Share on Social Media


கோவை:அரசு மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சைக்கு உதவும் வகையில், கோவையிலுள்ள பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் இணைந்து, 106 நர்ஸ்களை நியமித்து, அவர்களுக்கு ஊதியமும், தங்குமிடமும் வழங்கியுள்ளன.கொரோனா பரவலில் தமிழகத்தில், முதலிடத்தை கோவை பெற்றுள்ள நிலையில், நோயாளிகளைக் காப்பாற்றவும், மேலும் தொற்று பரவாமல் இருக்கவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனையிலுள்ள டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகின்றனர்.ஆனால் நாளுக்கு நாள், அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால், இவர்கள் அனைவரும் ஓய்வின்றிப் பணியாற்ற வேண்டியுள்ளது. கொரோனா தொற்று அபாயம் இருப்பது ஒரு புறமிருக்க, ஓய்வில்லாத பணிச்சுமையால், மருத்துவப் பணியாளர்கள் கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

அது மட்டுமின்றி, அதிக நோயாளிகளைக் கையாள்வதற்குப் போதிய அளவிலான நர்ஸ்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாத சூழ்நிலையில், கடுமையாக உழைத்தும் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.கூடுதலாக டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களை நியமிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுத்தாலும், அது போதுமானதாக இல்லை என்ற நிலையே நீடிக்கிறது.இதற்குத் தீர்வு காணும் வகையிலும், கொரோனா சிகிச்சைப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவத் துறையினருக்கு உதவும் வகையிலும், கோவையிலுள்ள பல்வேறு அமைப்புகளும் இணைந்து, அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கு, நர்ஸ்களை தங்கள் செலவில் நியமிக்க முன் வந்துள்ளன.

கோவை ரேஸ்கோர்ஸ் குடியிருப்புவாசிகள் அமைப்பான ‘ரானா’, இதற்காக முயற்சி எடுத்து, பல்வேறு தொழில் மற்றும் சமூக அமைப்புகளையும் தொடர்பு கொண்டு ஆதரவு கோரியது. நர்ஸ்கள் தேவை குறித்து விளம்பரமும் செய்தது.இதன் பலனாக, கோவை அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்றுவதற்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், 450 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இவற்றில் முதல் கட்டமாக, 106 நர்ஸ்கள் தேர்வு செய்யப்பட்டு, கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ., மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் நேற்று முதல் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆகஸ்ட் இறுதி வரையிலும், இந்தப் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு தகுதிக்கேற்ப, 15 ஆயிரம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படவுள்ளது.
இதற்காக ‘ரானா’, இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை மற்றும் கோயம்புத்துார் கேன்சர் பவுண்டேஷன் ஆகிய அமைப்புகளும், தனிநபர்கள் சிலரும் இணைந்து கொடுத்ததில், ரூ.50 லட்சம் வரை நிதி திரட்டப்பட்டுள்ளது.இந்த நர்ஸ்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வழங்கும் பொறுப்பை, பி.எஸ்.ஜி.,தொழில் நுட்பக் கல்லுாரி நிர்வாகமும், தமிழ்நாடு வேளாண் பல்கலை நிர்வாகமும் ஏற்றுக் கொண்டுள்ளன.
மூன்று மாதங்கள் இவர்கள் பணி முடித்துத் திரும்பும்போது, கோவை அரசு மருத்துவமனை சார்பில், சான்று வழங்கவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவல் உச்சத்திலுள்ள நிலையில், குறிப்பிட்ட சில அரசுத்துறையினர் மட்டுமே, கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க, பல்வேறு அரசுத்துறையினரும் வீடுகளில் ஓய்வில் உள்ளனர்.இந்நிலையில், கோவையின் தொழில் மற்றும் சமூக அமைப்புகள், இதுபோன்ற உதவிகளைச் செய்வது, மருத்துவத் துறையினருக்குப் பேருதவியாக இருக்கும் என்பதோடு, கொரோனாவிலிருந்து கோவை விரைவில் மீண்டெழும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *