Share on Social Media


தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்களாக இருந்த தியாகராஜ பாகதவரும், சின்னப்பாவும் ஒரு திரைப்படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை. அடுத்த காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆரும் சிவாஜியும் ‘கூண்டுக்கிளி’ என்கிற ஒரேயொரு திரைப்படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார்கள். ஆனால், அதற்குப் பிறகான ரஜினி – கமல் காலகட்டத்தில் இருவரும் இணைந்து 13 திரைப்படங்களில் இணைந்து நடித்தார்கள்.

‘தில்லுமுல்லு’ திரைப்படம்தான் ரஜினியும் கமலும் இணைந்து தோன்றிய கடைசி திரைப்படம். இதில் கூட கமல் கெஸ்ட் ரோலில்தான் வருவார். இதற்குப் பிறகு அவர்கள் திரையில் இணையவில்லை. இதற்கு முக்கிய காரணம் கமல் எடுத்த ஒரு முடிவுதான்.

கமலின் வசீகரமான தோற்றம், சிறப்பான நடிப்பு, துள்ளலான நடனம் போன்றவற்றால் இளம் பார்வையாளர்களை அப்போது வெகுவாகக் கவர்ந்து கொண்டிருந்தார். இதன் எதிர்முனையில் தனது பிரத்யேகமான ஸ்டைல், வேகமான உடல்மொழி, ‘இந்தாள் கிட்ட என்னமோ இருக்குய்யா’ என்று எண்ண வைக்கும் வித்தியாசம் போன்ற திறமைகளால் தனக்கான ரசிகர்களை ரஜினி திரட்டிக் கொண்டிருந்தார். ஆகவே, இந்த இருவரையும் இணைத்து நடிக்க வைப்பதை இயக்குநர்கள் விரும்பினார்கள். இது அப்போதைய வணிகத்திற்கும் உதவியாக இருந்தது. இந்த காம்பினேஷன் ரசிகர்களின் பெருவாரியான வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தது.

கமல், ரஜினி – தில்லு முல்லு

இந்தச் சமயத்தில்தான் கமல் ஒரு முக்கியமான முடிவை தீர்மானித்து அதை ரஜினியிடம் தெரிவிக்கிறார். “நீங்களும் நானும் இணைந்து நடிப்பது தயாரிப்பாளர்களுக்கு வேண்டுமானால் லாபமாக இருக்கலாம். ஆனால் நமக்கு அது நிச்சயம் லாபமல்ல. இருவரின் சம்பளமும் இதனால் குறைகிறது. மட்டுமல்லாமல் இருவரின் அடையாளங்களும் தனித்தனியாக, வளர வேண்டியதொன்று. இதுதான் நமது எதிர்காலத்திற்கு நல்லது. இனி நாம் இணைந்து நடிக்க வேண்டாம்” என்கிற கமலின் இந்த முடிவு பொதுவிலும் வெளியாகிறது.

நடிகர் என்பதைத் தாண்டி கமலுக்குள் ஒரு சிறந்த பிசினஸ்மேன் இருந்ததை இந்த முடிவு தெரிவிக்கிறது. இதைத் தாண்டி யூகித்தால் இன்னொரு முக்கியமான விஷயமும் தட்டுப்படுகிறது. ஆம்… ‘ஒரு உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது’ என்கிற பழைய தத்துவம்தான் அது.

என்னதான் கமலும் ரஜினியும் நண்பர்களாக இருந்தாலும் ஒரு திரைப்படத்தில் தனக்கான கவனம் அதிகம் இருக்க வேண்டும் என்றுதான் எந்தவொரு ஹீரோவும் விரும்புவர். மற்றவர்களுக்கான முக்கியத்துவம் கூடுவதை எந்தவொரு ஹீரோவும் உள்ளூற ரசிப்பதில்லை. இதுதான் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு முக்கியமான பண்பு. கதைக்காக ஹீரோ என்பதல்லாமல் ஹீரோவிற்காக கதை என்கிற வழக்கம் இருக்கிற வரையில் இம்மாதிரியான அபத்தங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஆனால், கமல் வழக்கமான ஹீரோக்களில் ஒருவர் அல்ல. திறமை எங்கிருந்தாலும் அதைத் தேடிப் பிடித்து தன்னுடைய திரைப்படங்களில் உபயோகிப்பவர். திறமையான சக நடிகர்களை ஆதரிக்கத் தயங்காதவர். அப்போதுதான் ஒரு திரைப்படம் அதற்கான கனத்தையும் உயரத்தையும் அடையும் என்பதில் ஆதாரமான நம்பிக்கையுள்ளவர். இப்படி பெருந்தன்மையாக சிந்திக்கக்கூடிய ஹீரோவாக கமல் இருந்தாலும் கூட அவருடைய பெரும்பான்மையான திரைப்படங்களில் அவரே ஆக்கிரமித்திருக்கும் சம்பிரதாயமான விஷயத்தையும் கூடவே பார்க்கிறோம்.

6051991d1f874 Tamil News Spot
கமல் – ரஜினி

“நரியிடம் காகம் ஏமாந்த கதையை திரைப்படமாக எடுத்தால் அதில் நரி, காகம் ஆகிய இரண்டு வேடங்களிலும் கமலே நடிக்க முன்வருவதோடு அந்த ‘வடையாக’வும் அவரே நடிப்பாராக இருக்கும்’’ என்று ஒரு நண்பர் கிண்டலாக சொல்வார். ஒரு பக்கம் கமலின் நடிப்பார்வத்தை இது காட்டினாலும் இன்னொரு பக்கம் அவருக்கு இருக்கும் அதீதமான தன்முனைப்பு குணாதிசயத்தையும் காட்டுகிறது.

‘தனித்தனியாக நடிக்கலாம்’ என்று கமல் எடுத்த முடிவு அவரைக் காட்டிலும் தனக்கே அதிக சாதகமாக இருந்ததை பிற்காலத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறார் ரஜினி. ‘அபூர்வ ராகங்கள்’ திரைப்படத்தில் ரஜினியை முதன்முறையாக காணும் எவரும் அவர் பிற்காலத்தில் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறப் போகிறார் என்பதையோ, அவரால்தான் தமிழ் சினிமாவின் வணிகம் ஒரு புதிய உச்சத்தை அடையப் போகிறது என்பதையோ நிச்சயம் யூகித்திருக்க முடியாது. ஏன், ரஜினியால் கூட அதை யோசித்திருக்க முடியாது. ஆனால் அந்த அதிசயம் பிற்பாடு நடந்தது.

Also Read: ரஜினி சொன்ன டிஸ்க்ளைமர்; இமேஜை உடைத்த `Humorously Yours’ பாலசந்தர்… `தில்லு முல்லு’ ஏன் கிளாசிக்?

“தனியாக பிரிவதின் மூலம் இருவரின் எதிர்காலமும் பிரகாசமாகும்” என்று கமல் எடுத்த அந்த முடிவு பிற்காலத்தில் நல்ல விதமான நிதர்சனமானது. கமலின் தீர்க்கதரிசனங்களுள் ஒன்றாக இதைச் சொல்லலாம்.

வழக்கமான வெகுஜன திரைப்படம் + மாற்றுத் திரைப்படம் என்கிற இரட்டைக் குதிரை சவாரியை ஒரு காலகட்டத்தில் கமல் தீர்மானித்தார். அதாவது அப்பட்டமான வெகுஜன திரைப்படம் ஒன்றில் நடிப்பார். பிறகு அதன் மூலம் ஈட்டிய பொருளாதார வசதியைக் கொண்டு தனது லட்சியப்படங்களில் ஒன்றை தயாரித்து உருவாக்குவார். இப்படி தன் முதல் கனவு திரைப்படத்தை கமல் உருவாக்குவதற்கு 99 படங்களைத் தாண்டி வர வேண்டியிருந்தது. ஆம்…’ராஜபார்வை’ என்ற கமலின் நூறாவது திரைப்படம்தான் அது. இப்படி வித்தியாசமான பாத்திரங்களை, திரைக்கதைகளைத் தேடி நடிப்பதின் மூலம் இந்திய அளவைத் தாண்டி உலக அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக கமல் போற்றப்படுகிறார். தேசிய விருது உள்ளிட்ட பல அங்கீகாரங்கள் அவரைத் தேடி வந்திருக்கின்றன. இந்தியாவிலேயே அதிக முறை ஃபிலிம்பேர் விருது பெற்ற நடிகர் கமல்ஹாசன்தான்.

ஆனால், ரஜினி தன் பாதையை துல்லியமாகவும் தீர்மானமாகவும் முடிவு செய்து கொண்டார். ‘கமர்ஷியல் ஹீரோ’ என்கிற பாதைதான் அது. பெரும்பாலும் அதிலிருந்து அவர் விலகியதில்லை. தமிழ் சினிமாவின் வணிகம் என்பது நூறு கோடி என்கிற பெருமைமிகு எல்லையை எட்டியதற்கும், உள்ளூரைத் தாண்டி வெளிநாடுகளில் அழுத்தமான காலடி தடங்களை எடுத்து வைத்ததற்கும் ரஜினி என்கிற வணிக பிம்பம்தான் முன்னோடியாக இருந்தது.

243591 Tamil News Spot
சிவாஜி கணேசன், ரஜினி, கமல்

சமூகத்தின் எந்தவொரு துறையும் நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அதன் வணிகம் தொடர்ந்து செழிப்பாக இருக்க வேண்டும். ‘ஒரு காட்டில் புலி செழிப்பாக இருப்பதுதான் அந்த காடு வளமாக இருப்பதற்கு அடையாளம்’ என்று சொல்வார்கள். தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. அதன் வணிகம்தான் இருப்பைத் தீர்மானிக்கிறது. இந்த நோக்கில் ரஜினி என்கிற பிம்பம்தான் தமிழ் சினிமாவின் இருப்பிற்கும் வளர்ச்சிக்கும் ஆதாரமான காரணம் என்றால் அது மிகையல்ல.

இந்த விஷயம் ரஜினியின் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ‘தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வேண்டும்’ என்பதுதான் அவரது ஆதாரமான நோக்கமாக இருந்தது. எந்தவொரு புதிய திரைப்படத்தையும் ஒப்புக் கொள்வதற்கு முன்பு இந்த விஷயத்தைத்தான் அவர் பிரதானமாக கவனிப்பார். இதன் மூலம்தான் தமிழ் சினிமாவை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் தொடர்ந்து அமையும்’ என்கிற யதார்த்தமான உண்மையை அவர் நன்கு அறிந்திருந்தார்.

இதெல்லாம் சரி… ஆனால் ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்கள் ஒரே மாதிரியான கமர்ஷியல் படங்களில் தொடர்ந்து நடித்து சலிக்க வைக்கிறார்களே, இந்தப் போக்கு சினிமாவின் வளர்ச்சிக்கு தடைதானே? சர்வதேச அரங்கில் அறியப்படும் சிறந்த சினிமாக்களோடு ஒப்பிடும் போது நம்முடைய இடம் எங்கே என்பது போன்ற பல கேள்விகள் சினிமா ஆர்வலர்களுக்கு எழலாம். அதில் நியாயமும் உள்ளது. ஆனால், ஒரு துறையின் வணிகத்தை அதன் முதலாளிகள் மட்டும் தீர்மானிப்பதில்லை. மிக முக்கியமாக அதன் நுகர்வோர்களே தீர்மானிக்கிறார்கள். அவர்களின் ரசனை, விழிப்புணர்வு, தேடல், தெளிவு போன்ற அம்சங்கள்தான் அந்த வணிகத்தின் போக்கை அமைக்கின்றன. இந்த நோக்கில் தமிழ் சினிமாவின் பெரும்பாலான ரசனையில் கணிசமான மாற்றம் இன்றும் கூட ஏற்பட்டிருக்கிறதா என்கிற கேள்விக்கு விடையைத் தேடினால் இதற்கும் விடை கிடைக்கும்.

606d7d34532f3 Tamil News Spot
ரஜினி

தமிழ் சினிமாவில், இரு முன்னணி நடிகர்கள் ஆட்சி செய்யும் காலகட்டத்தில் ஒருவர் மட்டும் ஓரடி முன்னே இருப்பார் என்கிற ஆதாரமான விஷயத்தை முதல் வார கட்டுரையிலிருந்து தொடர்ந்து பார்த்து வருகிறோம் அல்லவா? அந்த நோக்கில் ரஜினி x கமல் காலகட்டத்தில் பார்க்கும் போது புகழிலும் செல்வாக்கிலும் ரஜினி ஒருபடி முன்னே இருக்கிறார். என்னதான் நடிப்பில் சிறந்து விளங்குபவராக கமல் இருந்தாலும் ஒரு படி பின்னே இருக்கிறார்.

இந்த அம்சம் இந்தக் காலகட்டத்தில் மட்டுமல்ல, முன்பும் அப்படித்தான் இருந்தது. தியாகராஜ பாகவதரை விடவும் நடிப்பில் பி.யூ. சின்னப்பா சிறந்தவர். போலவே எம்.ஜி.ஆரை விடவும் சிவாஜிதான் நடிப்பில் சிறந்தவர் என்பது ஊரே அறிந்த உண்மை. ஆனால் பாகவதரும் எம்.ஜி.ஆரும் மட்டுமே அந்தந்த காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தார்கள். அவர்களின் வசீகரமான புறத்தோற்றம்தான் இதற்கு அடிப்படையான காரணமாக இருந்தது. நடிப்பில் சிறந்தவராக இருப்பவரைக் காட்டிலும் தோற்றத்தில் சிறந்தவராக இருப்பவரை தமிழ் சினிமா உயர்த்திக் கொண்டாடியது. சிவப்பு நிறத்தின் மீதிருந்த மோகம்தான் இதற்கு ஒருவகையில் காரணம். ‘வெள்ளை நிறம்தான் உயர்ந்தது’ என்று பிரிட்டிஷ் ஆண்ட காலகட்டம் நமக்குள் ஏற்படுத்திய தாழ்வுமனப்பான்மையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

Also Read: நானும் நீயுமா – 12: சாமானியர்களின் நாயகனான சிவகுமாரின் நடிப்பும், சலிப்பும்!

ஆனால், கமல் x ரஜினி காலகட்டத்தில் இந்த அம்சம் தலைகீழாக மாறியதை ஒரு சமூக விந்தை என்றே சொல்ல வேண்டும். ஆம், சிறந்த நடிப்பைத் தாண்டி தோற்றத்தில் வசீகரமானவராக கமல் இருந்தார். ஆனால் கறுப்பான தோற்றத்தில் இருந்த ரஜினியால்தான் அதிக செல்வாக்கை அடைய முடிந்தது.

ninaithale kamal Tamil News Spot
கமல்

இதற்கு தமிழ் சமூகத்தில் அப்போது நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள் ஒருவகையில் காரணமாக இருக்கக்கூடும். ஆரியம் x திராவிடம் என்கிற கருத்தாக்கத்தின் மோதல் இந்தக் காலகட்டத்தில் அதிகமாக இருந்தது. திராவிடக் கட்சிகளின் தீவிரமான அரசியல் பரப்புரைகள் மக்கள் மனதில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தின. நம் மண், நம் மொழி என்று தமிழ் கலாசார அம்சங்களின் உன்னதங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. இந்த வரிசையில் நிறத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ‘ஒரு மனிதன் கறுப்பாக இருப்பது எவ்வகையிலும் இழிவல்ல. அது திராவிடத்தின் பிரத்யேக அடையாளம்’ என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டது.

‘ஒரு ஹீரோ சிவப்பு நிறத்தில், மிக அழகாக இருக்க வேண்டும்’ என்கிற பொதுவான இலக்கணத்தை ரஜினி உடைத்து எறிந்து மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றதற்கு இந்த காலகட்டத்தின் அரசியல் சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். இதற்குப் பிறகு விஜயகாந்த், முரளி உள்ளிட்ட பல கறுப்பு நிற நாயகர்களை நாம் இயல்பாக ஏற்றுக் கொள்வதற்கு முன்னோடி காரணமாக ரஜினி இருந்தார்.

ரஜினி x கமல் காலகட்டத்தில், ரஜினி ஓரடி முன்னே இருந்தார் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? இதற்கான காரணங்களை அடுத்த வாரத்தில் அலசுவோம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *