AP21015226488404 Tamil News Spot
Share on Social Media

‘லகான்’ படத்தில் புரஃபஷனல் கிரிக்கெட் ஆடும் வீரர்களுக்கு எதிராக, கிரிக்கெட் என்றால் என்னவென்றே அறியாத பாமரர்களைக் கொண்டு ஓர் அணியை உருவாக்கி விளையாட வைப்பார் அமீர்கான். இன்றைய போட்டி அந்தத் திரைப்படத்தை நிறைய பேரின் நினைவுக்குக் கொண்டு வந்திருக்கும்!

காயங்கள் முன்வைத்த சவால்களால், ஆஸ்திரேலியா வெர்ஸஸ் இந்தியா ஏ அணியா எனச் சந்தேகிக்கும் அளவிற்கு, முற்றிலும் அனுபவமற்ற பெளலர்களுடன் களம் கண்ட இந்தியா, வல்லவர்கள் ஆஸ்திரேலியர்களை ஆட்டம்காண வைக்க முடியாவிட்டாலும், சற்று அசைத்துப் பார்க்க, 5 விக்கெட் இழப்பிற்கு, 274 ரன்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது முதல் நாள் போட்டி.

டாஸை வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. பேட்ஸ்மேன்களின் உடைந்த சிறகுகளின் சின்னமாய் இருக்கும் பிரிஸ்பேனில், நான்காவது இன்னிங்ஸில் பேட்டிங் என்பது நான்கு மலைகளைத் தாண்டுவது போலத்தான் என்பதால் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார் பெய்ன். காயம் காரணமாக, அஷ்வின், பும்ரா, ஹனுமா விஹாரி, ஜடேஜா என அனுமார் வால் போல வரிசையாய் வீரர்கள் அவதியுற, ப்ளேயிங் லெவனைக் காலையில்தான் அறிவித்தது இந்தியா!

AP21015012716881 Tamil News Spot
#AUSvIND

இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில், புஜாரா மற்றும் ரஹானேவைத் தவிர வேறு எந்த வீரரும் நான்கு போட்டிகளிலும் ஆடவில்லை!

வாஷிங்டன் சுந்தர், தாக்கூர், மயாங்க், நடராஜன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். வேகப்பந்துவீச்சு இங்கு எடுபடும் என்பதால், ஐந்து பெளலர்கள் சூத்திரத்தைக் கையிலெடுத்தது இந்தியா. அஷ்வினுக்கு மாற்றாக, பேட்டிங் பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு, குல்தீப்பை பின்தள்ளி, வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது! வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த, வெள்ளை ஜெர்ஸியில் நடராஜனைக் காணும் கனவும் இன்று மெய்ப்பட்டது.

இந்தியாவுக்காக டெஸ்ட் விளையாடும் 300-வது வீரர் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தொடரில் 19 வீரர்களை இந்தியா பயன்படுத்தி இருப்பது இதுவே முதல்முறை. அதேபோல், ஒரு தொடரில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட வீரர்கள் அறிமுகமானது 25 ஆண்டு கழித்து நடந்திருக்கிறது! இதற்குமுன் டிராவிட், கங்குலி உள்ளிட்ட வீரர்கள் 96-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமாகியிருந்தனர்.

ஓப்பனராக வார்னரும், புகோஸ்விக்குப் பதிலாக ஹாரீஸும் களமிறங்கினர். 1013 விக்கெட்டுகளை ஒட்டுமொத்தமாய் வீழ்த்தி இருக்கும் ஆஸ்திரேலிய பெளலிங்படை எங்கே, வெறும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும், நம் ஐவர் கூட்டணி எங்கே?! பந்துகளைப் பறக்க விடப் போகின்றனர் ஆஸ்திரேலியர்கள் என்பதுதான் அனைவரது எண்ணமாகவும் இருந்திருக்கும். ஆனாலும் ஆரம்ப ஓவரிலேயே, ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை அசைத்தார் சிராஜ். அதுவும் வலிமைமிக்க வார்னரின் விக்கெட்டை வீழ்த்தி! ரோஹித் பிடித்த அந்த அற்புதக் கேட்சால் வார்னர் வெளியேற, லாபுசேன் உள்ளே வந்தார்.

AP21015123235452 Tamil News Spot
#AUSvIND

முதல் ஓவரில் சிராஜ் செய்த ஜாலத்தை தனது முதல் பந்திலேயே தாக்கூர் செய்தார். ஒரு அருமையான இன்ஸ்விங்கால், ஹாரிஸுக்குக் குறிவைக்க, தவறேதுமின்றி சுந்தர் அந்தக் கேட்சைப் பிடிக்க, 5 ரன்களுடன் வெளியேறினார் ஹாரிஸ். இந்த பிட்ச்சில் என்னுடைய சராசரி, 64.33 என அச்சுறுத்தும் எண்களோடு உள்ளே வந்த ஸ்மித், லாபுசேனுடன் இணைந்தார்.

உணவு இடைவேளையையும், 50 பார்னர்ஷிப் ரன்களையும் கடந்தும், உடைக்க முடியாமல் மிரட்டிய இந்தக் கூட்டணி, சுந்தரின் சுழலில் சிக்கியது! தனது முதல் விக்கெட்டாய், உலகின் டாப்கிளாஸ் பேட்ஸ்மேனான ஸ்மித்தை, மிட் விக்கெட்டில் நின்றிருந்த ரோஹித்துடன் கைகோத்து, சுருளச் செய்தார் சுந்தர். வேட் உள்ளே வந்தார்.

இரண்டு அதிவிரைவான விக்கெட்டுகள், சற்றே தாமதமாயினும் சிறப்பான ஸ்மித்தின் விக்கெட் என கலக்கிய இந்தியாவைக் கலங்கடித்தது அடுத்த சில ஓவர்கள்! ஸ்மித்தின் விக்கெட் விழுந்ததற்கு அடுத்த ஓவரிலேயே, சைனியின் பந்தை லாபுசேன் அடிக்க, கைக்கு வந்திருந்த கேட்சைக் கைவிட்டார் கல்லியில் நின்றிருந்த ரஹானே! பல தவறுகளை அடுத்தடுத்தப் போட்டிகளில் திருத்திக் கொண்டே வரும் இந்தியாவால் கேட்ச் டிராப்புடனான நட்பை மட்டும் முறித்துக் கொள்ளவே முடியவில்லை. இந்தத் தொடரில், லாபுசேனின் கேட்ச் மட்டுமே பலமுறை தவற விடப்பட்டுள்ளது.

கேட்ச் டிராப் ஆன சோகத்தில் ரசிகர்கள் ஆழ்ந்த போது, கேமரா சைனி பக்கம் திரும்ப, அவர் கீழே விழுந்து கிடந்தார். இன்னொரு பேரிடியாய் சைனி காயம் காரணமாக வெளியேற, இத்தொடரில், “எதையும் தாங்கும் இந்தியா, இதையும் தாங்குமா?!” என்ற விடையில்லா வினாவே உதயமானது!

AP21015128182022 Tamil News Spot
#AUSvIND

இதன்பிறகு புஜாராவும் கடினமான ஒரு கேட்ச்சை லாபுசேனுக்காகக் கைவிட்டார். தனது திறமை ஒரு பக்கம், கேட்ச் டிராப்களால் அடைந்த புனர்வாழ்வு மறுபக்கம் என லாபுசேனின் காட்டில் மழை அடித்துக் கொட்டியது! கடந்த போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும், நெருங்கிப்போய் கிட்டாமல் போன சதத்தை இம்முறை அடைந்தே தீர வேண்டுமென்ற சபதத்துடன், கிடைத்த பெளலர்களை எல்லாம் விளாசத் தொடங்கினார், லாபுசேன்! மறுபுறம் வேடும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்தியாவை இக்கட்டை நோக்கி இன்ச் இன்ச்சாக நகர்த்தியது இந்தக் கூட்டணி.

தேநீர் இடைவேளையும் வந்து போனது, வெவ்வேறு ஸ்பெல்களில், மாறி மாறி பெளலர்களும் வந்து போனார்கள், ஆனாலும், இந்தக் கூட்டணியை முறிக்க முடியவில்லை. அதோடு ரன் ரேட்டையும் 2.53-ல் இருந்து 3.15க்கு எடுத்துச் சென்று செஷன் மொத்தத்தையும் அங்குலம் பாக்கியின்றி ஆக்கிரமிக்கத் தொடங்கியது ஆஸ்திரேலியா!

சதத்தைக் கடந்து லாபுசேனும் மிரட்ட, 200 ரன்களை எட்டிப் பிடித்தது, ஆஸ்திரேலியா. பெளலர்களின் அனுபவமின்மையால், ஒரு வீழ்ச்சியை இங்கே இந்தியா சந்திக்கப் போகிறதோ என்ற பயம் மூடுபனியாய்ச் சூழ்ந்த வேளையில், இணைந்த இருகைகளை விலகச் செய்யும் வேலையைச் சிறப்பாய்ச் செய்தார் நடராஜன். தவறான ஷாட்டை ஆட வைத்து வேடை வெளியேற்றியவர், டெஸ்ட் அரங்கில், தன்னுடைய முதல் விக்கெட்டைப் பதிவு செய்து அசத்தினார்! சரி! ஒருவரைக் காலி செய்தாகி விட்டது, திருமலை நாயக்கர் மஹால் தூணாக அசையாமல் அச்சமூட்டும் லாபுசேனை என்ன செய்வது என்ற அச்சத்தையும் துடைத்தெறிந்து, “யாமிருக்க பயமேன்?!”, என லாபுசேனுக்கும் விடைகொடுத்து அனுப்பி வைத்தார் நடராஜன்! 108 ரன்களுடன் வெளியேறினார் லாபுசேன்!

Also Read: இந்தியாவின் 300-வது வீரராக நடராஜன்… பிரிஸ்பேன் டெஸ்ட்டில் சுந்தருக்கும் வாய்ப்பு! #AUSvIND

AP21015033525117 Tamil News Spot
#AUSvIND

மூன்று ஃபார்மேட்டிலும் ஒரே தொடரில், அறிமுகமான முதல் மற்றும் ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் நடராஜன், மூன்று அறிமுகப் போட்டியிலும் விக்கெட் எடுத்து அசத்தி இருப்பதுதான் கூடுதல் சிறப்பு!

அதிலும் குறிப்பாக செட்டில் ஆன இரண்டு பேட்ஸ்மேன்களையும் அனுப்பி சிறப்பான திருப்பத்தை, இந்தியாவுக்குக் கொடுத்தார் நடராஜன்.

அடுத்ததாக இணைந்த கிரீன் – பெய்ன் கூட்டணி மறுபடியும் ஒரு சிறப்பான பார்னர்ஷிப்பை கட்டமைக்கத் தொடங்க, மறுபடியும் அழுத்தம் இந்தியாவின் பக்கம் அதிகமாகத் தொடங்கியது! போதாக்குறைக்கு காட் அண்ட் பெளல் வாய்ப்பை கிரீனுக்கு, தாக்கூரும் கோட்டை விட, ரன்கள் மிக வேகமாக ஏறத் தொடங்கி, 250-ஐ எட்டியது ஆஸ்திரேலியாவின் ஸ்கோர்!

Also Read: ஸ்மித்தை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர்… முதல் விக்கெட்டே வெறித்தனம்! #AUSvIND

இருந்த பெளலர்களில் ஒருவரும் காயத்தால் வெளியேற, நீண்ட நெடிய நாளாய்த் தொடர்ந்தது மற்ற பெளலர்களின் நாள்! 81 ஓவர்கள் முடிவில் எடுக்கப்பட்ட புதுப்பந்தாவது ஆயுதமாய் ஏதாவது வகையில் உதவாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்தது ரஹானேவின் அணி! ஆனாலும் அதிலும் ஆஸ்திரேலியாவே ஆதிக்கம் செலுத்தியது! மிச்சமிருந்த ஓவர்களில் இந்தியாவால் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியாமல் போனது. 274/5 என இந்த நாளை முடித்தது ஆஸ்திரேலியா.

AP21015213916827 Tamil News Spot
#AUSvIND

அனுபவமற்ற வீரர்கள் இந்த அளவிற்கு அணியை எடுத்துச் சென்றதே உண்மையில் பெரிய விஷயம்தான். இந்திய அணி சறுக்கியது, லாபுசேன் – வேட் கூட்டணியை முறிக்க முடியாமல் போன இடத்தில்தான்! இது இந்திய பேட்ஸ்மேன்களின் மீதான பிரஷரைக் கூட்டப் போகிறது.

ஐந்தாவது பெளலருமின்றி நிராயுதபாணியாய்த் தவித்த இந்தியாவை, “இன்று போய் நாளை வா” என அனுப்பி வைத்துள்ளது ஆஸ்திரேலியா. அடிலெய்டு சாம்பலிலேயே உயிர்த்தெழுந்த இந்தியா இதைச் சமாளிக்கத் தேவையான போர்த்தந்திரங்களுடன் நாளை திரும்பி வரும் என உறுதியாக நம்பலாம்!

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *