Share on Social Media


நான் மதுரையில் இருந்து தூங்காநகர நினைவுகள் தொடரின் ஒரு அத்தியாயத்தை எழுதுகிறேன். அந்த அத்தியாயம் விகடன் இணையதளத்தில் பிரசுரிக்கப்படுகிறது. பிரசுரிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் எனக்கு சிங்கப்பூரிலிருந்தும் லண்டனிலிருந்தும் மெல்பர்னிலிருந்தும் கட்டுரையைக் குறித்த பாராட்டுகள்/ விமர்சனங்கள் வந்து சேர்கின்றன. என் வீட்டிலிருந்து இரண்டு தெருக்கள் பக்கத்தில் வசிப்பவர் கட்டுரையைத் தனது கைப்பேசியில் வாசித்துவிட்டு, காலார நடந்து வந்து என்னுடன் ஒரு தேநீர் அருந்திக்கொண்டே பேசிவிட்டுச் செல்கிறார். நொடிப் பொழுதில் நம் தகவல்கள் உலகத்தின் எந்த மூலைக்கும் சென்றுவிடும் அசுர வேகமான யுகத்தில் வாழும் நமக்கு, இந்தத் தகவல் தொடர்பு மதுரையில் எப்படியெல்லாம் இருந்தது, அது எப்படியெல்லாம் உருமாறி வளர்ச்சியும் வேகமும் பெற்றது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வேட்டையில் இருப்பவர்கள் ஒரு விலங்கின் வருகையை சைகையில் பிறருக்கு உணர்த்தினார்கள், அடுத்த கட்டமாக எலும்பினால் செய்யப்பட்ட ஊதியால் (சீட்டி) மெல்ல ஓசை எழுப்பி அதன் வழியே தன் சகாக்களை எச்சரித்தார்கள், அவர்கள் ஊதும் ஒவ்வொரு வகையான சீட்டிக்கும் ஒவ்வொரு அர்த்தம் உண்டு. கற்களிலும் இலையிலும் செய்திகளைப் பதிவிட்டு அனுப்பும் வழக்கம் புதிய கற்காலத்தில் பெரும் பாய்ச்சலாக வந்துவிட்டது.

சிந்து சமவெளி காலத்தில் நம்மிடையே எழுத்துருக்கள் வந்துவிட்டன. நமக்குக் கிடைத்திருக்கும் பல்வேறு விதமான களிமண்ணோடுகளில் இருக்கும் எழுத்துருக்களை இன்னும் வாசிக்க முடியாது இருக்கிறோம், அதனாலேயே அன்றைய தகவல் தொடர்பு முறைகளைப் பற்றியும் நம்மால் யூகிக்க முடியவில்லை.

சங்க காலத்திலேயே ஏடுகளும், புறநானுற்றுக் காலத்தில் முரசு அறிவிப்புகளும் வந்துவிட்டன. விரலியர், கூத்தர், புலவர்கள் செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்பவர்களாக விளங்கினர். தமிழ் நிலத்தில் ஆட்சி செய்த வேந்தர்களின் காலத்தில் ஓலை எழுதுபவர்களும், அதைச் சரிபார்க்கும் ஓலை நாயகர்களும் அரசவையில் இடம்பெற்றிருந்தனர். ஒற்றர்கள் உலவு பார்ப்பவர்களாக மட்டும் அல்லாமல் அவர்கள் மூலமாகச் செய்தித் தொடர்புகள் வந்துவிட்டன. பிராமணர்களை எளிதில் யாரும் சந்தேகிக்க மாட்டார்கள் என்பதால் பல இடங்களில் அவர்களே ஒற்றர்களாக இருந்தனர் என்றும் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் போர்கள் தொடர்பான தகவல் தொடர்பிற்கு ஓலைகளை அனுப்பத் தொடங்கிவிட்டனர். அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஒளரங்கசிப் காலங்களிலேயே அரசவைத் தபால்களைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடும் ரன்னர்களும் அதற்குப் பிறகு குதிரைகளில் செல்லும் ரன்னர்களும் வந்துவிட்டனர். முகலாய மன்னர்கள் காலத்தில் அந்த அரசுகளிடம் இருப்பதிலேயே துடிப்பான குதிரைகள் ரன்னர்கள் வசம்தான் இருந்தன. தகவல் தொடர்பு என்பது ஒரு ராஜ்ஜியத்தின் போக்கையே தீர்மானிக்கும் விசயம் என்பதால் ரன்னர்கள் பெரும் போர்த் தளபதிகளுக்கு ஒப்பாக மதிக்கப்பட்டார்கள்.

1858ல் பொதிகளுடன் ரன்னர்கள்
1900 Tamil News Spot
1900களின் ரன்னர்

கிழக்கிந்திய கம்பெனியின் வருகைக்குப் பிறகு அவர்களின் வர்த்தகத் தொடர்புகளுக்காக முறையான தபால் முறைகளை நிர்மானித்தார்கள். முதலில் மும்பைக்கும் சென்னைக்கும் இடையே தபாலுக்கான ஒரு பாதையை அமைத்தார்கள். 1712-ல் சென்னைக்கும் கல்கத்தாவிற்கும் இடையே ஒரு முறையான நிலவழிப்பாதை உருவாக்கப்பட்டது. அதற்கும் பிறகுதான் சென்னையிலிருந்து கிளம்பும் தபால் ஒரு மாதத்தில் கல்கத்தா சென்றடையும் அதிவேகத் தொலைத்தொடர்பு உருவானது.

காலம் காலமாகக் கால்நடையாகச் சென்றவர்களின் கால் தடங்களின் வழியே உருவான நடைபாதைகளைத்தான் இந்த ரன்னர்கள் பாவித்தார்கள். இதில் பெரும்பாலான பாதைகள் வர்த்தகப் பாதைகளாக (Trade Route) நெடுங்காலமாக இயங்கி வந்த பாதைகளே. அரேபிய வணிகர்களின் வருகைக்குப் பிறகு குதிரைகளின் காலடித் தடங்கள் விழுந்து விழுந்து இவை இன்னும் செம்மையான பாதைகளாக மாறியிருந்தன. மும்பையிலிருந்து லண்டனுக்குத் தபால்கள் 90 நாள்களில் சென்றடைந்தன. பெர்சியா, சிரியா, துருக்கி வழியாகப் பாதைகள் அமைக்கப்பட்டு இந்தத் தபால்கள் 35 நாள்களில் செல்லும் வகையில் தொடர்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. கல்கத்தா, மும்பை, சென்னையிலிருந்து கிளம்பும் கப்பல்கள் ரன்னர்களின் வருகைக்காகக் காத்திருக்கும். சில நேரம் 15 மணி நேரம் வரை காலதாமதமாக கப்பல்கள் கிளம்பும். தபால்கள் இல்லாமல் கப்பல்கள் கிளம்ப இயலாதுதானே.

இந்த ஒட்டுமொத்தத் தபால் துறையும் ரன்னர்கள் எனும் ஓட்டத்தூதுவர்களை நம்பியே இயங்கியது. இவர்கள் தபால்களை எடுத்துக்கொண்டு காடு, மழை பாராமல் ஓட வேண்டும் அடுத்த ரன்னரிடம் இந்தத் தபால்களைக் கொண்டு சேர்ப்பது அவர்களின் பொறுப்பு. அவர்கள் ஈட்டி முனையுடன் கூடிய நீளமான குச்சியை வைத்திருப்பார்கள். இந்த ஈட்டியில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கும், அவர்கள் ஓடும்போது மணியின் ஓசை எழும். அவரது கையில் அரசு முத்திரையின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இரவு நேர ரன்னர்கள் கைகளில் லாந்தர் விளக்கு இருக்கும். இந்தியா முழுவதும் ரன்னர்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு என்றே டாக் (தபால்) பங்களாக்கள் இருந்தன. இந்த ரன்னர்கள்தான் நீண்ட நாள்கள் தடம் காட்டும் வழிகாட்டிகளாகவும், தொலைதூர ஊர்களைப் பற்றிய தகவல்களை அறிந்தவர்களாகவும், சுற்றுலா வழிகாட்டிகளாகவும் இருந்துள்ளனர்.

3f9e1f23 592f 4fc5 bc1c 079ff1294890 Tamil News Spot
மதுரையின் பெருமைமிகு தலைமை தபால் அலுவலக தபால் பெட்டி
77e02085 b971 46e7 baeb a49c7de302fa Tamil News Spot
பல ஊர்களுக்கு என பிரத்யேகமாக வைக்கப்பட்டுள்ள தபால் பெட்டிகள்
3115620c 96fe 4f94 98f6 20a40ac9be97 Tamil News Spot
பாரம்பர்யம் மிக்க உருக்கு தபால் பெட்டிகள்
c88bb80c 6b9b 4847 81c7 9c8d257406a2 Tamil News Spot
பாரம்பர்யம் மிக்க உருக்கு தபால் பெட்டிகள்

பாரம்பரியம் மிக்க உருக்கு தபால் பெட்டி1694-ல் கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலேயே மதராசப்பட்டினத்தில் ஒரு தபால் அலுவலகத்தை ஏற்படுத்த முயன்றனர். தங்களின் சொந்த ரன்னர்கள் கொண்டே இந்தத் துறையை ஏற்படுத்தினார்கள். புனித ஜார்ஜ் கோட்டையில் தபால் அலுவலகமும் அதனைத் தொடர்ந்து 1855-ல் மவுண்ட் ரோடு போஸ்ட் ஆபீஸும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. புனித ஜார்ஜ் கோட்டையில் ஏழாம் நம்பர் கொடி ஏற்றப்பட்டால் வெளிநாட்டுத் தபால் வந்துவிட்டது என்று பொருள். கட்டம் போட்ட ஊதா மற்றும் வெள்ளை கொடி ஏற்றப்பட்டால் தபால்கள் விநியோகிக்கத் தயாராக இருக்கிறது என்று பொருள். 1855-ல் இந்தக் கொடிகள் ஏற்றப்பட்டதைத் தெரிவிக்கும் வகையில் வானில் துப்பாக்கிச் சூடு நடத்தும் வழக்கம் இருந்தது.

6fd69e31 62f3 4a20 8bac 9c4c77c55e1f Tamil News Spot
தபால் முத்திரைகள் பதிக்கும் மேசை

1774-ல் தபால்களில் சீல் வைக்கும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. கட்டணம் செலுத்தப்பட்ட தபால்கள் எனும் முத்திரையும் அறிமுகமானது. 1790 முதல் வாரம் இருமுறை தபால்கள் எடுக்கும் நடைமுறை உருவானது.1854-ல்தான் தபால் பெட்டிகள் கிராமங்கள் நோக்கிச் சென்றது. தபால் சேவை அறிமுகமான போது அது ஒரு இலவச சேவையாக இருந்தது. இந்தியாவில் இருக்கும் 700க்கு மேற்பட்ட சுதேச மன்னர்கள்/ மாநிலங்களில் அனைத்திலும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டது. மெல்ல மெல்ல போர்துக்கீசியர்கள், பிரெஞ்சு, டச்சுகள் ஆட்சி செய்யும் பகுதிகளும் இந்த சேவையுடன் இணைக்கப்பட்டன. இந்தியர்கள் அனைவருக்கும் தபால் சேவைகள் திறக்கப்பட்ட போதும் ஏகாதிபத்திய தபால்கள் ‘Imperial Post’ (Official) என்றும் மாவட்ட தபால்கள் என்றும் ‘District Post’ (Public) தனித்தனியாகவே அனுப்பப்பட்டன.

1800களிலேயே மதுரையில் கிழக்கிந்திய கம்பெனி தங்களின் தபால் சேவையைத் தொடங்கிய போதும் அது ஏகாதிபத்திய தபால்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக இயங்கியது. ஆரம்பக் காலத்தில் இது முற்றிலும் ஒரு சேவைத்துறையாகவே இருந்தது, இதிலிருந்து எந்த வகையான வருமானமும் அவர்களால் ஈட்ட முடியவில்லை, பின்னாள்களில் தபால்தலைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பொதுமக்களும் இந்த சேவையைப் பயன்படுத்தும் வகையில் சேவைகள் மேம்படுத்தப்பட்டன, தபால்கள் கிளம்பும் நேரங்கள் அறிவிக்கப்பட்டன. மதுரையில் இருந்து ரன்னர்கள் நத்தம் வழியே திருச்சி, வேலூர், சென்னை என ஏகாதிபத்திய தபால்களை எடுத்துச் சென்றவண்ணம் இருப்பார்கள். தலைமைத் தபால் அலுவலர் இல்லாத நேரங்களில் மாவட்ட கலெக்டர் அல்லது ராணுவ அதிகாரிகள் இந்தப் பொறுப்பை வகித்தனர். அந்த அளவிற்கு தலைமைத் தபால் அலுவலரின் பதவி அதிகாரமிக்கதாக இருந்தது.

40 Tamil News Spot
ஊட்டியில் 40 ஆண்டுகள் ஓடிய ரன்னர்

ரன்னர்கள் உடல் திடகாத்திரமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும், அவர்கள் மணிக்கு 5-6 மைல்கள் ஓட வேண்டும் என்பதும் இருபுறங்களிலும் மொத்த ஒரு நாளில் 40 மைல் ஓட வேண்டும் என்பதும் ஒப்பந்தம். 1790கள் முதல் 1830கள் வரை ரன்னர்களின் சம்பளம் மாதம் ரூ.3க்கும் குறைவாகவே இருந்தது.

1840களில் மதுரைத் தெருக்களில் மணி அடிக்கும் ஓசை கேட்டால் அது தபால்காரர்களின் வருகை என்று அர்த்தம், மணியடிக்கும் சத்தம் கேட்டு தங்களுக்குத் தபால் வரும் என்று காத்திருப்பவர்கள் வீட்டிற்கு வெளியே வந்து காத்திருப்பார்கள், மணியடிக்காமல் தபால்காரர்கள் சென்றால் புகார் அளித்து நடவடிக்கை உறுதி என்கிற அளவிற்கு சட்டங்கள் கடுமையாக இருந்தன.

என்னதான் ஆங்கிலேயர்கள் தபால் சேவையைத் தங்களின் நலன்களுக்காகத் தொடங்கியிருந்தாலும் மெல்ல மெல்ல ரயில்வே, மின்சாரம், தந்தி என இவை அனைத்தும் இணைந்து தேசத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றின, பெரும் விசையாக இருந்தன. தபால் துறையைப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்ததும் தமிழக சமூக வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

ரயில்வேயின் வருகைக்கு முன்னரே தபால்கள் இந்தியா முழுவதும் உள்ள செய்திகளை ஒரு பெரு நதியைப் போல் மதுரைக்குக் கொண்டு வந்து சேர்த்தது. இலக்கியங்கள், போராட்டச் செய்திகள், புத்தகங்கள், உலகம் முழுவதும் நடைபெறும் செய்திகள் என மக்களிடமும் சுதந்திரப் போராட்ட இயக்கங்களின் தலைவர்களிடமும் புதிய அலையாய் கருத்துகள், உலகச் செய்திகள், சுதந்திரப் போராட்டங்கள் குறித்த இந்தியாவின் பிற பகுதிகள் நடைபெற்ற நிகழ்வுகள் மதுரை வந்து சேர்ந்தன. புதிய புதிய செய்திகள் மக்களின் மனங்களில் பெரிய பெரிய மாற்றங்களை ஏற்படுத்தின. இரவு நேர தபால் நிலையங்கள் இந்தியாவில் 12 நகரங்களில் திறக்கப்பட்டபோது அதில் மதுரையும் இடம்பெற்றது என்பது தேசிய அளவில் மதுரையின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

cda2733b d22b 4db8 876c a80420310543 Tamil News Spot
ரன்னர்களை கெளரவித்து வெளியிடப்பட்ட கவர்கள்
2 Tamil News Spot
ரன்னர்களை கெளரவித்து வெளியிடப்பட்ட கவர்கள்

சுதந்திரப் போராட்டத்தின் போது தபால் அலுவலகங்கள் இந்தியா முழுவதும் தாக்கப்பட்டன, சூறையாடப்பட்டன. போஸ்ட் மாஸ்டர்களை, ரன்னர்களைத் தாக்குவதும்கூட போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது. ரன்னர்களிடம் இருந்து ஆங்கிலேயர்களின் அதிகாரபூர்வ தபால்களைப் பறிப்பது, அழிப்பது எனப் பல நிகழ்வுகள் சுதந்திரப் போராட்டத்தில் நிகழ்ந்துள்ளன. 1942-ல் மதுரையில் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் போது தபால் பெட்டிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அதற்குப் பின்னரும் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத் தபால் பெட்டிகள் கொளுத்தப்படுவது முதல் இன்றும் மத்திய அரசுக்கு எதிராக நாம் தபால் அலுவலகங்களுக்கு முன்னே போராடுவது வரை, இது அதிகாரத்திற்கு எதிரான போராட்டங்களின் ஒரு வடிவமாக நிலைபெற்றுவிட்டது.

ரன்னர்களின் வாழ்க்கை அத்தனை சுலபமானதாக இருக்கவில்லை. மிருகங்கள், கொள்ளையர்களிடமிருந்து தங்களைக் காக்க அவர்கள் பல வழிதடங்களில் பெரும்பாடு பட்டார்கள். விஷப்பாம்புகளிடம் கடி வாங்கி இறப்பது, புலிகள் உள்ளிட்ட வன மிருகங்கள் இவர்களை அடித்துக் கொள்வது, ஆற்றில் அடித்துச் செல்லப்படுவது, கொள்ளையர்கள் இவர்கள் கொலை செய்துவிடுவது, வர்த்தக வழித்தடங்களில் பிரத்யேகமாக கொள்ளையர்களிடம் பொருட்களை பறிகொடுப்பது காயம்படுவது என பல சம்பவங்கள் வரலாற்றில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

ரன்னர்களின் வருகைதான் ஒரு காலத்தில் கிராமங்களில் இருப்பவர்களுக்கு நேரத்தை அறியும் ஒரு அடிப்படையாக இருந்திருக்கிறது, மதுரையில் தபால்காரர்களின் வருகையை வைத்து நேரத்தை கடிகாரத்தில் சரிபார்க்கும் அளவிற்கு துல்லியமான நேரத்தில் அவர்களின் வருகை அமைந்திருக்கும்.

1931 Tamil News Spot
1931ல் கட்டப்பட்ட மதுரை தலைமை தபால் நிலையம்

1931-ல் மதுரை தலைமை தபால் அலுவலகம் கட்டப்பட்டது. அதே கட்டடத்தில் தபால்தலை சேகரிப்பு மையமும் நிறுவப்பட்டது. ஆனால், இதற்கு முன்புவரை அது நகரத்தில் எங்கு இயங்கியது என்பதற்கான சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை. திருமலை நாயக்கர் மஹாலுக்கு முன்புறம் உள்ள தபால் அலுவகம் மிகவும் பழையது என்றாலும் அங்கு தான் இயங்கியதா என்பது தெரியவில்லை. 1931ல் கட்டப்பட்ட இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட போது ஆங்கிலேயர்களின் கட்டடக்கலைக்கு ஒரு சான்றாக விளங்கியது, ஆகாயத்தில் இருந்து பார்த்தால் அது விமானத்தின் வடிவில் காட்சியளிப்பது போல் வடிவமைக்கப்பட்டது. இந்த கட்டடம் இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடம், ஒரு தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டிய இந்தப் பாரம்பர்யமிக்க கட்டடம் இன்று பொழிவிழந்து காணப்படுவது வேதனையளிக்கிறது.

மதுரைக்கு எத்திசைகளில் இருந்து நீங்கள் பயணித்து வந்தாலும் மதுரை நோக்கி வரும் மைல் கற்களில் உள்ள தொலைவு எண் குறைந்துகொண்டே வரும். அப்படி வரும் போது மதுரையின் பூஜ்ஜியம் (zero mile) மைல் என்பது மதுரையின் தலைமைத் தபால் அலுவலகம்தான். ஒரு காலத்தில் மதுரை நோக்கி ஓடி வரும் ரன்னர்களின் கணக்கிற்காக இது அமைக்கப்பட்டதா அல்லது தபால் அலுவலகங்கள் வழியேதான் ஒரு நகரம் தன் அடுத்த கட்ட அசைவிற்கான ஆணைகளைப் பெற்றதா என்பதை இன்னும் யூகிக்க முடியவில்லை.

மதுரைத் தபால் அலுவலகத்திலும் குதிரை லாயங்கள் இருந்தன. குதிரை வண்டிகள் தபால் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்டன, பின்னாட்களில் குதிரைளுக்கு பதில் சைக்கிள்கள் வந்தன, குதிரை லாயங்கள் சைக்கிள் ஷெட்டுகளாக மாறின. 1924 முதல் மதுரையில் ரேடியோ வைத்திருப்பவர்கள் அனைவரும் தலைமை தபால் அலுவலகங்களுக்குச் சென்று லைசன்ஸ் வாங்கும் நடைமுறை இருந்தது.

0fe29479 5239 49f9 bb98 35297dc36ca7 Tamil News Spot
விமானம் வடிவ மதுரை தலைமை தபால் நிலைய கட்டடம்
2a64d6c3 6e31 46db 97d3 60475c016e94 Tamil News Spot
விமானம் வடிவ மதுரை தலைமை தபால் நிலைய கட்டடம் மாதிரி

இன்றைய தலைமுறைக்குத் தபால் அலுவலகங்கள் ஒரு பொருட்டே இல்லாத அளவிற்கு தகவல் தொடர்பு புதிய பாய்ச்சலை பெற்றுவிட்டது. இருப்பினும் நான் ராமேஸ்வரம் செல்லும் போது எல்லாம் தனுஷ்கோடியில் சிதைந்து நிற்கும் தபால் கட்டடத்தைச் சுற்றிப்பார்க்காமல் வந்ததில்லை, BOAT MAIL EXPRESS என்று இங்கிருந்து இலங்கைக்கு செல்லும் தபால்கள் ஏற்றிக் கொண்டு பெரும் படகுகள் கிளம்பும் காட்சிகள் என் நினைவில் வந்து செல்லும். மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்படும் ரயிலில் ஒரு பெட்டி தபால் அலுவலகமாகவே இருக்கும். அதில் இரவு முழுக்க தபால்களை ஊழியர்கள் சார்ட்டிங் செய்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தபால்கள் இந்த பெட்டியில் ஏற்றப்படும். இன்று அப்படியான பெட்டிகள் ரயில்களில் இல்லை.

நான் கடித நண்பர்களின் (Pen Friends) காலத்தைச் சார்ந்தவன் என்பதால் என் பள்ளிப் பருவத்திலேயே கடித நண்பர்கள் எனக்கு இருந்தனர். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஒரு நண்பருடன் சில காலம் கடிதத் தொடர்பில் இருந்தேன். 1991ல் கல்லூரி முடித்த பிறகு 10 ஆண்டுகளுக்கு மேல் எங்கள் வகுப்புத் தோழர்களுடன் கடிதப் போக்குவரத்தில்தான் இருந்தேன். தபால் காரருக்காக காத்திருப்பதன் தவிப்பை சுகத்தை நானும் அனுபவித்திருக்கிறேன். நமக்கு தபால் இருக்கும் பட்சத்தில் தபால்காரர் நம்மை நோக்கி சிரித்த முகத்துடன் வரும்போதே ஒரு அன்பின் வருகையை நாம் உணரலாம்.

12e5ce4e cd4f 47ff 811b 421352cae4a9 Tamil News Spot
காத்திருக்கும் தபால்கள்

தாழம்பூவில் மாதவி எழுதிய கடிதம், காளிதாசரின் மேகங்கள் தூது எழுதி அனுப்பியது, லெவ் டால்ஸ்டாய் காந்திக்கு எழுதிய கடிதம், போரை நிறுத்தச் சொல்லி காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதங்கள், வான்கோ தியோவிற்கு எழுதிய கடிதங்கள், பர்மிங்ஹம் சிறையில் இருந்து மார்டின் லூதர் கிங் எழுதிய கடிதங்கள், ஜவஹர்லால் நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள், கடந்த வாரம் எழுத்தாளர் கிரா இறந்ததும் நான் எடுத்து மீள்வாசிப்பு செய்த கு.அழகிரிசாமி கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்கள் எனப் புத்தக வடிவம் பெற்ற கடித இலக்கியத்தின் பல நூல்கள் என் நூலகத்தில் உள்ளன. என் காதலிகள் எனக்கு எழுதிய கடிதங்கள், என் நண்பர்கள் எனக்கு எழுதிய கடிதங்கள் என என் சேகரிப்பிலும் ஒரு ஆயிரம் கடிதங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு கடிதத்தையும் ஒரு சிறகை போல் நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன். இந்தக் கடிதங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லை வாசிக்க வாசிக்க எனக்கு சிறகுகள் முளைத்ததை நான் அந்தரங்கமாகவே உணர்ந்திருக்கிறேன். தபால்கள் இல்லா உலகம் சிறகு முளைக்காத உலகமாகவே இருந்திருக்க வேண்டும்.

நன்றி:

The post office of India and its story, New York Clarke, Geoffrey.,

Early History and Growth of Postal System in India, Calcutta -Mazumdar, Mohini Lal .,

The Imperial Post Offices of British India -Mazumdar, Mohini Lal.,Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *