புதுடில்லி : சுத்தம் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்படும் 100க்கும் அதிகமான நகர்ப்புற அமைப்புகளை உடைய 13 மாநிலங்களில் தமிழகம் 12 வது இடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
![]() |
‘ஸ்வச் சர்வேக்சன்’அதிக அளவில் நகர்ப்புறங்களை உடைய மாநிலங்களில் அமைந்துள்ள நகரங்களில் எந்தளவுக்கு சுத்தம் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன என்பதை ‘ஸ்வச் சர்வேக்சன்’ திட்டம் வாயிலாக மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.
இந்நிலையில் லோக்சபாவில் ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., – டி.ஆர்.பாலு தமிழகத்தில் உள்ள நகரங்களின் துாய்மையை பராமரிக்க செலவிடப்பட்டுள்ளதன் விபரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
![]() |
நம் நாட்டில் 100க்கும் அதிகமான நகர்ப்புற அமைப்புகளை உடைய 13 மாநிலங்களில், தமிழகம் 12வது இடத்தில் உள்ளது என்பது ‘ஸ்வச் சர்வேக்சன்’ திட்டத்தின் வாயிலாக தெரியவந்து உள்ளது. மாநில அரசால் நகர்ப்புற அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரம், திடக்கழிவு மேலாண்மையில் நகரங்களின் செயலாக்கம், பொதுக் கழிப்பிடங்களின் வசதி மற்றும் கழிவு நீர் மேலாண்மை ஆகிய காரணிகளின் கீழ் இந்த தரவரிசை மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்துக்கு 1,200 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளது.
அவகாசம் நீட்டிப்பு
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நாடு முழுதும் இத்திட்டத்திற்கு என, ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 600 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியை நேரில் சந்தித்து, மதுரை எம்.பி., வெங்கடேசன் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கல்வி உதவித்தொகைக்கான பல திட்டங்களின் விண்ணப்ப கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிறுபான்மை சமூக மாணவர்களின் 10 வகுப்பு வரையிலான உதவித் தொகையில் பிரச்னை எழுந்துள்ளது. இந்த உதவித்தொகை திட்டங்களுக்கான விண்ணப்ப தேதி, டிச., 15ல் முடிந்துவிட்டது.
மற்ற திட்டங்களுக்கு அவகாசம் நீட்டிப்புச் செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிறுபான்மையின மாணவ – மாணவியர்களின் நலனை கருத்தில் வைத்து இத்திட்டத்திற்கும் மத்திய அரசு காலநீட்டிப்பு சலுகையை வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
– நமது டில்லி நிருபர் –
Advertisement