Share on Social Media


மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.

திருமணத்திற்கு தேதி குறித்ததும் மணப்பெண்கள் உடனே நகைகளை தேர்வு செய்தல், நவநாகரிக உடைகளை தேர்ந்தெடுத்தல் என்று களத்தில் இறங்கிவிடுவார்கள். அதைவிட முக்கியமான விஷயங்கள் சில இருக்கின்றன. திருமண கனவுகள் மணப்பெண்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி தருமென்றாலும், அவர்களுக்குள் பலவித தயக்கங்களும், தடுமாற்றங்களும் இருக்கத்தான் செய்யும். அவைகளில் தெளிவு ஏற்படுத்திக்கொண்டால்தான், திருமணத்தை மகிழ்ச்சியாக எதிர்கொள்ள முடியும்.

திருமணம் என்றதுமே மணமகள் வீடு களைகட்டிவிடும். பத்திரிகை தயார் செய்வது, அலங்காரத்திற்கு, பந்தலுக்கு, மண்டபத்திற்கு பதிவு செய்வது என அடுக்கடுக்கான பணிகள் இருக்கும். பெண்ணின் பெற்றோரும், சகோதரரும் அவரவர் பொறுப்பு களில் மூழ்கிவிடுவார்கள். மணப்பெண்ணின் மன நலம், உடல்நலம் பற்றி அதிகம் யோசிக்கமாட்டார்கள். ‘சந்தோஷமாக திருமணத்திற்கு தயாராகு’ என்று மட்டும் கூறிவிட்டு அவரவர் வேலையை பார்க்க கிளம்பிவிடுவார்கள். மணப்பெண்தான் தனது உடலையும், மனதையும் பேணிக் கொள்ள வேண்டும். மனம் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருந்தால்தான் அந்த அழகு முகத்தில் பிரதிபலிக்கும்.

திருமண நாள் நெருங்க நெருங்க கடைசிகட்ட பரபரப்பு ஒன்று தொற்றிக்கொள்ளும். அப்போது உணவுப் பழக்கம் மாறும். உணவு சாப்பிடும் நேரத்திலும் மாற்றம் ஏற்படும். அவை உடல்நலத்தில் மாற்றத்தை விளைவிக்கக் கூடியதாகும். அதனால் உணவு விஷயத்தில் மணப்பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருப்பது, திருமணத்திற்கு மட்டுமல்லாது எப்போதுமே அழகையும், நலத்தையும் தரும்.

வழக்கமாக உடற்பயிற்சி மேற்கொள்ளாத பெண்கள்கூட எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு 2 முதல் 3 மாத இடைவெளி இருந்தால் உடற்பயிற்சி நல்ல பலன்தரும். உடலில் ஏற்படும் மாற்றங்களையும் உணரலாம். ஒவ்வொரு வாரத்திற்கும் இலக்கு நிர்ணயித்து பயிற்சிகளை மேற்கொண்டால் அதிக பலன்களை பெறலாம்.

சைக்கிளிங் பயிற்சி உடலை உறுதிப்படுத்தும், தேவையற்ற கொழுப்புகளையும், அதிக எடையையும் குறைக்கும். ஸ்கிப்பிங் பயிற்சி செய்வது கர்ப்பப்பையை பலமாக்கும். டிரெட்மில்லில் பயிற்சி செய்வதும் உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும். வேலைக்கும் செல்லும் பெண்களாக இருந்தாலும் இத்தகைய பயிற்சிகளில் கவனம் செலுத்தவேண்டும்.

நல்ல பியூட்டிசியன் கிடைத்தால் மட்டும் உங்கள் உடல் அழகாகிவிடாது. சருமம், முடி, நகம், பல் எல்லாவற்றையும் அழகாக மாற்றக்கூடியது உணவுப் பழக்க வழக்கம்தான். திருமணம் நிச்சயமான பெண்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்த உணவுப் பழக்கத்தை கடைப்பிடிப்பது மினுமினுப்பான தேகம் மற்றும் ஆரோக்கியமான உடலுக்கு உறுதுணையாக அமையும். கர்ப்பகால சத்துத் தேவைகளையும் இது ஈடுகட்டும். அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்புச்சத்து கொண்ட உணவுகளை உண்பது தேகத்தை பொலிவாகவும், உடலை நலமாகவும் மாற்றும்.

மணப்பெண்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தை எளிதில் அறிய வேண்டுமா? சிறிது தூரம் ஓடிப்பார்க்கவேண்டும். அப்போது களைப்பாகவும், சோர்வாகவும் உணர்ந்தால், போதிய இரும்புச்சத்து உடலில் இல்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.

19 முதல் 50 வயது வரை பெண் களுக்கு தினமும் 18 மில்லிகிராம் இரும்புச்சத்து உடலுக்குத் தேவை. இதுதான் ரத்தத்தின் ஹீமோகுளோபின் அளவை கட்டுக்குள் வைக்கக்கூடியது. அதுவே சருமப் பொலிவுக்கும் காரணமாக அமையும். இந்தச்சத்து குறைவாக இருப்பது சருமத்தை மட்டுமல்ல கூந்தலையும், நகத்தையும் பாதிக்கும். மென்மையான செந்நிற நகங்களும், மினுக்கும் கருங்கூந்தலும் தேவையானால் இரும்புச்சத்து அவசியம்.

பருப்பு வகைகள், கீரை வகைகள் இந்த சத்துத் தேவையை ஈடுகட்டும். பீட்ரூட் மற்றும் சோயாபீன் அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. இது மட்டுமே உடலுக்குத் தேவையான சத்து என்பதல்ல. சோயாவில் கால்சியம் மற்றும் மக்னீசியம், செலினியம் தாதுக்களும் மிகுந்துள்ளது. முந்திரி, பாதாம் போன்றவற்றிலும் உடலுக்கு அவசியமான அனைத்து தாதுக்களும் அடங்கி உள்ளன. அதிக அளவு மெலிந்த மற்றும் குண்டான தேகம் கொண்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு வகைகளை பின்பற்றலாம்.

சுவை கருதி செயற்கை பானங்களை பருகுவதை குறைத்துக் கொள்ளுங்கள். காபி மற்றும் டீ போன் றவைகூட தூக்க முறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. சோடா மற்றும் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்களையும் தவிர்க்கலாம். குளிர்பானங்களை விலக்கிவைப்பது நல்லது. அவற்றில் உள்ள வேதிப்பொருட்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. கருவளையங்கள் மற்றும் சருமப் பொலிவை பாதிக்க இவை காரணமாகலாம். சில வேதிப்பொருட்கள் தூக்கத்தைக் கெடுக்கும். மனநிலையில் கிளர்ச்சியையும், தடுமாற்றத்தையும் உருவாக்கும். தொடர்ந்து செயற்கை பானங்களைப் பருகுவது சில வியாதிகளுக்கும், அஜீரண கோளாறுகளுக்கும் வழி வகுக்கும்.

பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் திகழ இயற்கை பானங்களை பருகுங்கள். தினமும் 8 டம்ளர் நீர் பருகுங்கள். காய்கறி, ஜூஸ்கள், சிறந்த உணவுக்கட்டுப்பாட்டிற்கு ஏற்றது. இவை உடல் எடையை ஏற்றாமல், உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கக்கூடியவை.

மணப்பெண்களுக்கு பல்வேறு காரணங்களால் மன அழுத்தம் உண்டாகலாம். திருமணம் மற்றும் முதலிரவு பற்றிய பயம், கவலை பலருக்கும் மன அழுத்தம் தரக்கூடியது. சிலருக்கு ஆண் நண்பர்களாலும், ஒருதலைக் காதலர்களாலும் மன வருத்தங்கள் ஏற்படலாம். மணம் பேசியவருடன் ஏற்படும் கருத்து வேறுபாடுகளும் சஞ்சலம் தரலாம். திருமணத்தில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாத காரணங்களாலும் மணப்பெண் மன அழுத்தங்களை எதிர்கொள்ளலாம்.

மன அழுத்தம் உடலில் தேவையற்ற நச்சுப்பொருட்கள் சுரக்க காரணமாகின்றன. அவை கவலை மற்றும் பல்வேறுவிதமான பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மன அழுத்தங்களை கட்டுக்குள் வைக்க பிரச்சினை களின் தன்மைக்கேற்ப பெற்றோர் மற்றும் தோழிகளுடன் ஆலோசனை பெறுங்கள். தீவிர மன அழுத்தத்தில் இருப்பவர்கள் மனநல கவுன்சலிங் பெறலாம்.

மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள யோகா மற்றும் தியான பயிற்சிகள் கைகொடுக்கும். இதில் பழக்கம் இல்லாதவர்கள் அருகில் உள்ள பூங்காக் களுக்கு சென்று சிறிது தூரம் நடக்கலாம். மனதை அமைதிப்படுத்தியவாறு உட்கார்ந்திருக்கலாம். விரும்பிய புத்தகத்தை படிக்கலாம். நகைச்சுவை நிகழ்ச்சிகளை ரசிக்கலாம். நிம்மதியாக தூங்கி எழுந்தால் பல பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகள் மூளையில் உதயமாகும். நல்ல தூக்கம் மனஅழுத்தத்திற்கு தீர்வாகவும், புத்துணர்ச்சிக்கு சிறந்த வழியாகவும் அமைகிறது.

திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள், முதலில் இருந்தே தங்கள் உடல் நலனிலும் மன நலனிலும் அதிக அக்கறை காட்டவேண்டும். அவைதான் மண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


https://www.youtube.com/watch?v=videoseries

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *