Share on Social Media


திருப்பூர்:தற்போதிருந்தே விழிப்புணர்வுடன் செயல்பட்டால், மாவட்டத்தில், ‘ஒமைக்ரான்’ வராமல் தடுக்க முடியும்; தொழில்துறை தொடர்ந்து சுறுசுறுப்பாக செயல்பட இயலும்.பின்னலாடை நகரான திருப்பூருக்கு, கொரோனா முதல் அலை, தாக்கத்தை தந்தது; இது கடந்து விட்டது என்று நிமிர்ந்து வேகமெடுக்க துவங்கி, பயணித்து கொண்டிருந்த வேளையில் இரண்டாவது அலை, தொழில்துறையை சுணங்க வைத்தது.

இரண்டு அலைகளில் இருந்தும் மீண்டு, ‘பினீக்ஸ்’ பறவையாக பின்னலாடை உள்ளிட்ட நிறுவனங்கள் மீண்டுள்ளன. இச்சூழலில், தமிழகத்துக்கு அலையா விருந்தாளியாக வந்துள்ளது, ஒமைக்ரான்.இது, ‘கொரோனா மூன்றாவது அலையாக இருக்க கூடும். பரவும் வேகம் பன்மடங்கு அதிகமாக இருக்கும்,’ என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. நம் நாட்டில் பாதிப்பு, நுாறை கடந்துள்ளதால், உள்நாட்டு விமான பயணத்துக்கு ‘இ- பதிவு’ நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.”ஒமைக்ரான் அதிகரித்தால் மீண்டும் ஒரு முழு ஊரடங்கை அமல்படுத்துவது, தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பகுதியில் மட்டும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துவது போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக, திருப்பூர் மாவட்ட மக்கள் ஒவ்வொருவரும் பொறுப்பை உணர்ந்து செயல்பட துவங்க வேண்டும். மீண்டும் முககவசம், தனிமனித சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்; ‘சானிடைசர்’ பயன்படுத்த வேண்டும்; பொது இடங்களில், கூட்டமாக திரள்வதை இப்போதிருந்தே தவிர்க்க வேண்டும்; வீட்டில் உள்ள அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும்.வெளிநாட்டினர், பிறமாநிலங்களில் இருந்து பலர் வருவதால், கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் ஆலோசித்து உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும்.

நிறுவனங்கள், கடைகள் அவர்களது ஊழியர், பணியாளருக்கு, வாடிக்கையாளர் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க, பாதுகாப்புடன் இருக்க கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.அனைவரும் ஒன்று சேர்ந்து இப்போதிருந்தே கட்டுப்பாடு, கவனமுடன் இருந்தால், ஒமைக்ரான் திருப்பூர் மாவட்டத்துக்குள் வராமல் தடுக்க முடியும். ஊரடங்கு இல்லாமல், ஓய்வு இல்லா வேகத்தில் திருப்பூர் பயணிக்க முடியும்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.