாமர்த்தியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்ஜிஆர் - சிவாஜி

எம்ஜிஆர் – சிவாஜி

சிவாஜி நடித்து சூப்பர் ஹிட் ஆன ‘புதிய பறவை’ திரைப்படத்திற்கான முன் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போது நாளிதழில் முழுப்பக்க விளம்பரம் வந்திருந்தது. அதில் ‘இயக்கம்: தாதா மிராசி’ என்பதோடு கூடுதலாக ‘இயக்கம் மேற்பார்வை: சிவாஜி கணேசன்’ என்று போட்டிருந்தது. பார்த்தார் எம்.ஜி.ஆர். அடுத்த நாள் அதே நாளிதழில் இன்னொரு முழுப்பக்க விளம்பரம் வந்தது. எம்.ஜி.ஆர் நடித்து வெளிவரவிருக்கும் ‘தாழம்பூ’ திரைப்பட விளம்பரத்தில், ‘இயக்கம்: ராமதாஸ்’ என்பதோடு கூடுதலாக, ‘இயக்கம் மேற்பார்வை: எம்.ஜி.ஆர்’ என்று பிரசுரம் ஆகியிருந்தது.

இது தனக்கான செக்மேட் என்பதைப் புரிந்து கொண்ட சிவாஜி, அடுத்த விளம்பரத்திலிருந்து மேற்பார்வை என்கிற விஷயத்தை எடுத்து விட, எம்.ஜி,ஆரும் தனது குறும்பை கைவிட்டார். தனது போட்டியாளர்களை மிகவும் சாமர்த்தியாக எம்.ஜி.ஆர் எதிர்கொள்ளும் விஷயத்திற்கு இந்த விஷயம் ஓர் உதாரணம்.

ஆனால் இது போன்ற போட்டிகள், சர்ச்சைகள் போன்றவற்றைத் தாண்டி எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது. தான் நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் இருந்த சமயத்தில் தன்னுடைய ராமாபுரம் வீட்டிற்கு சிவாஜியை வரச் சொல்லியிருந்ததாகவும் ஒரு முக்கியமான பொறுப்பை அவரிடம் பகிரவிருந்ததாகவும் அதற்குள் இயற்கை முந்திக் கொண்டு எம்.ஜி.ஆரை அழைத்துச் சென்று விட்டதாகவும் தனது சுயசரிதை நூலில் சிவாஜி தெரிவிக்கிறார்.

இன்று இந்த ஆளுமைகள் இருவருமே உயிருடன் இல்லை. ஆனால், அவர்கள் தொடர்பான ரகசியங்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *