Share on Social Media


கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை வார்டுகளுக்கு வெளியே சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் நிலைமையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் திணறி வருகிறது.

கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு, நாள் ஒன்றுக்கு ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில், மொத்த பாதிப்பு 40 ஆயிரத்தை எட்ட உள்ளது. உயிரிழப்பு இல்லாத நாட்களே இல்லை என்ற நிலையில் இதுவரை 400ஐ கடந்து விட்டது.தொற்று உறுதியானவர்கள், உடல்நிலை பாதிப்புக்கு ஏற்ப, அரசு மருத்துவமனைகள் மற்றும் கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுதவிர மாவட்டத்தில் உள்ள 7க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடலுார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5,000 பேர் சிகிச்சை பெறுவதுடன், இம்மாவட்டத்தைச் சேர்ந்த 1,000 பேர் வரை வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.தொற்று அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை கிடைப்பது கடினமாக உள்ளது. கடலுார் அரசு தலைமை மருத்துவ மனையில் 350 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், 168 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளன. அனைத்து படுக்கைகளும் நிரம்பிய நிலையில் கூடுதலாக 18 படுக்கைகள் தயார் செய்யப்பட்டது. அதுவும் நிரம்பியது.ஆக்சிஜன் படுக்கை வசதி இல்லாததால் அவசர சிகிச்சை வார்டின் வெளியே கூடுதலாக ஆக்சிஜன் சிலிண்டரை பயன்படுத்தி கொரோனா நோயாளிகளுக்கு வார்டுக்கு வெளியே சிகிச்சை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால், கடலுார் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர்.தற்போது, கூடுதலாக 160 ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும் தினசரி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதால் சாதாரண படுக்கை வசதி ஒதுக்குவதற்கே மருத்துவமனைமற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் திணறி வருகின்றனர்.இதை சமாளிக்க ஒரளவு பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தம் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதால், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள சுகாதார துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கி வருகின்றனர். தற்போது வரை மாவட்டத்தில் 700 பேருக்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில், ‘கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி அறை வசதி உள்ளவர்கள் மட்டுமே வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.இணை நோய் உள்ளவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ள அனுமதிப்பது இல்லை. வீடுகளில் தனிமைப்படுத்தி உள்ளவர்களை சுகாதார துறை அலுவலர்கள் தினமும் போன் மூலம் தொடர்பு கொண்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனை வழங்குவதுடன், தேவையான மருந்துகளும் வழங்கப்படுகிறது.

அவர்கள் வெளியே வராத வகையிலும், வெளியாட்கள் தொற்று பாதித்தோர் தங்கியுள்ள பகுதிகளுக்குச் செல்லாத வகையில் எச்சரிக்கும் விதமாக தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் இதுவரை 80க்கும் மேற்பட்ட இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.எனவே, மாவட்ட நிர்வாகத்துடன், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே, கொரோனா பாதிப்பு குறையும்’ என்றார்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *