Share on Social Media


திருப்பத்தூர்: திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிபேராசிரியர் பிரபு, தொல்லியல் ஆய்வாளர் சேகர் மற்றும் ஆய்வு மாணவர்கள் தரணிதரன், சரவணன் ஆகியோர் திருப்பத்தூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மிட்டூர் அருகே உள்ள  குண்டுரெட்டியூர் மலைச்சரிவில் சுமார் 1,270 ஆண்டுகள் பழமையான வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றினைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்த்துறை உதவி பேராசிரியர் பிரபு கூறியதாவது: கடந்த 2016ம் ஆண்டு முதல் திருப்பத்தூர் மாவட்டம் மிட்டூர் அருகே குண்டு ரெட்டியூரில் தொடர்ந்து பல கள ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்றுத் தடயங்களை கண்டுபிடித்து உள்ளோம்.

தற்போது 30 ஆண்டுகளுக்கு முன்பு தேடப்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டை அண்மையில் கண்டறிந்துள்ளோம். குண்டு ரெட்டியூரில் மலைச்சரிவில் அடர்ந்த புதர்களுக்கிடையே உள்ள சிறிய பாறைக் குன்றின் பக்கவாட்டில் இக்கல்வெட்டு கண்டறியப்பட்டது. கி.பி. 751ல் பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டானது சற்று சிதைந்துள்ளது. முதற்கட்டமாக இக்கல்வெட்டினை முதுபெரும் கல்வெட்டு அறிஞர் ராஜகோபால் உதவியோடு படிக்கப்பட்டு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இக்கல்வெட்டானது தூய தமிழ் வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. புடைப்பு விளிம்புடன் கூடிய கட்டத்தில் 9 வரிகள் காணப்படுகின்றன.

இக்கால தகவல் பலகை போல உள்ள இக்கல்வெட்டானது, சமணப் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட ‘பள்ளிச் சந்தம்’ குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் விவரிக்கிறது. பள்ளிச்சந்தம் என்பது பிரமதேயம், தேவதானம் போல சமண சமயத்தார்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலக்கொடையினைக் குறிப்பதாகும். கல்வெட்டு உள்ள வட்டெழுத்துக்கள் தூய தமிழ் நடையை கையாண்டு எழுதப்பட்டுள்ளது. ‘ஸ்வஸ்தி’ என்ற சொல்லை ‘சுவத்திசிரி’ என்றும் புருஷவருமன் ‘புருசவிக்கிரம பருமர்’ என்றும் தமிழ்ப்படுத்திக் குறிப்பிடப்பட்டுள்ளன. இறுதியில் ‘சிறக்க’ என்ற அழகு தமிழ்ச் சொல்லுடன் கல்வெட்டு முடிவடைகிறது. கங்க மன்னர்கள் சிறந்த சமணப் பற்றாளர்கள் என்பதற்கு இக்கல்வெட்டு சான்றாக அமைகிறது.

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இக்கல்வெட்டானது அக்காலத்தைய சமய நல்லிணக்கத்தினை எடுத்துக்கூறுவதாக அமைந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாற்றுப் பெருமையினை எடுத்துரைக்கும் இக்கல்வெட்டினை முறையாக பாதுகாத்திட தொல்லியல் துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டுமென இதன் வாயிலாகக் கேட்டுக்கொள்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *