Share on Social Media


ரஜினியின் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஆனால் அந்தக் காலக்கட்டத்தில் பொதுசமூகத்தின் ஒரு பகுதியும் ரஜினியின் அரசியல் வருகையை ஆவலாக எதிர்பார்த்தது. ரஜினியின் எளிமை, பணிவு, ஆன்மீகத் தேடல், அரசியல் ஆசையின்மை போன்ற பல விஷயங்கள் ரஜினிக்கு நேர்மறையான பிம்பத்தை உருவாக்கியிருந்தது. ‘இவர் அரசியலுக்கு வந்தால் நேர்மையான நிர்வாகத்தைத் தருவார்’ என்ற நம்பிக்கை மக்களிடையே அப்போது இருந்தது.

இப்படியொரு சீரியஸான விஷயத்தை, ஒரு குழந்தை விளையாட்டுப் பொம்மையை கையாண்டது போல் ரஜினி கையாண்டாரோ என்று தோன்றுகிறது. ‘’நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா, இல்லையா?” என்று கேட்கப்படும் போதெல்லாம் ‘’காலம்தான் அதற்கு பதில் சொல்லும். யாருக்குத் தெரியும்?” என்றே மையமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு வருஷமோ, இரண்டு வருஷமோ இல்லை… பல வருடங்களுக்கு இந்த விளையாட்டை சீரியஸாக ஆடிக் கொண்டிருந்தார் ரஜினி.

‘நாளை நடப்பது யாருக்குத் தெரியும். நேற்று நான் கண்டக்டர்… இன்று நான் நடிகன்’ என்று தத்துவார்த்தமான விளக்கம் எல்லாம் ரஜினியின் அளவில் சரியானதாக, பொருத்தமானதாக இருக்கலாம். தவறில்லை. ஆனால் ‘மக்களின் எதிர்பார்ப்பு’ என்கிற விஷயத்தோடு நாம் இப்படி விளையாடிக் கொண்டிருக்கிறோமே என்று அவர் நிச்சயம் யோசித்து ஒரு கட்டத்தில் இந்த ஊசலாட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.

இதையெல்லாம் ரஜினி உணர்ந்திருக்க மாட்டாரா என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் உணர்ந்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ரஜினி அடிப்படையில் மிகுந்த நல்லியல்புகள் கொண்ட மனிதர். பதவி, புகழ், பணம் போன்றவற்றின் மீதெல்லாம் அவருக்கு அதிக பற்று இருப்பதைப் போல் தெரியவில்லை.

ஆனால் எந்தவொரு முடிவையும் துணிச்சலாக எடுக்க முடியாத அளவுக்கு அவரிடம் நிறைய தடுமாற்றங்கள், குழப்பங்கள் இருந்தன. அவர் நம்பிக்கை வைத்த அரசியல் ஆலோசகர்கள், அவருக்கு பல்வேறு வழிகாட்டுதல்களைச் செய்து கொண்டிருந்தாலும் ‘பாதுகாப்பான விளையாட்டைத்தான்’ ரஜினி எப்போதும் தேர்ந்தெடுத்தார் என்று தோன்றுகிறது.

ஓர் உதாரணத்தின் மூலம் இதைப் பார்க்கலாம். அர்ஜுன் நடித்து வெளியான ‘முதல்வன்’ திரைப்படத்தின் கதை ஆரம்பத்தில் ரஜினியிடம்தான் கூறப்பட்டிருந்தது. அப்படியொரு அட்டகாசமான திரைக்கதையில் ரஜினி நடித்திருந்தால் ‘முதல்வன்’ திரைப்படம் அல்லோலகல்லோமான வரவேற்பைப் பெற்றிருக்கும். அவரது சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக கூட அது அமைந்திருக்கலாம். தன்னுடைய அரசியல் வருகையை திரைப்படங்களில் ரஜினி பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் பார்த்தால் கூட இதன் உச்சக்கட்ட வெற்றியாக ‘முதல்வன்’ திரைப்படம் அமைந்திருக்கலாம்.

ஆனால் ‘முதலமைச்சர் பதவி’ பாத்திரத்தைக் கொண்ட ஒரு கதையில் நடிக்க ரஜினிக்கு நிறைய தயக்கங்கள் இருந்தன. அப்போதைய ஆளுங்கட்சிக்கு எவ்விதமான சங்கடத்தையும் தர அவர் விரும்பவில்லை. அவர் ஆதரவு அளித்த திமுக ஆட்சி பதவிக்கு வந்து ஆறு மாதங்கள்தான் ஆகியிருந்தது. எனவே ஆளுங்கட்சிக்கு, குறிப்பாக கருணாநிதிக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ரஜினி தயங்கினார். ஒருவேளை ஜெயலலிதாவின் ஆட்சி அப்போது இருந்திருந்தால் ‘முதல்வன்’ படத்தில்’ ரஜினி நடித்திருப்பாரோ என்று யூகிக்கத் தோன்றுகிறது. (என்னவொன்று, வில்லன் பாத்திரம் பெண்ணாக அமைந்திருக்கக்கூடும்).

விஜயகாந்த் - ரஜினி

விஜயகாந்த் – ரஜினி

ஒரு நெருக்கடியான நிலையில் பல்வேறு விஷயங்களை பரிசிலித்து ஆராய்ந்து சட்டென்று ஒரு முடிவு எடுத்தால்தான் பல விஷயங்கள் உடனுக்குடன் நகரும். மாறாக அதைப் பற்றி வருடக்கணக்கில் யோசித்து, தயங்கி, முடிவைத் தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தால் மக்கள் நலன் பாதிக்கப்படக்கூடும்.

ரஜினியே இதை உள்ளூற உணர்ந்திருந்ததால்தான், தன்னுடைய அரசியல் நுழைவை இத்தனை நெடிய காலம் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார் என்று தோன்றுகிறது. புதிய அரசியல் கட்சியை தொடங்கினால்தான் ஒருவர் நேரடி அரசியலுக்குள் வந்தார் என்று அர்த்தம் அல்ல. “இந்தக் கட்சி ஆட்சிக்கு மறுபடியும் வந்தால் நாடு தாங்காது… எனவே இந்த அரசியல் கூட்டணியை ஆதரியுங்கள்” என்று எப்போது அவர் ‘வாய்ஸ்’ தந்தாரோ, அப்போதே நேரடி அரசியலுக்குள் வந்து விட்டார் என்றுதான் பொருள்.

ரஜினி அரசியலுக்கு வர விரும்பியது, அடிப்படையில் நல்ல நோக்கத்தைக் கொண்டது. தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களுக்கு நிறைய நல்லது செய்ய முடியாதா என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது.நிச்சயம் பணம் சம்பாதிப்பதற்காக அவர் அரசியலை நாடவில்லை. ஆனால் இது சார்ந்த முடிவை எடுப்பதற்கு இருபது வருடங்களுக்கும் மேலாக தயங்கி, மக்களின் எதிர்பார்ப்பை நீர்க்கச் செய்ததுதான் மிக மோசமான விஷயம். இப்படியொரு மோசமான ஆட்டத்தை அவர் ஆடாமல் இருந்திருக்கலாம்.

ஆன்மீகம் என்பதே தன்னை அறிதல்தான். இந்த உணர்வு ரஜினிக்கு அதிகம். ‘தனக்கு அரசியல் சரிப்பட்டு வருமா?’ என்கிற பிரமாண்டமான கேள்வி அவரை நெடுங்காலத்துக்கு துரத்திக் கொண்டேயிருந்தது. ஒருவழியாக சமீபத்தில் அந்த கேள்விக்கு விடை சொல்லிவிட்டார். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ரஜினிக்கே இது நல்லதுதான்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *