Share on Social Media


ஓன்றரை மாதமாகியும் நீதனுக்கு முகாம் தொலைபேசியைப் பயன்படுத்துவதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படாத நிலையில், அவனுக்குக் குழந்தை பிறந்துள்ள செய்தியை நான்தான் சொல்லவேண்டியிருந்தது. அதில் என் அகம் குளிர்ந்திருந்தது. எப்போது துயரத்தோடு அலையும் அகதிகளுக்கு, முகாமில் ஏதாவது நல்ல செய்தியைச் சொல்லி, அவர்களின் மனதையும் முகத்தையும் குதூகலமாய் பார்ப்பதற்குத்தான் எல்லா அதிகாரிகளும் விரும்புவார்கள். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் எப்போதாவது ஒருநாள்தான் வாய்க்கிறது.

குயிலனின் குடும்பத்தில் குழந்தையைப் பறித்த அகதியின் விதி, நீதனின் குடும்பத்திற்கு புதிய குழந்தையைக் கொடுத்த செய்தியை கொடுத்து அனுப்பியிருக்கிறது. இந்த முகாம் இப்படித்தான் ஒவ்வொரு நாளும் விசித்திரங்களைப் பிரசவிக்கிறது. வித்தியாசங்களினால் அகதிகளைப் புரட்டியெடுக்கிறது. இதனால், அகதிகள் மாத்திரமல்ல, நாங்களும்கூட, எண்கோணங்களாக குழம்பிநிற்பது இங்கு வாடிக்கையாகிப்போனது.

இந்த முகாம் இன்னும் சிறிது நேரத்தில மகிழ்ச்சியால் பொங்கி வழியப்போவதை நான் மனதுக்குள் கணக்கிட்டபடியிருந்தபோது, குடிவரவு அமைச்சின் அதிகாரி, நீதனின் கோப்பினைப் புரட்டிக்கொண்டு, இன்னொரு விடயத்தையும் பேசுவதற்கு ஆயத்தமானார்.

“நீதன் சிறிலங்காவில் தற்கொலைக்குண்டு தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர். அவரை விசாரிப்பதற்கு ஆஸ்திரேலிய தேசிய புலனாய்வுத்துறையினர் இன்று இங்கு வரவிருந்தார்கள். ஆனால், நீதனுக்குக் குழந்தை கிடைத்த செய்தியை அடுத்து, அவர்கள் அடுத்தவாரம் வருவதாக, சந்திப்புத் திகதியைப் பிற்போட்டிருக்கிறார்கள்”

அலுவலகத்தை நோக்கி நடந்தேன். நீதனுக்குக் குழந்தை கிடைத்த செய்தியைச் சொல்லவேண்டும் என்று அவசரப்பட்டுக்கொண்டிருந்த என் கால்கள், இப்போது எடையிழந்துபோயிருப்பதை உணர்ந்தேன். நீதனின் முகத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்ற குழப்பம், எனக்குள் குழம்படிகளாக இதயத்தில் கேட்டுக்கொண்டிருந்தன. உள்ளே சொல்லமுடியாத கொடிய செய்தியை வைத்துக்கொண்டு வெளியே இனிப்பானதொரு செய்தியைச் சொல்லிச் சிரிப்பது எப்படி என்பதற்கு வாழ்வில் நான் எப்போதும் பயிற்சி எடுத்ததில்லை. அனுபவமும் இருந்ததில்லை.

அலுவலக வாசலுக்குப் போனபோது, நீல நிற ரீ சேர்ட்டில் ஜிம்முக்குப் போய்விட்டு, “அல்பா” கம்பவுண்டு வெளிவிறாந்தையில் நின்று தேனீர் குடித்துக்கொண்டிருந்தான் நீதன். அவனை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்று குழம்பியபடி சென்றுகொண்டிருந்த என்னை, சொல்லிவைத்தாற்போல எதிர்கொணடான்.

“அண்ணே, கொஞ்சம் நில்லுங்கோ, ரீ போடுறன், குடிச்சிட்டுப் போங்கோ”

அவனைத் தேனீர் போட விடுவதில்லை, அதற்கு முன்னரே அவனுக்குக் குழந்தை கிடைத்த செய்தியைச் சொல்வது என்று மனதை இறுக்கிக்கொண்டேன். கையில் வைத்திருந்த கோப்பினை, விறாந்தைக்கு வெளியிலிருந்து மர இருக்கையில் வைத்துவிட்டு –

“நீதன், ரீ போட முதல் இஞ்ச வா. முக்கியமான விசயம் கதைக்கவேணும்”

“பொறுங்க அண்ணே, ரீ போட்டுக்கொண்டு வாறன். குடிச்சுக் குடிச்சு கதைப்பம்”

“வேண்டாம், வேண்டாம். இஞ்ச முதல்ல வா”

அரைவாசி குடித்த தன்னுடைய தேனீரை வெளியில் ஊற்றிவிட்டு, வேகமாக வந்தான். வரும்வழியில் “அல்பா” கம்பவுண்டுக்கு வெளியிலிருந்து குப்பைத்தொட்டிக்குள் காலியான பிளாஸ்திக் குவளையை எறிந்துவிட்டு –

“சொல்லுங்கோ அண்ணே, ஏதாவது அவசரமே”

அவனது கண்கள் எனது கண்களுக்குள் எதையோ ஊடுருவித் தேடின. இன்னும் ஊடுருவினால், நான் மறைக்கவேண்டிய செய்தியையும் கண்டுபிடித்துவிடுவான் என்ற அச்சத்தில் –

“உனக்கு குழந்தை பிறந்திருக்காம்”

என் மீது தாவிக் கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டான். குலுங்கி அழுதான். கையறு நிலையில் தனது குழந்தையைக்கூட காணமுடியாத இந்த அகதிப்பயணத்தை நினைத்து ஏங்கிக் குழறினான்.

அல்பா கம்பவுண்டில் நின்றுகொண்டிருந்த இரண்டொரு அதிகாரிகள், எனக்கு ஏதோ பிரச்னையென்று ஓடி வந்தார்கள். நான் கையசைத்து, ஒரு சிக்கலும் இல்லை என்று அவர்களைத் தூரத்திலேயே நிறுத்திக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் என்னை விடுவிடுத்துக்கொண்ட நீதன் –

“என்ர பிள்ளையப் பாக்கவேணும் அண்ணே”

இந்த முகாம் எவ்வளவு விசித்திரம் வாய்ந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் செத்த குழந்தையை பெற்றோருக்கு எங்கிருந்தோ காண்பித்தது. இப்போது பிறந்த குழந்தையைக் காண்பிக்கப் போகிறது.

நீதனின் ஆறுதல் எனக்குள் கங்குகளாய் சுட்டது. குழந்தையின் செய்தியால் அவன் அடைந்துகொண்டிருந்த சிறிய திருப்தியால் நான் எனக்குள் போராடிக்கொண்டிருந்தேன். அடுத்த வாரம் அவன் எதிர்கொள்ளப்போகும் செய்தியால் அடையப்போகும் துயரத்தை, இன்று நான் அனுபவிக்கவேண்டியவனாக நின்றுகொண்டிருந்தேன்.

தொடரும்..!Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *