Share on Social Media


“இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” – ஆசிரியர்

அணியத்திற்கு அருகாமையில் மூங்கில் குழாய்களால் கட்டப்பட்டிருந்த சிறு அறையை, கவனமாகப் பிடித்தபடி, தன் கண்களுக்குள் அகப்படாத கடலின் விகாரத்தை வியந்து நின்றான் நீதன்.

படகின் முன்னால் அலைகளின் களிநடனம் அனீஸாவின் நளினங்களாய் தோன்றி மறைந்தது. வாழ்வில் இப்படியொரு நாள் தோன்றியிருக்கவே கூடாது. உப்புக்காற்று முகத்தில் அறைந்தது. கண்களில் நிறைந்த கண்ணீர் அனீஸாவை திரும்ப திரும்ப மனதில் நிறைத்தது.

“அப்பாவுக்கு கொஞ்சி விடுங்கோ”

அனீஸா ஏந்திப்பிடிக்க, லியோ கொடுத்த முத்தம், நீதனின் அடர்ந்த தாடிக்குள் நீங்காத ஈரமாகக் கரைந்து கிடந்தது.

போகூர் பழச்சந்தியில் வாகனத்துக்குள் இழுத்துப்போடப்பட்ட நாள் முதல், முகங்கொடுத்த விசாரணைகளும் இருட்டறைத் தூக்கங்களும், வெடிக்காத கைக்குண்டுபோல நீதனின் நினைவில் உருண்டன.

கடல் புரண்டு புரண்டு வேறேதோ பேசிக்கொண்டிருந்தது.

எதிர்க்காற்றில் எச்சில் துப்பி, தூறல்களால் சிரித்தனர். இன்னும் பலருக்கு, கொண்டு வந்த சிகரெட்டைப் பற்றவைத்துக் களிப்பதில் அவசரம் தெரிந்தது.

கரையிலிருந்து முதல்நாள் இரவு வாட்டியெடுத்து வந்த முழுப்பன்றிகள் இரண்டினை, கம்பியில் செருகி, படகின் பின் அறையில் கொழுவியிருந்தார்கள். பதமாக எரித்து எண்ணை தடவிய பன்றியின் சதை வாசம், கடல் காற்றை மீறி, படகு முழுவதும் பரந்திருந்தது. மேல் தளத்தில் நின்று சிகரெட் பற்றிக்கொண்டிருந்த பலருக்கு, ஆஸ்திரேலியா அடைந்துவிடுவதைவிட, அந்த வாட்டிய பன்றியில் சுருதி சேர்ப்பதே பரம லட்சியமாக, வாய் வேர்த்தது.

“போய் சேரும்வரைக்கும் இதுதான் சாப்பாடு. பன்றியே கூப்பிட்டாலும் இந்தப்பக்கம் ஒருத்தரும் வரப்படாது”

இறைச்சியை இலக்குவைத்தவர்களுக்கான இறுக்கமான உத்தரவு, படகு முழுவதும் பரிமாறப்பட்டது.

அணியத்தின் முன்பாக இரண்டு பக்கமும் கடலுக்குள் இறக்கிவிடப்பட்டிருந்த, தண்ணீர் நிறைத்த நீல பரல்களின் பாரத்தை இழுத்துச் சரிபார்த்தான் ஓட்டி நகலன். சாரத்தை வரிந்து கட்டிய இரண்டுபேர் – நகுலனுக்கு உதவியாக – பரல் கயிற்றை முன் பின்னாக இழுத்து சமச்சீர் செய்துகொண்டனர்.

“சுமத்ரா கடல் அண்ணே, எழும்பி வாற அலைக்கு, அணியத்தை அமத்திப்பிடிக்கப் பாரம் போதாவிட்டால், பார்த்துக்கொண்டிருக்க ஓராவை உடைச்சு எறிஞ்சுபோடும்”

Also Read: நாடற்றவர்களின் கடவுச்சீட்டு – `இந்தோனேசியா எனும் காதல் நிலம்’|பகுதி- 3

நகுலன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அணியத்தில் மோதிய அலையொன்று தண்ணீரை உடைத்து உள்ளே எறிந்தது. படகு சாதுவான அசைவோடு, தனது தாலாட்டை அறிமுகம் செய்தது.

தேனீர் போடுவதற்கும் ஆரம்பித்தனர். அவர்கள் ஓரளவுக்கு சொந்த வீட்டு உணர்வினை பெற்றுக்கொண்டது, ஏறும்போது அணிந்திருந்த உடுப்பிலிருந்து இன்னொன்றுக்கு மாறியிருந்ததில் தெரிந்தது. பேச்சுச் சத்தம்கூட – கடலச்சம் நீங்கி – அவர்கள் இயல்புக்கு திரும்பியதைக் காட்டியது.

நெஞ்சை இறுக்கிக்கொண்டிருந்த அடர்துயர், கொஞ்ச நேரத்திலேயே கடற்காற்றில் கரைந்ததுபோலிருந்தது பலருக்கு. முகங்களில் நம்பிக்கையும் தெளிவும் வசீகரமாய் தெரிந்தது. பாறைகள் உருண்டு வருவதைப்போல, படகின் முன்னால் வந்து உடைந்த அலைகளையும் இந்தப்பெருங்கடலையும், தங்களுக்குள் புரண்டோடும் ஏதோ ஒரு சக்தி, நிச்சயம் வெல்லும் என்ற அதீத நம்பிக்கை எல்லோரிலும் பரந்திருந்தது. அகதிச் சருமங்களின் கீழ், உற்சாக நாளங்கள் அதிர்ந்தபடியிருந்தன. நேரம் செல்லச் செல்ல சிரிப்பும் கும்மாளமும் படகின் அத்தனை தளங்களிலும் ஆரோகணித்தன.

கர்ப்பமாக மாத்திரம் இருந்திருக்காவிட்டால், அனீஸாவை நிச்சயம் அழைத்து வந்திருக்கலாம் என்ற பிரிவு நீதனை அலைகளோடு சேர்த்து அலைக்கழித்தது. எவ்வளவு மகிழ்ந்திருந்த நாட்கள், எப்படியெல்லாம் வாழ்ந்திருந்த கணங்கள். தன் மிச்ச உயிரை மீண்டும் காணப்போகும் நாட்களை நீதன் அன்றைக்கே எண்ண ஆரம்பித்தான்.

படகு கடலுக்குள் இறங்க ஆயத்தமானது.

கட்டுப்பாட்டு அறையிலிருந்து கையில் கோழியொன்றுடன் வெளியில் வந்த நகுலன், மிக வேகமாக அணியத்துக்கு அருகில் சென்றான். கடற்காற்று அவன் தலைமுடியை மாத்திரமன்றி, கோழியின் இறக்கைகளையும் கோதியெறிந்தது. அடுத்த கையில் கொண்டுபோன சிறிய கத்தியால், கோழியின் கழுத்தை அறுத்து கடலில் வீசினான். பீறிட்டு வழிந்த கோழிஇரத்தத்தை அணியத்தின் மீது ஊற்றினான். நீல பரல்களில் களிபோல படிந்த கோழியின் குருதி கடலுக்குள் வழிந்துசென்றது. கழுத்து அறுந்தபிறகும், இரண்டொரு தடவை துடித்த கோழியை கொத்தாகப்பிடித்து, வழிந்துகொண்டிருந்த மிகுதி இரத்தத்தை படகின் கரைகளில் பிதுக்கித் தெளித்தான்.

அகதிகள் அக்கரை சேர்வதற்கும்கூட, ஒரு அப்பாவி, தனது உயிரைப் பலி கொடுக்கவேண்டியிருந்ததை கடல் கர்வத்தோடு பார்த்துக்கொண்டிருந்தது.

கடலுக்குள் படகு இறங்கியது. இந்த நூற்றாண்டின் துயர் சுமந்த பல்லாயிரக்கணக்கான அகதிப்படகுகளின் எண்ணிக்கையில் மேலும் ஒன்று சேர்ந்தது. உலகின் பேரதிசயம் மிக்க மக்கள் கூட்டமொன்றின் இன்னொரு சாகசப்பயணத்தை, நட்சத்திரங்கள் கணக்குப்போட்டு தங்களுக்குள் சிரித்துக்கொண்டன.

சாப்பாட்டுக்கடை முதலாளி நீதனுக்குப் படகில் பெரிதாக அறிமுகம் தேவையாக இருக்கவில்லை. போகூரிலிருந்து ஏறிய பத்து பதினைந்து பேர் அடிக்கடி வந்து நீதனிடம் பேசிப்போனார்கள். கடத்தப்பட்ட செய்தியையும் துருவிப்பார்த்தார்கள். நீதன் தனிமையை விரும்பினான். ஓட்டியின் அறைக்குப் பக்கத்திலேயே ஒரு பெட்டியில் அமர்ந்திருந்து கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அனீஸாவும் லியோவும் தூங்கியிருப்பார்களா என்று கடிகாரத்தை பார்த்தான். பிறகு, உள்ளங்கையை நிலவொளியில் பார்த்தான். கடை ஞாபகம் வந்தது. திரும்பவும் கண்கள் நிறைந்தன.

kadavusheettu16 Tamil News Spot

சிறிது நேரத்தில், பன்றி வறுவல் பரிமாறப்பட்டது. படகின் மேல் தளத்தில் சிலர் வாந்தி எடுத்துச் சத்தம் கேட்டது. கரிசனையோடு காத்திருந்து சாப்பிட்ட சிலர், கக்கூசுக்கு வரிசையில் நின்றனர். வரிசை நீள நீள, பிளாஸ்திக் வாளியை கடலில் எறிந்து, சிலர் தண்ணி அள்ளிக்கொடுத்து, உதவினர்.

எதுவும் சாப்பிடாமல் தனியாக இருந்த நீதனுக்கு, தேனீர் கொடுப்பதற்காக வந்த சிவந்த இளைஞன் தன்னைக் குயிலன் என்று அறிமுகப்படுத்தினான். அருகிலேயே அவனது மனைவி குழந்தையோடு நின்றுகொண்டிருந்தாள். படகுப்பயணத்தில் நம்பிக்கையோடு பேசக்கூடியவர்களாக, அவர்களது சுபாவம் நீதனை ஈர்த்தது.

அவர்களது அருகாமை நீதனுக்குள் ஆனிஸாவையும் லியோவையும் திரும்பத் திரும்பக் கொண்டுவந்தது. லியோவின் பிறந்தநாள் புகைப்படத்தை எடுத்து குயிலனுக்குக் காண்பித்தான். அவனது மனைவி ஆர்வத்தோடு வாங்கிப் பார்த்தாள். நீதனின் கதை, அவர்கள் இருவருக்கும் அவனோடு சீக்கிரம் நெருக்கமாகிவிட்டதைப்போன்ற உணர்வைக் கொடுத்தது.

“கவலைப்படதாதேங்கோ அண்ணா, நீங்கள் போய், அவயளக் கூப்பிடலாம்”

குயிலனின் மனைவி சொன்ன வார்த்தைகள்தான், நீதன் வாழ்வில் இப்போதைக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை.

குயிலனின் குழந்தையைக் கடல்காற்று தீண்டிவிடாமல் பஞ்சுபோன்ற ஆடையினால் மூடியிருந்தார்கள். இடைவெளிவிட்ட துளைகளினால், அது தன் பிஞ்சுக்கைகளை அசைத்து அசைத்து, காற்றோடு விளையாடியது. “படகில் ஏறியவுடன் பழக்கமில்லாத ஆட்டத்துக்கு அழத்தொடங்கிய குழந்தை, இப்போது பழகிவிட்டது” – என்றான் குயிலன். “ஆமாம்” என்பதுபோல அது தலையசைத்துச் சிரித்தது.

பன்றி வறுவல் சாப்பிட்டுப் பேதி போனவர்கள், படகின் அடியில் சுருண்டுபோய் கிடந்தார்கள். சிலருக்கு குளுக்கோஸ் கரைத்தும் கொடுத்திருந்தார்கள்.

தூரத்தில் இந்தோனேசிய மீன்படி படகுகளில் லாந்தர் வெளிச்சங்கள் கசங்கித் தெரிந்தன. பெரிய சரக்குக் கப்பல்களின் தொலைதூர மின் வெளிச்சங்கள், புள்ளிகளாக தோன்றி மறைந்தன.

நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. இருளைக் கிழித்துக்கொண்டு, தூரத்தில் வெள்ளி விழுந்ததை நகுலன் கண்டான். கழுத்தறுந்த கோழியின் கண்கள் ஒருகணம் நினைவில் வந்துபோனது. நேரத்தை பார்த்தான். 12.20 காண்பித்தது. போத்தலை எடுத்து தண்ணீரால் வாயை கொப்பளித்தான்

நினைவில் வந்த அகாலத்தை மறப்பதற்குள், படகின் பின் பக்கத்தில் பெரும் சத்தத்தோடு ஏதோ வெடித்துச் சிதறியது.

அடர்ந்த இருள் படகைப் பார்த்துக் கைகொட்டி சிரித்தது.

படகின் அடியிலிருந்தவர்கள் குழறியடித்துக்கொண்டு எழுந்தார்கள். மேல் தளத்திலிருந்தவர்கள் முன் அணியத்தின் பக்கமாகப் பாய்ந்து பாய்ந்து இறங்கினார்கள். வெடித்த நெருப்பு படகின் பின்பக்கமாகக் கிடந்த எண்ணை பரல்களில் பற்றத்தொடங்கியது. எல்லோரும் குழறிய சத்தத்தில் படகில் என்ன நடந்தது என்று பலருக்குப் புரியவே இல்லை.

kadavusheettu19 Tamil News Spot

ஓட்டி அறையிலிருந்து வெளியில் பாய்ந்த நகுலன், சிவப்பு நிறத் தீயணைப்பு சிலிண்டரைப் பிடுங்கிக்கொண்டு – எல்லோரையும் விலத்தியபடி – பின்பக்கம் ஓடினான். சுவாலைகளின் மீது பீய்ச்சி அடித்தான். சிலர் நகுலனோடு போய் நின்று, கையில் கிடைத்த வாளியால், கடல் தண்ணீரை அள்ளி நெருப்பில் எறிந்தார்கள்.

தீர்மானம் செய்துவிட்ட தீயின் கங்குகள், எல்லோரையும் பார்த்துச் சிரித்தன. தன் பசியை அறியாதவர்களை எந்தப்பரிவுமின்றி பாய்ந்து துரத்தத் தயாராகியது. எறிந்த தண்ணீருக்கு ஒரிரு கணங்கள் பதுங்கிய நெருப்பு, மீண்டும் பேருயரத்திற்கு எழுந்து தன் பயங்கரமான நாக்குகளை வெளித்தள்ளியபடி எரிந்தது.

எல்லோரும் அணியத்தின் பக்கமாக ஓடி வந்ததால், படகின் முன்மூலை தாண்டு எழுந்தது. முன்னும் பின்னுமாக படகு ஆடியது. என்ஜின் சத்தம் விக்கத்தொடங்கியது. ஒவ்வொரு ஆட்டத்திற்கும் தண்ணீர் பெருமளவுக்கு உள்ளே பாய்ந்தது. பார்த்துக்கொண்டிருக்க படகின் பின்புறமாக இன்னொரு சிலிண்டரும் வெடித்து வானில் பறந்தது. அது போன வேகத்திற்கு படகிலிருந்தவர்கள் பெருங்குரலெடுத்து குழறினார்கள்.

ஓட்டி அறைக்கு வேகமாக ஓடிவந்த நகுலன், செய்மதித் தொலைபேசியை எடுத்தான். வேகமாக நம்பரை அழுத்தினான்.

“சிலிண்டர் வெடிச்சு போர்ட்டுகுள்ள நெருப்பு பிடிச்சுதடா, குருவிய அனுப்பு…..இன்னும் கொஞ்ச நேரத்தில ஓராவை உடைக்கப்போகுது, கெதியா அனுப்பு…”

கருகிய படகின் மூச்சு கடலெங்கும் நாறியது.

“மெனக்கெட நேரமில்ல, குருவிய கெதியா அனுப்பு…”

சனங்களின் அழுகுரல்களுக்கு மேல் நகுலன் சத்தமாகக் கத்திச்சொன்னான். படகின் பின்பக்கமாக மீண்டும் ஓடினான்.

அருகில் எந்த மீன்பிடிப்படகையும் காணவில்லை. ஆங்காங்கே தெரிந்த சரக்கு கப்பல்களும் இப்போது படகின் நெருப்பு வெளிச்சத்தில் தெரியவில்லை.

kadavusheettu17 Tamil News Spot

“நீந்தத் தெரிஞ்ச ஆக்கள் கொஞ்ச நேரம் வெளியில குதிச்சு, படகைப் பிடிச்சுக்கொண்டு நில்லுங்கோ. பொம்பிளையள் மாத்திரம் முன்னுக்கு நில்லுங்கோ”

அச்சத்தில் வரண்ட நகுலனின் குரல் நடுக்கத்தோடு பிளிறியது. அதைப் பார்த்தவர்கள் மேலும் குழறினார்கள். அவன் சொல்லி முடிப்பதற்குள் பொத் பொத்தென்று கொஞ்சப்பேர் கடலுக்குள் குதித்தார்கள்.

குடும்பங்கள் இல்லாமல் – தனியாக – வந்தவர்கள் குதித்தேயாகவேண்டும் என்றானது. குதிக்காமல் நின்றவர்களை குற்றவாளிகளைப்போல பார்த்தார்கள்.

இந்தக் கடலின் அடியில், தன் உயிர் தன்னிடமிருந்து கழன்று விழப்போவதை நிச்சயமாக நம்பினான். நகுலன் பேசிய செய்மதித் தொலைபேசியை எடுத்து, ஒரு குரலை மாத்திரம் கேட்டுவிட்டுச் செத்துவிடலாம் என்ற இறுதிப்பீதி நெஞ்சில் அனுங்கியது.

பெரும் சத்தத்தோடு படகு முறிந்தது. முன்பக்கமாக கடலுக்குள் சரிந்தது.

பாறி விழுந்தவர்களின் குழறலையும் கடல்குடிக்கும் ஓலத்தையும் வானம் கருணையின்றிப் பார்த்துக் கிடந்தது.

இருட்டுக்கடல் படகின் பிணத்தை கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றது.

மூர்க்கம் தீராத சிதை நெருப்பு, கடல் மீது இன்னமும் எரிந்து தனது ஊழிப்பெருங்களிப்பை முடித்துக்கொண்டிருந்தது.

(தொடரும்)

Also Read: நாடற்றவர்களின் கடவுச்சீட்டு – `அதிகாரத்தின் கொதி நிழல்’ | பகுதி 2Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *