Share on Social Media


கொழும்பு கல்கிஸ்ஸ பகுதியில் கடற்கரையோரமாக அமைந்த உணவகத்தில் அன்று ஆள்நடமாட்டம் குறைவாகிருந்தது. பிரம்புப் பந்தலின் கீழ் இரண்டொரு பிளாஸ்திக் மேசைகளின் மீது கதிரைகள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தன. நிமிர்ந்திருந்த கதிரையொன்றில் நீதனும் மறுபக்கத்தில் ராதாவும் குளிர்பானத்திற்கான பரிசாரகனை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அப்போது அந்த வீதியில் சென்ற பொலீஸ் வாகனமொன்று உணவகப்பக்கமாக நோட்டமிட்டது. வாகனம் தனது வேகத்தை சற்று மெதுவாக்கியது.

தாங்கள் ஜோடியாக அமர்ந்திருப்பதில் சந்தேகம்கொண்டு, பொலீஸ் வாகனம் திரும்பிவர ஆயத்தமாகுவதை நீதன் உறுதியாகக் கண்டுவிட்டான். பொலீஸ் வாகனத்திலிருப்பவர்கள் இறங்கிவருவதற்கு அல்லது தங்களை யார் என்று அவர்கள் பார்ப்பதற்கு எடுத்துக்கொள்ளும் அவகாசத்திற்குள் சுதாரித்துக்கொள்ளவேண்டும் என்று, மெதுவாக எழுந்து சென்று ராதாவிற்கு அருகில் இருந்துகொண்டான். தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை தொட்டு உறுதிசெய்துகொண்டான். மெதுவாக ராதாவின் தோளின் மேலாக கையைப் போட்டுக்கொண்டு அவளின் கண்களைப் பார்த்தான்.

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

நாடற்றவர்களின் கடவுச்சீட்டு

இருவரும் அமர்ந்திருக்கும் இடத்துக்கும் வீதிக்கும் இடையில் சுமார் ஐம்பது மீற்றர் தொலைவென்றாலும் எதுவும் செய்யமுடியாத கையறுநிலைதான் அது.

ஓரளவுக்குக் கடற்கரை பக்கமாகவே பார்த்துக்கொண்டிருந்த ராதாவுக்கு, தனக்கு பின்னால் நடைபெறுவது எதுவுமே தெரியாமலிருந்த கணத்தில், நீதன் அருகில் வந்து அமர்ந்து தோளில் கைகளை போட்டுக்கொண்டதும் அதிர்ந்துபோனாள்.

ராதாவின் தோள்களிலிருந்து கையை மெதுவா கீழிறக்கிய நீதன் முதுகின் வழியாக வருடிச்சென்று இடுப்பை அணைத்துக்கொண்டான்.

பொலீஸ் வாகனத்தின் கடற்கரைப்பக்க ஜன்னல் கண்ணாடி சாதுவாக கீழே இறங்கியதை ஒரு கண்ணால் பார்த்தவாறு –

மறுகையால், ராதாவின் கன்னத்தை மிருதுவாக தன்பக்கம் இழுத்தான். மெல்ல அழுத்தி ஒரு முத்தமிட்டான்.

பொலீஸ் வாகனம் அசையவில்லை.

நீதனின் இதழ்களும் ராதாவை விட்டு அகலவில்லை.

ராதா உறைந்தாள். அவளது கன்னத்திலிருந்து மெதுவாக இதழ்களை பிரித்தவன், “அப்படியே இரு, பின்னால பொலீஸ், என்ர தோளுக்கு மேல கையை போடு” – என்றான்.

பேசும்போதும் அவனது மீசை குத்தியது.

ராதா அணிந்திருந்த – மென் மஞ்சள் நிறத்தில் கழுத்தைச்சுற்றி கறுப்பு வளையம் வைத்து தைத்த இறுக்கமான அந்த – சட்டையின் வாசம் நீதனுக்கு முகத்திலடித்தது.

அவளைப்போலவே அந்த சம்பவம் பொலீஸிற்கும் பிடித்திருக்கவில்லை. இப்போது மறுபக்க சிக்னல் விழுந்தது. மெதுவாக அசைந்துகொண்டு கடற்கரை வீதியால் அந்த வாகனம் வேகமெடுத்தது.

ராதாவுக்குள் அந்தக் கடற்கரை காற்றை மீறியொரு உஸ்ணம் சுழன்றடித்தது.

ஆத்திரம் அலைகளாக ஓங்கியடித்தது. நீதனைத் திரும்பிப் பார்க்காமலேயே, தூரத்தில் போய்க்கொண்டிருந்த பொலீஸ் வாகனத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவள் கோபத்தோடு இருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு அந்த கணத்தில் நீதனுக்குப் புலனாய்வுத்துறைக்காரன் என்ற தகுதியெல்லாம் தேவையற்றதாக இருந்தது. அவள் பெண்ணாகத்தான் இன்னுமிருக்கிறாள் என்பதைப் பரிபூரணமாக உணர்ந்துகொண்டவன், சமரசதுக்கான எந்த சம்பாசணையையும் அந்த இடத்தில் தவிர்த்துக்கொண்டான்.

“வீட்ட கொண்டுபோய் விடுறீங்களா”

ராதா தங்கவைக்கப்பட்டிருந்த வீடு அமைந்திருந்த தெரு முனையிலிருந்த குழாயடியில் இறக்கிவிட்டு, தலைக்கவசத்தை வாங்கி மோட்டார்சைக்கிளில் கொழுவிய நீதன், வெள்ளவத்தையை நோக்கித் திரும்பினான்.

அடுத்தநாள், கானகனிடமிருந்து அழைப்பு வந்தது.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *