Share on Social Media


பரங்கிப்பேட்டை – கடலுார்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில், சாலை அகலப்படுத்தும் பணி ஜரூராக நடக்கிறது.கடலுாரில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், தினமும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்கள் என ஆயிரத்திற்கும், மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.குறிப்பாக, சிதம்பரம் நடராஜர் கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம் என புகழ்பெற்ற இடங்கள் இருப்பதால் சுற்றுலா பயணிகள் கல்லுாரி மாணவர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.மேலும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள் கடலுார்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் செல்வதால், இந்த சாலை எப்போதும் பிசியாகவே காணப்படும்.பல நேரங்களில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.இப்படி, போக்குவரத்து அதிகம் உள்ள சாலையில் உள்ள வளைவு பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது.குறிப்பாக, புவனகிரி அடுத்த தப்பிக்குநல்லாண்பட்டினம், பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை, தீர்த்தாம்பாளையம், பெரியப்பட்டு, ஆலப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில், சாலையின் வளைவு பகுகளில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.சாலை வளைவு பகுதிகளில் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும் வகையில், சாலை பாதுகாப்பு திட்டத்தில், 8 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை அருகே மானம்பார்த்தான் வாய்க்காலில் இருந்து தீர்த்தாம்பாளையம் வளைவு வரை 1.4 கி.மீ., துாரம் சாலையின் இரு பக்கமும் அகலப்படுத்தும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி சில மாதங்களில் முடிந்துவிடும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பணி முடியும் பட்சத்தில், பு.முட்லுார் எம்.ஜி.ஆர்., சிலை, தீர்த்தாம்பாளையம் பகுதிகளில், விபத்துகள் நடப்பது வெகுவாக குறையும்.

Advertisement



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *