Share on Social Media


குறிஞ்சிப்பாடி : கடலுார் மாவட்டத்தில் நலிவடைந்து வரும் பாரம்பரிய கைத்தறி நெசவு தொழிலுக்கு புத்துயிர் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடலுார் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி மற்றும் நடுவீரப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிலாக நெசவுத் தொழில் உள்ளது.

குறிஞ்சிப்பாடியில் தயாராகும் கைத்தறி கைலிகள் உலக அளவில் பிரபலம். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.இத்தொழிலில் குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள மீனாட்சிபேட்டை, அயன்குறிஞ்சிப்பாடி, விருப்பாச்சி, கன்னித் தமிழ்நாடு மற்றும் நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், வண்டிப்பாளையம், கே.என்.பேட்டை, முத்துகிருஷ்ணாபுரம், புதுப்பேட்டை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவாளர்கள் அதிகளவு நெசவு தொழில் செய்கின்றனர். இப்பகுதியில் இயங்கிவரும் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் ஏழை எளிய மக்கள் பயன்பட்டு வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சுமார் 20 ஆயிரம் பேர் தொழில் செய்த நிலையில், தற்போது 1200 குடும்பங்கள் மட்டுமே இத்தொழிலை செய்கின்றனர்.

சில ஆண்டுகளாக இத்தொழில் மிகவும் நலிவடைந்து, இத்தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்கள் பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவை சந்தித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக இருந்த கூட்டுறவு கடன் சங்கங்களும் கடனில் மூழ்கின. குறிப்பாக குறிஞ்சிப்பாடியில் உள்ள 7 சங்கங்களில் 5 சங்கங்கள் கடனில் மூழ்கின. மீதமுள்ள 2 சங்கமும் தொடர் நஷ்டத்தில் உள்ளது.

இதனால் தொழிலாளர்களுக்கு லாபத் தொகை கொடுக்க முடியவில்லை. கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சொந்த வீடுகளில் பரம்பரையாக தறி அமைத்து நெசவு செய்கின்றனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொழில் நலிவடைந்துள்ளதால், இளைஞர்கள் நெசவு தொழிலை மறந்து, மாற்று தொழிலுக்கு சென்று வருகின்றனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வேறு வழியின்றி ஈடுபடும் நிலை உள்ளது.

அவர்களும் கூலி உயர்வு கிடைக்காதது, வயது முதிர்வு உள்ளிட்ட காரணங்களால் தொழிலை கைவிட்டு வருகின்றனர். இதனால் பல வீடுகளில் கைத்தறிகள் இயக்கமின்றி உள்ளன. மேலும், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு போன்றவை கைத்தறி நெசவு தொழில் நலிவடைய முக்கிய காரணமாக உள்ளது.கடலுார் மாவட்டத்தின் பாரம்பரிய தொழிலை பாதுகாக்கவும், நெசவுத் தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க, கைத்தறி நெசவுத்தொழிலை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடன்களை ரத்து செய்ய கோரிக்கை சிங்கபுரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் சேகர் கூறும் போது, குறிஞ்சிப்பாடி பகுதியில் பாரம்பரியமிக்க நெசவு தொழில் சில ஆண்டுகளாக மிகவும் நலிந்து பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகிறோம். நெசவாளர் கூட்டுறவு சங்க கடன்களை ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோ -ஆப் டெக்ஸ் போன்ற அரசு நிறுவனங்கள் கைத்தறி நெசவு துணிகளை ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும். இதனை செய்தால் மட்டுமே இத்தொழிலை காப்பாற்ற முடியும் என, தெரிவித்தார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.