Share on Social Media


ஐதராபாத் : தெலுங்கானாவின் தொழில்துறை திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.4,070 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசுக்கு தெலுங்கானா மாநில தகவல் மற்றும் தொழில்நுட்பதுறை அமைச்சர் கே.டி ராமாராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கானாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் அவசரகால நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஐதராபாத்தில் தடுப்பூசி உட்பட நோய் எதிர்ப்பு மருந்துகளும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா சோதனை காலங்களில் ஐதராபாத் மருந்துதுறை தனது திறமையை நிரூபித்ததுடன், உலகின் தடுப்பூசி மூல தனங்களில் தனது நிலையை உறுதி செய்துள்ளது. இதனையொட்டி தெலுங்கானாவில் மருத்துவம் உள்ளிட்ட தொழில்துறை திட்டங்களை மேம்படுத்த மாநில அரசு முயன்று வருகிறது.

latest tamil news

இது தொடர்பாக மாநில அமைச்சர் கே.டி ராமாராவ், நேற்று (டிச.,23) மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதிய கடிதத்தில் கூறியதாவது : தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் பார்மா சிட்டி( HPC),தேசிய தொழில்துறை உற்பத்தி மண்டலம் (NIMS) -ஜஹீராபாத், தேசிய வடிவமைப்பு மையம் (NDC)மற்றும் மாநில தொழில்துறை அமைப்புகளை மேம்படுத்துவது போன்ற திட்டங்களை செயல்படுத்த 2021-2022 க்கான மத்திய பட்ஜெட்டில் தெலுங்கானா அரசுக்கு ரூ.4,070 கோடியை ஒதுக்க வேண்டும். தேசிய தொழில்துறை நடைபாதை மேம்பாடு மற்றும் அமலாக்க அறக்கட்டளையில் (என்.ஐ.சி.டி.ஐ.டி) ஐதராபாத்-வாரங்கல் மற்றும் ஐதராபாத்-நாக்பூர் தொழில்துறை அமைப்புகளை உள்ளடக்கியமைக்கு மத்திய அரசுக்கு நன்றி. இதற்கான மதிப்பிடப்பட்ட திட்ட செலவு 3000 மற்றும் 2000 கோடி ஆகும்.

latest tamil news

இந்த இரண்டு திட்டங்களையும் விரைவான பாதையில் உருவாக்க மாநில அரசு ஆர்வமாக உள்ளது. 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மதிப்பீடுகளில் திட்ட செலவில் குறைந்தது 50 சதவீதத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகும். மத்திய அரசின் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மா நிர்பர் பாரத்’ முயற்சிகளுக்கு ஏற்ப, மருத்துவ துறையில் இந்தியாவின் நிலையை பலப்படுத்துதல் மற்றும் மருந்துகளின் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மருந்தக பூங்காவாக ஐதராபாத் பார்மா நகரத்தை (HPC) மாநில அரசு உருவாக்கி வருகிறது. இந்த திட்டத்தில் ஜீரோ திரவ வெளியேற்றம் (ZLD) அடிப்படையிலான பொதுவான கழிவுப்பொருள் சுத்திகரிப்பு நிலையம் (CETP), ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை வசதி, வெப்பமூட்டும் , குளிரூட்டும் அமைப்புகள், லாஜிஸ்டிக் பூங்காக்கள், குளோபல் பார்மா பல்கலைக்கழகம், ஒழுங்கு முறை வசதி செல்கள், பொதுவான மருந்து மேம்பாடு மற்றும் சோதனை ஆய்வகங்கள் ஆகியவை அடங்கும். இவ்வாறு கூறினார்.

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *