Share on Social Media


திருநின்றவூர்: திருநின்றவூர் மேம்பாலத்தில் மின் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். திருநின்றவூர் அருகே புதுச்சத்திரத்தில் இருந்து கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், ராஜாகுப்பம், திருநின்றவூர், பாக்கம், தாமரைபாக்கம், வெங்கல் வழியாக பெரியபாளையத்திற்கு சாலை செல்கிறது. இந்த சாலையை புதுச்சத்திரம் – திருநின்றவூர்- பெரியபாளையம் நெடுஞ்சாலை என மக்கள் அழைக்கின்றனர். இச்சாலையில் திருநின்றவூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்கும் வகையில் ரயில்வே மேம்பாலம் அமைந்துள்ளது. இச்சாலை பயன்படுத்தி மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது பணி நிமிர்த்தமாக சென்று வருகின்றனர். குறிப்பாக, திருநின்றவூர், திருமழிசை, பூந்தமல்லி, வெள்ளவேடு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பக்தர்கள் பெரியபாளையம் அம்மன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் உள்ள திருநின்றவூர் ரயில்வே மேம்பாலத்தில் பல மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால், இரவில் மேம்பால பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து கிடக்கிறது. அப்பகுதியில் இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மேலும், சில நேரங்களில் அவர்கள் மீது கனரக வாகனங்கள் மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், பாதசாரிகள் செல்லும் மேம்பால படிக்கட்டு பாதையில் குடிமகன்கள் குடித்து விட்டு பாட்டில்களை உடைத்து போட்டு செல்கின்றனர். இதனால், அப்பாதையை பாதசாரிகள் பயன்படுத்திட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும், அவர்கள் தண்டவாள பாதையை கடந்து செல்லுவதால், விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் மேம்பாலத்தில் பல விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயம் அடைந்து உள்ளனர். மழை காலத்தில் வீசிய புயல் காற்றால் மேம்பால பகுதியில் உள்ள மின் விளக்குகள் பல உடைந்து விழுந்தன. இதனை கூட அதிகாரிகள் புதுப்பிக்காமல் உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக இருக்கின்றனர். எனவே, திருநின்றவூர் மேம்பாலத்தில் எரியாமலும், உடைந்த கிடக்கும் மின் விளக்குகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

* போராட்ட எச்சரிக்கை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “திருநின்றவூர் மேம்பால பகுதியில் கடந்த பல மாதங்களுக்கு மேலாக மின் விளக்குகள் எரியாமல் உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி கை, கால்கள் உடைந்து அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்காமல் உயிருடன் விளையாடுகின்றனர். விரைவில் மின் விளக்கு களை சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்றனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *