Share on Social Media


`ஒரு திரைப்படத்தில் வரும் விமர்சனங்களை அதுவும் படமே இன்னும் வெளியாகாத நிலையில், வெறும் டீசரை மட்டும் பார்த்துவிட்டு இது போன்ற எதிர்ப்பு தெரிவிப்பது சரியா?’ என்று கேட்டோம்.

“படத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் நடிகர்கள், விஜய் சேதுபதி, பார்த்திபன், இயக்குநர் தீனதயாளன் என அனைவரும் எங்கள் கருத்துக்கு எதிர்க் கருத்துடையவர்களாகவே இருக்கிறார்கள். அதனால்தான் நாங்கள் ஆரம்பத்திலேயே எதிர்க்க வேண்டியிருக்கிறது. `800’ படத்தை தடுத்து நிறுத்தியதால், அதற்கான பழிவாங்கலோ என்று பார்க்க வேண்டியிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து உருவாக்கிக்கொண்டிருக்கும் கட்சியை, போகிற போக்கில் சினிமாவின் பேரில் கொச்சைப்படுத்துவதை, கொள்கைக் கோட்பாடுகளைக் காலி செய்வதை நாங்கள் ஏற்க முடியாது. அது போன்ற காட்சிகளுடன் படம் வெளியானால், நிச்சயமாகக் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்கிறார் அவர்.

மேலும் சில நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பேசும்போது, “அரசியல் நையாண்டித் திரைப்படங்கள் வெளியாவது இயல்பானதுதான். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் இருந்த கட்சிகளை அப்படி விமர்சிக்கலாம். வளர்ந்துகொண்டிருக்கிற ஒரு கட்சியை கேலிப் பொருளாக்குவது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல” என்கிறார்கள். இது குறித்து விளக்கம் கேட்க, `துக்ளக் தர்பார்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரை நாம் பலமுறை தொடர்புகொண்டும் அவர் அழைப்பை எடுக்கவில்லை. ஆனால், படக்குழுவினர், “திட்டமிட்டு உள்நோக்கத்தோடு எதுவும் செய்யவில்லை. எல்லாமே யதார்த்தமாக அமைந்ததுதான்” என விளக்கம் தருகிறார்கள்.

பார்த்திபன் - விஜய் சேதுபதி

பார்த்திபன் – விஜய் சேதுபதி

அதேவேளையில், “ஒரு திரைப்படம் வெளியான பின்னர், அதிலுள்ள கருத்துகள் யார் மனதையும் புண்படுத்தும்விதத்தில் இருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவிக்கலாம். ஆனால், டீசர் வெளியான உடனேயே எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்க முடியாது. தமிழ்த் திரையுலகில் ஆண்ட, ஆளுகின்ற கட்சிகளின் தலைவர்களை மட்டுமல்லாமல், மற்ற பல தலைவர்களையும் விமர்சித்து திரைப்படங்கள் வந்திருக்கின்றன. பல சிந்தாந்தங்கள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. கருத்துகளை, கருத்துகளால்தான் வெல்ல வேண்டுமே தவிர நெருக்கடி கொடுக்கக் கூடாது” என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *