Share on Social Media

நடிகர் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வியாழக்கிழமை அன்றுதான் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவேக்

அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே தனியார் மருத்துவமனையைத் தவிர்த்துவிட்டு அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கோவிட்-19 தொற்று ஏற்படலாம். ஆனால், அந்தத் தொற்று உயிரைக் கொல்லாமல் இருக்க தடுப்பூசி உதவும்” என்று தெரிவித்ததோடு, தடுப்பூசி போட்டதற்குப் பிறகு தனக்கு எந்தவித பக்கவிளைவும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார்.

தடுப்பூசி போட்டுக்கொண்டதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் தெரிவித்து, தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

vivek Tamil News Spot
vivek tweet

இந்நிலையில் நடிகர் விவேக், இன்று காலை குடும்பத்தினரிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மயங்கி கீழே விழுந்திருக்கிறார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவிட்-19 தடுப்பூசி போட்டதால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைதளங்கலில் செய்தி பரவி வருகிறது.

தடுப்பூசிதான் காரணமா?

கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாரடைப்பு ஏற்படுமா என்று தொற்றுநோய் மருத்துவர் அஷ்வின் கருப்பனிடம் கேட்டோம்:

“தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. அவருக்கு ஏற்கெனவே இதயம் தொடர்பான பிரச்னைகளோ, வேறு ஏதாவது பிரச்னைகள் இருந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட அடுத்த நாள் தற்செயல் நிகழ்வாக இது நடந்திருக்கலாம். அவருடைய தனிப்பட்ட மருத்துவ வரலாறு தெரிந்தால்தான் சரியான கணிப்புக்கு வர முடியும்.

ஆனால், கோவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வரலாம் என்பதற்கான சான்றுகள் இல்லை. இந்தியாவில் மட்டுமே 10 கோடி பேருக்கு மேல் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்பட்டது என்று எந்த நிகழ்வும் பதிவாகவில்லை. உலக அளவில் தடுப்பூசியின் காரணமாக சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டுள்ளதாகத் தரவுகள் உள்ளன.

ஏற்கெனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள், ரத்த உறைவுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொண்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ரத்த உறைவு ஏற்பட்டிருக்கிறது. இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், ரத்த உறைவு ஏற்பட்டுள்ள நிகழ்வும் மிகமிகக் குறைவாகவே பதிவாகியுள்ளது.

ashwin Tamil News Spot
மருத்துவர் அஷ்வின் கருப்பன்

இதயம் தொடர்பான பிரச்னையுடையவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்பாகத் தங்கள் இதய மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. இதுபோன்ற தற்செயல் நிகழ்வுகளுக்காகத் தடுப்பூசியைக் காரணமாகக் கூறக்கூடாது. அன்றாடம் சாலையில் பயணிக்கிறோம். என்றாவது அதே சாலையில் யாருக்காவது விபத்து நடந்தால், அந்தச் சாலையில் பயணிப்பதையே தவிர்த்துவிடுவோமா? கூடுதல் பாதுகாப்புடன் தொடர்ந்து பயணிக்கத்தானே செய்கிறோம். அதுபோலத்தான் இந்த விஷயமும். கூடுதல் பாதுகாப்புக்கு உங்கள் மருத்துவரை அணுகிவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

நடிகர் விவேக் பிரபலம் என்பதாலும் தற்செயல் நிகழ்வாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாலும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை அந்தக் கண்ணோட்டத்தில் அணுகாமல் தனி நபருக்கு ஏற்பட்ட பிரச்னையாகப் பார்க்க வேண்டும். கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசிதான்.

AP21026641889851 Tamil News Spot
COVID-19 Vaccines

Also Read: தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்?

தமிழகம் உட்பட பல இடங்களில் இரண்டாம் அலை தீவிரமாகும்போது இதுபோன்ற காரணங்களால் தடுப்பூசியைத் தவிர்க்கக் கூடாது. உயிரைப் பணயம் வைத்து கோவிட் தொற்றுக்கு ஆளாவதைவிட, தடுப்பூசி போட்டுக்கொண்டு நோய் தொற்றாமலோ, தொற்று ஏற்பட்டால் குறைந்த பாதிப்போடு உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும் தடுப்பூசி முக்கியம்” என்றார்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *