Share on Social Mediaடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த ராகுல் காந்திக்கு காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.

தூத்துக்குடி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதைத்தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஏற்கனவே தனது பிரசாரத்தை தொடங்கி விட்டார்.

அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரசாரம் செய்தார். பின்னர் புதுச்சேரி மற்றும் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று தனது 3-ம் கட்ட பிரசாரத்தை தூத்துக்குடியில் தொடங்கினார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தார்.

அங்கு அவருக்கு தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் மேள தாளங்கள் முழங்க காங்கிரசார் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். மேலும் ராகுல்காந்தியை வரவேற்று சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி, தோரணங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் வரவேற்பை பெற்ற ராகுல்காந்தி அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரிக்கு சென்றார். அங்கு வக்கீல்களுடன் கலந்துரையாடினர்.

பின்னர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகே பிரமாண்ட ரோடு ஷோ நடத்தியும், பொதுமக்களிடையே நடந்து சென்றும் அவர்களிடம் ஆதரவு திரட்டினார்.

தொடர்ந்து அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக முத்தையாபுரத்தை அடுத்த கோவங்காடு விலக்கு பகுதிக்கு சென்றார். அங்கு உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து பிற்பகலில் முக்காணி, ஆத்தூர், சாகுபுரம், குரும்பூர் வழியாக ஆழ்வார்திருநகரிக்கு செல்லும் ராகுல்காந்தி அங்கு உள்ள காமராஜர் சிலை அருகே பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கேட்டு பேசுகிறார்.

பின்னர் நாசரேத் வழியாக சாத்தான்குளம் செல்லும் அவர் காமராஜ் சிலை அருகே பிரசாரம் மேற்கொள்கிறார். ராகுல்காந்தியை வரவேற்று தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட முக்காணியில் இருந்து சாத்தான்குளம் வரை சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையில் இருபுறங்களிலும் காங்கிரஸ் கொடிகள், தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாலையில் நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் ராகுல்காந்தி இட்டமொழி, மன்னார்புரம் விலக்கு, பரப்பாடி வழியாக சென்று நாங்குநேரி டோல்கேட் அருகே காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை முடித்துக்கொண்டு இன்று இரவு நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்குகிறார்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை ராகுல்காந்தி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். பின்னர் நெல்லையப்பர் கோவிலுக்கு செல்லும் அவர் அங்கு சுவாமி தரிசனம் செய்கிறார்.

அங்கிருந்து திறந்தவேனில் சென்றவாறு ரோடு ஷோ மூலம் மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து டவுன் காந்தி சிலை முன்பு மக்களிடையே பிரசாரம் மேற்கொள்கிறார்.

பின்னர் நெல்லையில் இருந்து கார் மூலம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை பகுதிகளுக்கு சென்று பிரசாரம் மேற்கொள்கிறார். மேலும் அங்கு அவர் பீடி தொழிலாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிகிறார்.

தொடர்ந்து சுரண்டையில் இருந்து புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி பகுதிகளுக்கு சென்று பேசும் அவர் இரவு குற்றாலத்தில் தங்குகிறார்.

நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலையில் ராகுல்காந்தி கார் மூலம் குற்றாலத்தில் இருந்து கடையத்துக்கு செல்கிறார். அங்கு ரோடு ஷோ மூலம் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

தொடர்ந்து அம்பை, சேரன்மாதேவி, வள்ளியூரில் பிரசாரம் மேற்கொள்ளும் ராகுல்காந்தி பின்னர் நாகர்கோவிலுக்கு செல்கிறார்.

ராகுல்காந்தி பிரசாரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. ராகுல் காந்தி பிரசாரம் காரணமாக காங்கிரசார் உற்சாகமடைந்துள்ளனர். அவர் வருகையையொட்டி மாநகர போலீஸ் கமி‌ஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


https://www.youtube.com/watch?v=videoseries

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *