Share on Social Media


மேற்கு தொடர்ச்சி மலையின் நாசக்கார, ‘நியூட்ரினோ’ திட்டத்தை மத்திய அரசு நிறுத்தியிருந்த நிலையில், மீண்டும் உயிர்த்தெழ உள்ளது. மத்திய அரசுக்கு, மாநில அரசு அழுத்தம் கொடுத்து, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
– நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

‘இந்த திட்டத்தை பிற மாநிலங்களுக்கு கொடுத்திருந்தால், லட்டு போல வாங்கி, இதற்குள் செயல்படுத்தி, பெரிய லெவலுக்கு வந்திருக்கும். நம் மாநிலத்தில் தான் எல்லாவற்றிலும் அரசியல்…’ என, வேதனை தெரிவிக்கத் தோன்றும் வகையில், நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.

கடந்த, ஒன்பது மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
– தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

‘நீங்கள் சொல்வது தான் புதுமையாக இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சில மாதங்களைத் தவிர, அனைத்து நாட்களும் தமிழகத்தில் மின் வெட்டே கிடையாதே…’ என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.

விவசாயி என தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்ட முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., விதைக்காத நெல்லை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டார். மேலும், தரமான நெல் விதை உற்பத்திக்கு எத்தனை நாளாகும் என்பதும் அவருக்கு தெரியவில்லை.
– தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம்

‘விவசாயியான அவருக்கு, முதல்வர் பதவியை விட்டு இறங்கியதும், விவசாயம் மறந்து போயிருக்குமோ…’ என, கிண்டலாக கேட்கத் தோன்றும் வகையில், தமிழக வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கை.

படைப்பாளிகளின் கற்பனைக்கு மத்திய அரசு தன் அதிகாரத்தால் அணை கட்ட எண்ணுவது மடமை. எனவே, ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
– சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்

‘தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து அறிக்கை கூட அளிக்காமல் இருந்தீர்கள். இப்போது, உங்கள் துறை சம்பந்தப்பட்டது என்பதால், குரல் கொடுக்கிறீர்களோ…’ என, கேட்கத் தோன்றும் வகையில், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் அறிக்கை.

பிரதமர் மோடியை சந்தித்த போது, என்னுடன் ஆரம்பக் காலத்தில் கட்சி பணியாற்றிய தருணங்களை அவர் நினைவு கூர்ந்தார். ஜன சங்க காலத்திலிருந்து என் பணிகளை நினைவு கூர்ந்து பாராட்டினார்.
– நாகர்கோவில் தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி

‘பிரதமர் மோடி என்றுமே பழமையை மறக்காதவர். உங்களைப் போலவே பலரும் அதை நினைவு கூர்ந்துள்ளனர்…’ என, சொல்லத் தோன்றும் வகையில், நாகர்கோவில் தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., காந்தி அறிக்கை.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும், இரண்டு நாட்களுக்கு முன் 30 பேர் கொரோனாவால் இறந்ததாக மாநில அரசின் மருத்துவ அறிக்கை கூறுகிறது. மாநிலத்தில் மொத்தமே, 97 இறப்புகள் தான் அன்று நேர்ந்த நிலையில், அந்த ஒரு மாவட்டத்தில் மட்டும், மூன்றில் ஒரு பங்கு இறப்பு நேர்ந்துள்ளது ஏன்?
– விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார்

‘கொரோனா குறைந்துள்ளது என செய்திகள் வரும் நிலையில், பலி எண்ணிக்கை உயர்வது கவலை அளிக்கக் கூடியதாக உள்ளதே…’ என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி., ரவிகுமார் அறிக்கை.

AdvertisementSource link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *