Share on Social Media


‘கட்டபொம்மன்’ நாடகம்தான் இளம் வயதில் சிவாஜிக்கு நடிப்பு என்கிற கனவை ஊட்டியது. எனவே சிவாஜி பின்னாளில் வெற்றிகரமான ஹீரோவாக ஆன பிறகு, இளம் வயதில் தனக்கு லட்சியப் பாத்திரமாக தெரிந்த ‘கட்டபொம்மனை’ வைத்து திரைப்படம் எடுக்க திட்டமிட்டார். இதில் ‘வெள்ளையத் தேவன்’ என்கிற உணர்ச்சிகரமான பாத்திரத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரனை நடிக்க வைக்க முடிவு செய்தார். ஆனால் எஸ்.எஸ்.ஆர், நடிக்க முன்வரவில்லை. இதே சமயத்தில் ‘கட்டபொம்மனுக்கு’ போட்டியாக ‘சிவகங்கைச் சீமை’ என்கிற திரைப்படம், கண்ணதாசனின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்தது. எஸ்.எஸ்.ஆர், ‘சிவகங்கை சீமை’யில் நடிக்கச் சென்று விட்டார்.

மகள்களுடன் ஜெமினி கணேசன்

மகள்களுடன் ஜெமினி கணேசன்

‘கட்டபொம்மன்’ என்பவன் தெலுங்கு நாயகன் என்றும், ‘சிவகங்கைச் சீமை’ திரைப்படமானது தமிழ் மண்ணைச் சேர்ந்த வரலாற்று நாயகர்களான ‘மருது சகோதரர்களைப் பற்றிய படம்’ என்றும் பிரசாரம் செய்யப்பட்டது. கடைசி நேரத்தில் எஸ்.எஸ்.ஆர் நடிக்க மறுத்து விட்டதால், அவசரத்திற்கு வேறு நடிகரைத் தேட வேண்டிய நெருக்கடி. அந்தச் சமயத்தில் சிவாஜிக்கு கைகொடுத்தவர் ஜெமினி கணேசன். அப்போது ஜெமினியின் மனைவியான சாவித்திரிக்கு பிரசவ நேரம். தன் கணவர் அருகில் இருக்க வேண்டும் என்கிற நியாயமான விருப்பம் சாவித்திரிக்கு இருந்தது. ‘பாசமலர்’ என்கிற படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் கூட சிவாஜியும் சாவித்திரியும் அண்ணன், தங்கையாகவே பாசத்துடன் பழகினார்கள். சிவாஜியின் வேண்டுகோளை தட்ட முடியாத சாவித்திரி, அந்த நெருக்கடியான சூழலிலும் தன் கணவரை அனுப்பி வைக்க ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பிற்கு சென்று நடித்துக் கொடுத்து விட்டுத் திரும்பினார் ஜெமினி.

‘சிவகங்கைச் சீமை’யை விடவும் ‘கட்டபொம்மன்’ திரைப்படம்தான் பிறகு பிரம்மாண்டமான வெற்றியை அடைந்தது. சிவாஜிக்கு கூடுதல் புகழையும் தேடித் தந்தது. பின்னர் சினிமாவிற்கு நடிக்க வாய்ப்பு தேடி வருகிற இளைஞர்களில் பெரும்பாலும் ‘வானம் பொழிகிறது.’ வசனத்தைத்தான் பேசிக் காட்டி இயக்குநர்களிடம் சான்ஸ் கேட்க ஆரம்பித்தார்கள். இன்றளவிற்கும் புகழ்பெற்ற திரைப்படமாக ‘கட்டபொம்மன்’ திகழ்வதற்கு சிவாஜியின் அற்புதமான நடிப்பும், பி.ஆர். பந்துலுவின் நேர்த்தியான இயக்கமும்தான் காரணம். அவசர சமயத்தில் சிவாஜிக்காக நடித்துத் தரும் அளவிற்கு ஜெமினி கணேசனின் நட்பு அமைந்திருந்தது.

சிவாஜியுடன் அதிக திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆருடன் ஜெமினி கணேசன் இணைந்து நடித்தது ஒரேயொரு திரைப்படத்தில்தான். 1966-ல் வெளியான ‘முகராசி’ என்கிற திரைப்படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்திருந்தார் ஜெமினி. இந்தப் பாத்திரத்திற்கு அசோகன், கே.பாலாஜி, சக்ரபாணி போன்ற ‘எம்.ஜி.ஆர் கோஷ்டி’ நடிகர்கள் முதலில் திட்டமிடப்பட்டிருந்தாலும் ஜெமினி கணேசனை நடிக்க வைக்க முடிவு செய்தது எம்.ஜி.ஆர்தான். ஏனெனில் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் நாயகியாக அறிமுகமானவர்கள் எல்லாம் அடுத்த திரைப்படங்களில் ஜெமினிக்கு நாயகியாக நடிப்பது ஒரு தற்செயலாக அமைந்து வந்து கொண்டிருந்தது. இதனால் ஜெமினியின் மீது எம்.ஜி.ஆருக்கு கோபம் என்கிற வதந்தி அப்போது உலவியது. இதைப் போக்குவதற்காக ஜெமினியை தன் திரைப்படத்தில் தேடி அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர் என்று சொல்லப்படுகிறது.

எம்.ஜி.ஆர், சிவாஜி,ஜெமினி என்கிற இந்த மூவேந்தர்களின் கலைப்பயணம், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை, அவர்களைப் பற்றிய மக்களின் பார்வை போன்றவற்றை கவனித்தால் அவர்கள் தானாக ஏற்படுத்திக் கொண்ட அல்லது தன்னிச்சையாக உருவான பிம்பம்தான் அவர்களின் பயணத்தை தீர்மானித்தது.

நீங்கள் உள்ளுக்குள் எப்படிப்பட்டவராக கூட இருங்கள். ஆனால் ‘வெளியே’ நீங்கள் எவ்வாறாக காட்டிக் கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் உங்களின் வளர்ச்சியும் பின்னடைவும் ஏற்படுகிறது. இது சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல, சராசரி நபர்களுக்கும் கூட இது பொருந்தும். ஆம்… பிம்பத்தின் வலிமை அத்தகையது. அதனால்தான் சொல்கிறேன். பிம்பங்கள் வழிபடுவதற்கானதல்ல; உடைபடுவதற்கானது.

அடுத்த வாரத்தில் இருந்து கமல் – ரஜினி என்கிற இருபெரும் ஆளுமைகளின் காலக்கட்டத்திற்குள் பயணம் செய்வோம்!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *