Share on Social Media


சிறிது நேரம் ஆரவாரம் ஓய்ந்திருந்த ஓட்டலில் இரண்டு போலீஸ்காரர்களின் வருகையால் மீண்டும் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. அதிலொருவன் நேரே அப்பெண்களின் மேசையருகே வந்து நின்றான். வாயில் பான்பராக்கைக் குதப்பியவாறே புஷ்பாவின் முதுகில் கையால் அழுத்தினான். அடுத்த நொடி அவன் முகத்தில் எச்சில் சோற்றுப் பருக்கைகள் தெறித்தன.

அவன் வேகமாக அவ்விடம்விட்டு வெளியேறினான். வெளியேறும்போது ஒரு நொடி திரும்பி புஷ்பாவையும் மற்ற மூவரையும் பார்த்துக்கொண்டான். ரேகாவும் காஜலும் அச்சத்தில் கலங்கினர். புஷ்பா மும்முரமாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.

நிலைமையின் பதற்றம் என்னை அவ்விடம்விட்டுக் கிளம்பிவிட அறிவுறுத்தியது. நாங்கள் சாப்பிட்டதற்கான பில் வருவதற்கு தாமதமானதால் அங்கேயே இருக்கவேண்டிய சூழல். மீண்டும் அந்நால்வரையும் கவனிக்கத் தொடங்கினேன். அவர்களும் சாப்பிட்டு முடித்திருந்தனர். சற்று முன்னர் நடந்த எந்த விஷயமும் அவர்களை பாதித்ததாகத் தெரியவில்லை. வயிறார உணவு உண்ட திருப்தியில் பெருஞ்சீரகத்தை மென்றபடி ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர். அப்போது ஒலிப் பெருக்கியில் `முகல்- ஏ- ஆசம்’ படத்திலிருந்துப் பாடல் ஒலித்தது

`ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா

ஜப் ப்யார் கியா தோ டர்னா க்யா…’

சற்று நேரத்துக்கு முன்பு ஓநாய்போல் வெறிகொண்டிருந்த புஷ்பா இல்லை இப்போது. அவள் தேவதைபோலிருந்தாள். முகத்தில் நிறைவுப் புன்னகை. அது அவளது அபிநயங்களிலும் வெளிப்பட்டது. விரல்கள், கண்கள், மந்தகாசப் புன்னகை இவை மூன்றும் கொண்டு அப்பாடல் முழுவதற்கும் நடனம் அமைத்தாள்.

கண்ணிமைக்காமல் அவளையே பார்த்திருந்தேன் நான். அதுவரை நான் கண்ட அற்புத நடனங்களைவிட சிறந்த நடனம் அது. நேரே அவளது மேசைக்கே சென்று அவள் கைகளை இறுகப் பற்றி “அற்புதம் புஷ்பா, அற்புதம்!’’ என்றேன். புஷ்பா குறுநகையொன்றைப் பரிசளித்தாள். அந்தக் கண்களில் எத்தனை மென்மை. சற்று முன் உக்கிரம் தெறித்தவையா அவை என்னுமளவுக்கு அவ்விழிகளில் தெய்விகம் மிளிர்ந்தது.

அவர்களை அவ்விடம்விட்டு செல்லும்படி யாரும் கூறவில்லை. பழரசம் அருந்தியபடி அவர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது உணவக வாசலில் ஒரு சிறுமி வந்து நின்றாள். அவளைப் பார்த்ததும் புஷ்பா வேகமாக எழுந்து சென்றாள். அவளை அவ்விடம்விட்டு விரட்டுவதுபோலிருந்தது புஷ்பாவின் உடற்மொழி. அச்சிறுமி பிடிவாதம் பிடிக்கவே புஷ்பா அருகிலிருந்த தந்தூரி அடுப்பில் பொசுங்கிக்கொண்டிருந்த கறித்துண்டங்களை எடுத்து பாலிதீன் பையில் அடைத்துக் கொடுத்துவிட்டு அவ்விடம்விட்டுச் செல்லுமாறு கண்டித்தாள். அவளது கைகளில் கெபாப் கம்பி சிவந்து கனன்று கொண்டிருந்தது. அதைக் கண்ட அச்சிறுமி அழுதுகொண்டே நடந்து சென்று விட்டாள்.

நாடோடிச் சித்திரங்கள்

நாடோடிச் சித்திரங்கள்

எனது மூளையில் ஏதோ இடித்ததுபோலிருந்தது. புஷ்பாவின் அச்செயல் அவள் மகளின் மனதில் நிரந்தரமாகப் பதிந்து அதன் விளைவுகளில் புஷ்பாவே பொசுங்கிவிடும் நிலை ஏற்படும் விபரீதம் புஷ்பா அறியவில்லை என்பது வேதனையாக இருந்தது. சிறுபிராயத்தில் இறுகிப்போகும் மனங்கள் அதன் பிறகு எப்போதும் இளகுவதில்லை.

ஆனால் புஷ்பாவின் உலகில் இவ்வகையான நியாயங்களுக்கு ஏது இடம்… அந்தந்த நொடிக்கான நியாயங்களுக்காக மட்டுமே வாழ்வதற்கு அவள் பணிக்கப்பட்டிருந்தாள். தான் பிழைத்திருப்பதுபோல் தன் மகளும் பிழைத்துக்கொள்வாள் என்ற நம்பிக்கை போலும்.

சிறிது நேரத்திலெல்லாம் அவர்கள் மீண்டும் உற்சாகமாகிவிட்டனர். கழிவறைக்குச் சென்று திரும்பிய அந்நால்வரும் புதுப்பொலிவுடன் வேளியேறினர். திருத்திய கேசம், உதட்டுச்சாயம் பளீரிட அஞ்சனம் தீட்டிய விழிகளில் தேடல் நிரப்பிக்கொண்டு வெளியேறினர். நான் அவர்களைப் பின்தொடர்ந்தேன். நால்வரும் ஜும்மா மசூதி வாயிலில் அமர்ந்திருந்த ரோகிகளுக்கும் முதியவர்களுக்கும் சில்லறைகளை வழங்கியபடி ஒரு நொடி நின்று பிரார்த்தித்துவிட்டுக் கிளம்பினர். அப்போது அங்கு அமர்ந்திருந்த ரோகியான முதியவர் புஷ்பாவின் உடையைப் பற்றி இழுத்தார். புஷ்பா அவரது தலையை ஆதுரமாக வருடிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள். புஷ்பா அப்போது எனக்கு எட்டாத புரிதலாகத் தெரிந்தாள்.

பேருந்துப் பயணத்தின்போது என் மனம் புஷ்பா, அவளுடைய தோழிகள், அச்சிறுமியைச் சுற்றியே வந்தது.

மணிமேகலைகளை உருவாக்கும் புனிதத்தையும் அடைந்திருக்கப்போவதில்லை என்பதும் தெளிவாகப் புரிந்தது. கண்ணகிகள் குறித்தோ எண்ணம் எதுவுமே எழவில்லை. கண்ணகிகளுக்கும் மாதவிகளுக்கும் தலைவிதிகள் வயிற்றால் எழுதப்படுபவை என்பதுதான் நிதர்சனம்

உணவகத்து நிகழ்வுகளெல்லாம் எதிர்பாராத நிறைவை மனதுக்குத் தந்திருந்தபடியால் தமிழ்ச் சங்க நடனம் குறித்த எதிர்பார்ப்பு பெரிதளவு குறைந்துவிட்டிருந்தது.

அரங்கத்தில் பார்வையாளர்கள் வந்தமர்ந்து வெகு நேரமான பின்னர் நடனக்கலைஞர் ஒய்யாரமாக மேடையில் தோன்றினார். பொன்னாடை மற்றும் பொற் கேடய பரிசளிப்பு நிகழ்வுக்குப் பின் அரங்கில் விளக்குகள் அணைக்கப்பட்டன. அவர்மீது ஃபோகஸ் லைட் படர்ந்தது, அவரின் நடனம் மட்டும் பார்வையாளர்களுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக. அவர் நின்றார், அசைந்தார் மீண்டும் நின்றார், கை கால்களை உயர்த்தித் தாழ்த்தி ஏதோ செய்தார். பிறகு `எம்மை மறந்தாரை யாம் மறக்க மாட்டேமால்” வரிகளுக்குச் செய்வதறியாமல் திகைத்தார். பின் எங்கோ பார்ப்பதுபோல் சிலையாகி நின்றார். வெகுநேரம் பாடல் முடியும் வரை அப்படியே நின்றார். அதற்கு மேல் அவருக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லையா அல்லது செய்யத் தெரியவில்லையா என்பது பலருக்கும் புரியவில்லை. பார்வையாளர்கள் மத்தியில் அதிருப்தியின் சலசலப்பு உண்டானது.

நிகழ்ச்சியின் முடிவாக அப்பெண்மணியின் நடனத்தை யாரோ ஒருவர் ஒலி பெருக்கியில் பன்மடங்கு விவரித்துப் புகழ்ந்துகொண்டிருந்தார், தமிழ்ச் சங்க நிர்வாகி, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. நான் எனது நண்பரை வலுக்கட்டாயமாக அழைத்துக்கொண்டு வெளியேறினேன்.

“ஏன் உங்களுக்கு டான்ஸ் புடிக்கலையா? அவங்க கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கலாம்னு இருந்தேன், எவ்ளோ அழகாருக்காங்க” என்றார் அவர்.

“போய் சிகரெட் வாங்கிட்டு வா. நான் இங்கேயே வெய்ட் பண்றேன்” என்று நடனக்கலைஞரைப் பற்றின உரையாடலைத் தவிர்த்துவிட்டேன்.

அன்றைக்கான மனநிறைவை புஷ்பா அளித்துவிட்டதாகவே எனக்குத் தோன்றியது.

அந்நாளின் நிகழ்வுக்குப் பிறகு ஜும்மா மசூதியைச் சுற்றியிருக்கும் உணவகங்களுக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தேன். புஷ்பா போன்ற உன்னதக் கலைஞர்கள் உலவிய இடம் அது என்பதால்.

டெல்லியில் வாழ்ந்த நாள்களில் அத்தகைய நிறைய அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுத்த சாமானியர்களைப் பற்றி இனி வரும் பகுதிகளில்.

– டெல்லி தரிசனம் தொடரும்Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *