Share on Social Media


‘தி.மு.க அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என ‘தி.மு.க – அ.தி.மு.க’ இடையிலான போராட்ட அரசியலை அ.தி.மு.க ஆரம்பித்து வைக்க…. ‘அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய’தாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப் பதிந்து பதிலடி கொடுத்திருக்கிறது தி.மு.க தலைமையிலான தமிழக அரசு! 2021 சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க தேர்தல் அறிக்கையில் அதிரடியாக ‘500 வாக்குறுதிகள்’ கொடுக்கப்பட்டிருந்தது அ.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. ஏனெனில், ‘நீட் தேர்வு விலக்கு, மகளிருக்கு மாதாந்திர உதவித் தொகை, பெட்ரோல் விலை குறைப்பு, மக்கள் அளித்த மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு’ என தி.மு.க அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழக மக்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தது.

மு.க.ஸ்டாலின்

தொடர்ச்சியாக 10 ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவந்த அ.தி.மு.க-மீது மக்களுக்குப் பெரியளவில் அதிருப்தி இல்லையென்றாலும்கூட, கூட்டணி, பிரசாரம், வாக்குறுதிகள் என தி.மு.க திட்டமிட்டு வகுத்திருந்த தேர்தல் வியூகம், தி.மு.க – வுக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. இதையடுத்து முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தாங்கள் ஏற்கெனவே தேர்தல் வாக்குறுதியில் கொடுத்திருந்த ஐந்து திட்டங்களுக்கான ஆணைகளில் முதல் கையெழுத்திட்டார்! இதில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதி, ஆவின் பால் விலைக் குறைப்பு, மகளிருக்கு இலவச பயண அறிவிப்பு உள்ளிட்டவை அடங்கும்.

ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு உச்சம் தொட்டிருந்த வேளையில், தி.மு.க தலைமையிலான அரசு புதிதாக பதவியேற்றிருந்தது அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது. கூடவே, அரசின் நிதி நெருக்கடி நிலைமையும் தி.மு.க அரசுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது.

Also Read: சென்னை: மகள்களுக்கு பாலியல் தொல்லை! – காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் மனைவி

முதல்கட்டமாக கொரோனா ஒழிப்புப் பணியைக் கையிலெடுத்த தி.மு.க அரசு, இதற்காக தனது ஒட்டுமொத்த அமைச்சரவையையும் முழுஅளவில் களமிறக்கி, ஒரு மாதத்துக்குள்ளாக நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது! இதன் தொடர்ச்சியாக கொரோனா ஊரடங்குகளும் மெல்ல மெல்ல தளர்வு நிலையை எட்டி, சகஜ நிலையை எட்டியது. ஆனால், ஏற்கெனவே ஐந்து லட்சம் கோடிகளைத் தாண்டி நிற்கும் தமிழக அரசின் நிதி நிலையை சமாளித்து, புதிதாக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதென்பது தி.மு.க அரசுக்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது. குறிப்பாக, ‘பெட்ரோல் விலையைக் குறைப்போம்’ என தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தவர்கள், விலைக் குறைப்புக்கு மாறாக விலையை அதிகரிக்கும் முடிவுகளுக்குத் தள்ளப்பட்டனர். இதுதவிர, மகளிருக்கான மாதாந்திர உதவித் தொகை, நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட எதிர்பார்ப்பு மிகுந்த வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற முடியாத சூழல் நிலவவே…. எதிர்க்கட்சியான அ.தி.மு.க இந்த விஷயங்களையெல்லாம் கையிலெடுத்து தி.மு.க அரசுக்கு எதிராக ‘உரிமைக்குரல் முழக்கப் போராட்ட’த்தை நடத்திமுடித்துவிட்டனர்.

eps ops Tamil News Spot
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்.

‘பா.ஜ.க-வோடு கூட்டணி சேர்ந்ததுதான் அ.தி.மு.க தோல்விக்குக் காரணம்’ என ரத்தத்தின் ரத்தங்கள் ஏற்கெனவே குமுறிவந்த நிலையில், ‘தமிழ்நாட்டில், இனி தி.மு.க – பா.ஜ.க இடையேதான் போட்டியே…’ என்று தமிழக பா.ஜ.க-வினர் அவ்வப்போது தட்டிவந்த பேட்டிகளால், கொதிநிலைக்குச் சென்றனர். அ.தி.மு.க-வினரின் இந்த உள்ளக் கொதிப்புகள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திலும் எதிரொலித்தது. விளைவு… ‘தி.மு.க-வுக்கு மாற்று அ.தி.மு.க மட்டும்தான்’ என்று நிரூபிக்கவேண்டிய கட்டாயத்திலிருந்த அ.தி.மு.க தலைவர்கள் ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசு’ எனத் தலைப்பிட்டு தங்கள் கட்சி பலத்தை நிரூபிப்பதற்கான களமாக போராட்டத்தை மாற்றிவிட்டனர்.

அ.தி.மு.க-வினர் நடத்திய, கருப்புக்கொடி போராட்டம் அவர்கள் ‘எதிர்பார்த்த வெற்றியைத் தந்திருக்கிறதா’ என்பது குறித்து அரசியல் விமர்சகரான ப்ரியனிடம் கேட்டபோது, ”தி.மு.க கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்த கவன ஈர்ப்பு போராட்டத்தைத்தான் அ.தி.மு.க நடத்தியிருக்கிறது. ஆனால், தி.மு.க அரசு பொறுப்புக்கு வந்து 100 நாட்களைக்கூட முடித்திராத இந்த சூழ்நிலையில் இப்படியொரு போராட்டத்தை அ.தி.மு.க நடத்தியிருப்பதால், மக்கள் மத்தியிலும் பெரிதாக கவனம் பெறவில்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில், ‘தி.மு.க அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை’ என்று போராட்டம் நடத்துகிற அளவுக்கு இப்போது அவசரமோ, அவசியமோ இல்லை!

Also Read: நாகை : திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு! – பெற்ற மகனை கொன்ற கொடூரத் தாய்

மக்களில் யாரைக் கேட்டாலும் ‘அரசு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் கொடுத்தது, பஸ்ஸில் இலவசமாக போய்வர முடிகிறது’ என்றெல்லாம்தான் சொல்கிறார்களே தவிர… வேறு எந்தக் குறையும் சொல்லவில்லை. இந்த நிலையில், அ.தி.மு.க-வின் முக்கியத் தலைவர்கள் மட்டுமே இந்தப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர். மற்றபடி பெரியளவில் மக்கள் கூட்டம் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதே, மக்களிடம் ஆதரவு இல்லை என்பதை நிரூபிக்கிறது. அண்மையில், ‘ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை மூடக்கூடாது’ என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரத்தில் நடத்திய போராட்டத்தில்கூட ஆயிரக்கணக்கான பேர் திரண்டிருந்தனர். ஆனால், அதே சி.வி.சண்முகம் நேற்று நடத்தியிருக்கும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் அவ்வளவு பெரிய கூட்டத்தை திரட்ட முடியவில்லை.

priyan Tamil News Spot
ப்ரியன்

விரைவில், தி.மு.க அரசு, பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறது. அந்தப் பட்ஜெட்டில் என்னென்ன திட்டங்கள் அறிவிக்கிறார்கள் என்பதையெல்லாம் பார்த்துவிட்டு, அ.தி.மு.க இப்படியொரு போராட்டத்தை அறிவித்திருந்தால், மக்களிடமும் ஆதரவு பெருகியிருக்கும். ஏனெனில், அப்போது தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாட்களும் கடந்திருக்கும். ஆனால், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வீடுகளில், ரெய்டு நடைபெற்ற உடனேயே, ‘எங்களை அழிக்க நினைக்கிறார்கள். தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டம்’ என்றெல்லாம் அறிவிக்கிறார்கள். ‘சசிகலா பக்கம் யாரும் போய்விடக்கூடாது, தி.மு.க-வுக்கு செல்கிறவர்களையும் தடுத்து அனைவரையும் ஒற்றுமைப்படுத்தவேண்டும்’ என்பதையெல்லாம் கணக்கில்கொண்டுதான் அ.தி.மு.க இப்படியொரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது. எனவே, இது ‘கட்சி நலனை முன்வைத்து நடத்தப்பட்ட போராட்டம்தானே தவிர, மக்கள் பிரச்னைக்காக நடத்தப்பட்ட போராட்டம் அல்ல’ என்பதை மக்களும் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்றே கருதுகிறேன்” என்கிறார்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *