Share on Social Media


இன்னொன்று, ‘MGR: The Man and The Myth’. தமிழக காவல்துறை அதிகாரியாக இருந்த K.மோகன்தாஸ் எழுதிய நூல். எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியின் போது தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்தவர் மோகன்தாஸ். எம்.ஜி.ஆரின் அரசியல் பயண வாழ்க்கையில் அவரது நிழலாக அறியப்பட்டவர். எம்.ஜி.ஆர் எடுத்த பல அரசியல் முடிவுகளுக்கு இவரின் செல்வாக்கு இருந்ததாக நம்பப்பட்டது. ஆனால், இதன் பின்னணியில் இருந்த பல உண்மைகளை வெளிப்படைத்தன்மையுடன் இந்த நூலில் எழுதியிருக்கிறார் மோகன்தாஸ்.

எம்ஜிஆர் - கருணாநிதி

எம்ஜிஆர் – கருணாநிதி

ஒருபக்கம் எம்.ஜி.ஆரின் ஆளுமை, நிர்வாகத்திறமை, மக்களின் செல்வாக்கு போன்றவற்றை மோகன்தாஸ் வியந்து பாராட்டினாலும் இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆரின் ஆட்சிக்காலத்தில் இருந்த ஊழல்களையும் நிர்வாகக் கோளாறுகளையும் அவர் பதிவு செய்யத் தவறவில்லை. உதாரணத்திற்கு எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டம். நீதிக்கட்சியின் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் சில பள்ளிகளில் ‘இலவச மதிய உணவுத்திட்டம்’ என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு பிறகு காமராஜரின் ஆட்சிக்காலத்தில் இந்தத் திட்டம் விரிவாக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு, எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் ‘சத்துணவுத் திட்டம்’ என்று தனித்துறையாக செயல்படத் தொடங்கியது

இந்தப் புதிய திட்டம் பற்றிய ஆலோசனைகளையும் முன்னேற்பாடுகளையும் எம்.ஜி.ஆர் செய்து கொண்டிருந்த போது, டிஜிபி மோகன்தாஸிடமும் இது பற்றி விவாதித்திருக்கிறார். ஆனால், இதில் மோகன்தாஸிற்கு சில மாற்று அபிப்பிராயங்கள் இருந்திருக்கின்றன. தமிழக அரசு ஏற்கெனவே நிதிச்சுமையில் இருக்கும் போது, பல கோடி ரூபாய் முதலீட்டில் இப்படியொரு திட்டத்தை கொண்டு வருவதற்குப் பதிலாக ‘’அந்தந்தப் பகுதிகளில் சிறு தொழிற்கூடங்களை அமைத்து வயது வந்தவர்களுக்கு வேலை தரலாம். தங்கள் பிள்ளைகளின் சாப்பாட்டுக்காக அவர்கள் அரசாங்கத்தை நம்பியிருக்கத் தேவையில்லை. இதனால் மாநிலத்தின் தொழில்துறை அடிமட்டத்திலிருந்து வளரும்’’ என்றெல்லாம் ஆலோசனை சொல்லியிருக்கிறார் மோகன்தாஸ்.

‘இத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்து கொண்டுவரப்படும் திட்டத்தால் அதிகம் பலன் அடையப்போகிறவர்கள் இடைத்தரகர்களே. இதில் ஊழலும் மோசடிகளும் பெருகும். அரசிற்கும் கெட்ட பெயர் வரும்’ என்பது மோகன்தாஸின் தொலை நோக்குப் பார்வை. அதாவது ‘பசிக்கிறவனுக்கு மீனைத் தருவதைக் காட்டிலும் மீன் பிடிப்பதை கற்றுத் தந்தால் அவனாகவே பிழைத்துக் கொள்வான்’ என்கிற பழமொழிதான் மோகன்தாஸ் முன்வைத்த கருத்துக்களின் அடிநாதம்.

ஆனால், தன் அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருந்த எம்.ஜி.ஆர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘ஒருவருக்கு உணவு அளிப்பது’ என்பதை தன் வாழ்க்கையின் ஒரு பகுதி கலாசாரமாகவே கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். தன் வீட்டிற்கு வருகை தருபவர்களில் சாதாரணர், பணக்காரர் என்கிற எந்தவொரு பாரபட்சத்தையும் பார்க்காமல் ‘’அவர்கள் உணவு சாப்பிட்டார்களா?’’ என்று விசாரிப்பதை வழக்கமான கேள்வியாக வைத்திருந்தார். இளமைக் காலத்தில் பசியால் வாடிய அனுபவம் அவருக்கு இந்தக் கலாசாரத்தை கற்பித்திருக்க வேண்டும்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *