Share on Social Media


மாபெரும் கஞ்சா கடத்தலை பிடித்துவிட்டதில், இளைத்துப்போயிருந்த அதிகாரிகளில் ஒருவர் மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்து, கணனிக்கு மிக அருகில் வந்து, பசிய இலையில் தெரிந்த நரம்புகளையும் ஊன்றிப் பார்த்தார்.

அன்றைக்கும் ஐயரின் பைகளைக் கவனமாக சோதனை செய்த அதிகாரிகள், அவரது தட்டுக்கள், பூசைக்குரிய தீபம், மணி போன்றவற்ற மிகக்கவனமாக தாங்களே உள்ளே கொண்டுவந்து கொடுத்தார்கள்.

மெல்பேர்னின் பிரபலமான சுரேஸ் குருக்கள், குயிலனையும் மனைவியையும் தனக்கு அருகில் அழைத்து அமரச் சொன்னார். குழந்தையின் சிறிய உருவப்படம், கதிரையொன்றில் வைத்து, அதற்கு முன்னால், இளநீர் வெட்டிப்படைக்கப்பட்டிருந்தது. அருகில், பால் கொடுக்கும் பிளாஸ்திக் புட்டி நிறைத்து வைக்கப்பட்டிருந்தது. அருகில் ஒரு தீபம் எரிந்தது.

காலை முதல் செய்த சாப்பாடுகள் அனைத்தும், விருந்தினர் மண்டபத்திற்குள், நீண்ட மேசையில் பெரிய தட்டுக்களில் வரிசையாக வைக்கப்பட்டன.

விருந்தினர் மண்டத்துக்குள் தமிழ் அகதிகள்தான் பெருமளவில் ஐயருக்கு முன்னால் தரையில் அமர்ந்திருந்தார்கள். மற்ற நாட்டவர்கள், நடைபெறுகின்ற சடங்கு முறைகளைப் பார்க்கும் ஆர்வத்தில் மண்டபத்தின் உள் ஓரத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். நிறைந்த அமைதி நிலவியது. குயிலனின் குழந்தை இறந்த கவலை அங்கிருந்தவர்கள் அத்தனை பேர் முகங்களில் சுயதுயரமாய் படர்ந்திருந்தது. ஒரு அகதி இதைவிட எதனைத்தான் பெரிதாய் இழந்துவிடப்போகிறான் என்று வலி எல்லோருக்குள்ளேயும் குடைந்துகொண்டிருந்தது. தரையில் அமர்ந்திருந்த குழந்தைகளுக்கு எல்லாமே புதினமாயிருந்தது. வழமைக்கு மாறான – புதிய – சாப்பாடுகளின் மீது குழந்தைகளின் கண்கள் வசீகரமாய் மொய்த்திருந்தன.

ஐயருக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற அவதியோடு, தனது பாராமான உடம்பைத் தூக்கிக்கொண்டு அகுனா அங்கும் இங்கும் பதகளிப்பட்டவாறிருந்தான். மண்டபத்துக்குள் நின்றுகொண்டிருந்த உத்தியோகத்தர்கள் அவனை ஒரு இடத்தில் அமரும்படி அறிவுறுத்தினார்கள்.

தங்களுக்கு அருகே வந்து அமரும்படி நீதனையும் அழைத்தான் குயிலன். குழந்தையின் படத்துக்கு முன்னால் புகைந்தபடியிருந்த சந்தனக்குச்சியின் வாசம், எல்லோரிலும் படர்ந்தது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *