Share on Social Media


சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த பின்னர் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல்கள் அதிகரித்து வருவதால், இருவரும் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில், அதிமுகவை வீழ்த்தி திமுக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த மே 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நடந்தது. பதவியேற்பு விழாவில்  ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவி ஓ.பன்னீர்செல்வம் அல்லது தனபாலுக்கு கிடைக்கும் என்று பரவலாக பேசப்பட்டது. ஆனால், அதன்பின் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி எதிர்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களில், எடப்பாடியின் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதால் ஓ.பன்னீர்செல்வத்திற்கான வாய்ப்பு பறிபோனது. இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனி அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். இது கடந்த 7ம் தேதி முதல் இன்று வரை தொடருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் கோவிட்-19 கள பணியாளர்கள் விவகாரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட வேண்டும் என்று ஓபிஎஸ் கோரினார். அடுத்த சில மணி நேரங்களுக்கு பிறகு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தற்போதுள்ள ஊழியர்கள் நீக்கப்பட மாட்டார்கள் என்று உறுதியளித்த பின்னர், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் டிவிட்டரில் பதிவை வெளியிட்டார்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கல் மற்றும் கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அதிமுகவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி கருத்தை பதிவு செய்தார். அதேபோல், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும் இபிஎஸ் கடிதம் எழுதினார். ஓபிஎஸ் சார்பில் வெளியிடப்படும் அறிக்கைகளில், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. அதற்கு பதிலாக அறிக்கைகள் அவரது அலுவலகத்தில் இருந்து வருகிறது அல்லது அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. ஆம்புலன்ஸ் விவகாரம், சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல், டாஸ்மாக் கடைகளை மூடுதல், கருப்பு பூஞ்சை தொற்று, தடுப்பூசிகளை கோருதல், மருந்துகள் கொள்முதல் போன்ற விஷயங்களில் அரசின் முடிவை வரவேற்றுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் விவகாரத்தில் மட்டுமேஇபிஎஸ் – ஓபிஎஸ் ஒன்றாக கூட்டறிக்கை வெளியிட்டனர். மற்ற அறிக்கைகள் எல்லாம் தனி நபர் அறிக்கையாகவே உள்ளது. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில்,  தேர்தலுக்கு முன்பும் இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோர்  ஒற்றுமையாக இல்லை. தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பாடம் கற்றுக்கொள்ளாமல், தாங்களாகவே தனித்தனி அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர் என்று தொண்டர்களே வெளிப்படையாக பேசும் நிலை ஏற்பட்டுள்ளது. இருவரும், கட்சியில் யார் பெரியவர்கள் என்பது குறித்து அரசியல் ரீதியாகவும், கட்சி ரீதியாகவும் காட்டி வருகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் பலர், எடிப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், ஏற்கனவே ஆதரவளித்த எம்பி, எம்எல்ஏக்கள் என பலரும் ஓபிஎஸ்-யிடம் இருந்து விலகி இருப்பதால், அவரை தனிமைப்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலிலும் தேனி மாவட்டத்தை தவிர மற்ற தொகுதிகளில் ஓ.பன்னீர்செல்வம் பெரிதாக பிரசாரம் செய்யவில்லை. தற்போது இருவரும் கட்சி லெட்டர் பேடில் கடிதம், அறிக்கை வெளியிடாமல் தங்களின் சொந்த லெட்டர் பேடில் வைத்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். ஒன்று, கட்சி ஒரே தலைமையின் செயல்பட வேண்டும் இல்லையென்றால் இருவரும் ஒற்றுமையாக இருந்து கட்சியை வழிநடத்த வேண்டும். இல்லையென்றால் வருங்காலத்தில் அதிமுகவின் நிலை கேள்விக்குறியாகும் ஆபத்து உள்ளது’ என்றார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *