Share on Social Media

‘கெய்லிடம் பெரிதாக ஃபுட் மூவ்மென்ட் இல்லை. அப்படியெனில், நாம் கொடுக்கும் வேகத்தை வைத்து மட்டுமே அவர் பந்தை பறக்க விடுகிறார். அதனால், முதலில் பந்தை எவ்வளவு மெதுவாக வீச முடியுமோ வீச வேண்டும். அது கெய்லை நிறைய யோசிக்க வைக்கும். அந்த யோசனை ஏற்படுத்தும் தடுமாற்றத்தை நமக்கு சாதகமாக்க வேண்டும்’. இதுதான் கெய்லின் விக்கெட்டுக்கான அடிப்படை திட்டம். இதை மிகச்சிறப்பாக பிட்ச்சில் அமல்படுத்தினார் அஷ்வின். ப்ளே ஆஃபில் அஷ்வினின் ஒரு பந்தை சிக்சருக்கு தூக்கிய கெய்ல் அந்த ஓவரிலேயே lbw ஆகி வீழ்ந்திருப்பார். சென்னையை பொறுத்தவரைக்கு ஆட்டம் அங்கேயே முடிந்துவிட்டது. ஆனாலும், கோலியின் அதிரடியால் 170+ ஸ்கோரை எடுத்தது பெங்களூரு.

சென்னை அணி சேஸிங். பவர்ப்ளேயிலேயே மைக் ஹஸ்ஸி-விஜய் இருவரும் வெளியேற, சென்னை அணி தடுமாறியது. ஆனாலும், ரெய்னா மற்றும் பத்ரிநாத்தின் பார்ட்னர்ஷிப்பால் சென்னை அணி மீண்டு எழத் தொடங்கியது. இறுதியில் தோனி மற்றும் மார்க்கல் அதிரடி காட்ட கடைசி ஓவர் வரை சென்று சென்னை அணி வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

இன்னொரு தகுதிச்சுற்றில் மும்பை அணியை வீழ்த்தி, பெங்களூருவும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் அந்த போட்டியில் கெய்ல் வெறித்தனமாக 89 ரன்கள் அடித்திருப்பார்.

ப்ளே ஆஃபில் பட்ட அடிக்கு திருப்பிக் கொடுக்க பெங்களூருவும், அஷ்வினிடம் சொதப்பி காயம்பட்ட சிங்கமாக கெய்லும் சென்னையை எதிர்கொள்ள சேப்பாக்கத்திற்கு வந்து சேர்ந்தனர். சென்னை அணி இப்போது முதல் பேட்டிங். மைக் ஹஸ்ஸியும் விஜய்யும் கடந்த போட்டியை போன்று ஏமாற்றிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். இருவரும் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டனர். எல்லா பந்துகளிலும் ரன் சேர்க்க வேண்டும். ஆனால், ரிஸ்க் எடுக்க கூடாது. கிட்டத்தட்ட மைக்கேல் பெவனின் மாடலை இருவரும் பயன்படுத்தினார்கள் என்று கூட சொல்லலாம். ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி வந்தாலும் கூட போதும். வராவிட்டாலும் ஒன்றுமில்லை. ஓடி ஓடியே ரன்களை சேர்த்துவிடலாம். ரன்னுக்கு வாய்ப்பே இல்லாத இடங்களில் ‘single stealing’ செய்ய வேண்டும். சிங்கிள்களை டபுளாகவும், டபுள்களை ட்ரிபிளாகவும் மாற்ற வேண்டும். இதுதான் அவர்களின் ப்ளான். இதை மிகச்சரியாக இருவரும் செய்தனர்.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *