Share on Social Media

சேலம்: நாடு முழுவதும் நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலையேற்றப்பட்டதால், தமிழகத்தில் பெட்ரோல் விலை பெரும்பாலான நகரங்களில் 95ஐ தாண்டியது. டீசல் ₹90க்கு மேல் விற்கப்பட்டது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயிக்கிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கின்றனர். இம்மாத தொடக்கத்தில் இருந்து (4ம் தேதி) பெட்ேரால், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்த தொடங்கியது. இம்மாதத்தில் 25 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அதில் 13 நாட்கள் விலையை உயர்த்தியுள்ளனர். இந்த வகையில் நேற்றைய தினம் நாடு முழுவதும் பெட்ரோல் 20 காசும், டீசல் 20 முதல் 24 காசும் உயர்த்தப்பட்டது.

இதன்மூலம் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 94.86க்கு விற்கப்பட்ட நிலையில், நேற்று 20 காசு உயர்ந்து 95.06 ஆக அதிகரித்தது. டீசல் 88.87ல் இருந்து 24 காசு உயர்ந்து ₹89.11 ஆக அதிகரித்தது. இதுவே சேலத்தில் பெட்ரோல் ஒரு லிட்டர் 95.29ல் இருந்து 20 காசு உயர்ந்து 95.49 ஆகவும், டீசல் 89.32ல் இருந்து 23 காசு உயர்ந்த 89.55 ஆகவும் விற்கப்பட்டது. மாநிலத்தின் பெரும்பாலான நகரங்களில் நேற்றைய தினம் பெட்ரோல் விலை 95ஐ தாண்டியது. கடலூர், நீலகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 96ஐ கடந்தது. டீசல் விலை பெரும்பாலான ஊர்களில் 90ஐ எட்டியது. சென்னை, சேலம் உள்ளிட்ட இடங்களில் 89 என்ற நிலையில் விற்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. அதுவும், இம்மாதத்தில் மட்டும் இதுவரை பெட்ரோல் விலை 2.63ம், டீசல் விலை 3.39ம் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பரவல், ஊரடங்கு நடவடிக்கை போன்றவை அமலில் இருக்கும்நிலையில், இவ்விலையேற்றம் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும் என பொதுமக்களும், பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *