Share on Social Media

அந்தக் காலத்தில் தமிழகத்தில் இருந்த பெரும்பாலான மக்களுக்கு பொழுதுபோக்கெல்லாம் இலங்கை வானொலிதான். சுவாரஸ்யமான விளம்பரங்கள், இனிமையான பாடல்கள் என மக்கள் அதில் மயங்கிக் கிடந்தார்கள். கடைகள், தொழிற்கூடங்களில் இலங்கை வானொலி பாடிக்கொண்டேயிருக்கும். நான்கு பேர் ஒரிடத்தில் அமர்ந்திருந்தால் அந்த இடத்தில் இலங்கை வானொலியும் இருக்கும். அந்த அளவுக்கு தமிழக மக்களோடு இரண்டறக் கலந்திருந்தது இலங்கை வானொலி. ஆல் இந்திய ரேடியோவும் அப்படித்தான்.

ரேடியோ

கல்யாணி கவரிங் நிறுவனம் ஒரு பிராண்டாக வளர்ந்து நிற்க அடிப்படை இலங்கை வானொலி, ஆல் இந்திய ரேடியோவில் ஒலிபரப்பான விளம்பரங்கள். எப்போதும் ஒரு நிறுவனம், ‘இதுதான் நமது எல்லை’ என்று தேங்கிவிடக்கூடாது. அந்த இடத்திலிருந்து அடுத்த எல்லையைத் தீர்மானித்து நகர வேண்டும். அப்படி நகர்ந்த நிறுவனங்கள்தான் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பெருவளர்ச்சியை எட்டி நிற்கின்றன. யாருமே யோசிக்காத ஒரு நேரத்தில் கவரிங் ஆபரணத் தொழிலில் இறங்கினார் கோபாலகிருஷ்ணன். பிள்ளைகள் பொறுப்பெடுத்து, விளம்பரம் செய்து அந்த வணிகத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

அதற்குப் பிறகு என்ன?

கடையைத் திறந்து கூட்டிப்பெருக்கக்கூட நேரமில்லாத அளவுக்கு வணிகம். கல்லாவில் அமர்ந்து கோபாலகிருஷ்ணனால் பணத்தை வாங்கி போட முடியவில்லை. அந்த அளவுக்குக் கூட்டம்… இரவு உரிய நேரத்தில் கடை அடைக்க முடியவில்லை. மக்கள் வந்துகொண்டேயிருக்கிறார்கள். அடுத்து என்ன என்று யோசித்தார்கள் பிள்ளைகள். வணிகத்தை விரிவுபடுத்துவோம் என்று தமிழகம் முழுவதும் ஷோரூம்கள், கிளைகள் திறக்கப்பட்டன.

ARA3562 Tamil News Spot
கல்யாணி கவரிங்

அடுத்து?

மக்கள் நம்புகிறார்கள்… தரத்தைப் பாதுகாக்க வேண்டும். இனி வெளியில் வாங்க வேண்டாம்… நாமே தயாரிப்போம் என்று களத்தில் இறங்குகிறார்கள். அதுவும் சக்சஸ்!

அடுத்து?

தொழில்நுட்பத்தை மேம்படுத்த நினைக்கிறார்கள். ஷீட் கவரிங் தொழில்நுட்பத்தில் தங்கத்தை தகடுகளாக வார்த்து கவரிங் செய்வது நிறைய நேரத்தைத் தின்றது. செலவும் கூடியது. மைக்ரோ பிளேட்டிங், எலக்ட்ரோ பிளேட்டிங் எனப் புதுப்புது தொழில்நுட்பங்களைக் கொண்டு வந்தார்கள். செலவு குறைந்தது. உற்பத்தி அதிகமானது.

WhatsApp Image 2021 07 12 at 1 57 59 PM 1 Tamil News Spot
கல்யாணி கவரிங்

அடுத்து?

வணிகத்தைப் பெருக்க, விளம்பரங்களை இன்னும் மெருகேற்றுவது, அடுத்த கட்டத்துக்குக்கொண்டு போவது…

“இலங்கை வானொலி, ஆல் இந்திய ரேடியோ விளம்பரங்கள்தான் எங்க நிறுவனத்தை இந்தியாவெங்கும் கொண்டுபோய் சேர்த்தது. விளம்பரம் கொடுக்கிறோம், வெளிவருதுன்னு இல்லாம இதுல இன்னும் கூடுதலா ஏதாவது செய்யனும்ன்னு யோசிச்சோம். நாமே நிகழ்ச்சியை தயாரிக்கலாம்ன்னு எங்களுக்கான விளம்பரங்களைத் தயாரிச்சுக் கொடுக்கிற வி.ஆர்.ஜி ஒரு ஆலோசனை சொன்னார். ஆல் இந்திய ரேடியோவுல ‘கல்யாணியின் குடும்பம்’ன்னு ஒரு நிகழ்ச்சி தயாரிச்சோம். இலங்கை வானொலியில ‘கல்யாணியின் வெள்ளிச்சலங்கைகள்’ன்னு ஒரு நிகழ்ச்சி. இது ரெண்டும் வணிகத்தை வேற லெவலுக்குக் கொண்டு போச்சு. நிகழ்ச்சியை ரெக்கார்டிங் பண்ணி கேசட்டை கூரியர்ல அனுப்புவோம். உள்ளே வேற எந்த விளம்பரமும் வராது. கல்யாணி கவரிங் மட்டும்தான் வரும்… தொடர்ந்து அரைமணி நேரம் கல்யாணி கவரிங் பத்தி மட்டுமே ஒலிபரப்பாகும். ராஜேஸ்வரி சண்முகம், அப்துல் ஹமீது, ராஜான்னு பிரபலமான மனிதர்கள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாங்க. 1980 முதல் 1998 வரைக்கும் ரேடியோ விளம்பரம்தான்.

அப்போ எங்களைப் பாராட்டி ஒருநாளைக்கு 500 முதல் 1000 அஞ்சலட்டைகள் வரும். மூட்டை மூட்டையா கட்டி தூக்கிட்டு வருவாங்க போஸ்ட்மேன்கள். போட்டிகள் நடத்துவோம். சிறந்த கடிதம் எழுதுறவங்களுக்கு ஆபரணங்கள் தருவோம். தினமலர் பத்திரிகையோட சேர்த்து போட்டிகள் நடத்தினோம். மாருதி கார், வால் கிளாக்கெல்லாம் பரிசு தருவோம். இதெல்லாம்தான் எங்க நிறுவனத்தோட பேரை உலகமெல்லாம் கொண்டு போய் சேர்த்துச்சு.

ARA3585 Tamil News Spot
கல்யாணி கவரிங்

ஒரு கட்டத்துல ரேடியோ யுகம் கொஞ்சம் இறங்குச்சு. தொலைக்காட்சிகள் வந்துச்சு. சன் டிவியின் தமிழ்மாலை வந்துச்சு. அதுல விளம்பரம் கொடுத்தோம். கணக்குப் பார்த்தா விளம்பரங்களுக்கு கணிசமா ஒரு தொகை செலவு செய்றோம். அப்போது சீரியல்கள்தான் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளாக இருந்துச்சு. சீரியல்களுக்கு இடையில் விளம்பரம் செய்ய நிறைய பணம் செலவாகும். நிகழ்ச்சிகளின் இடையில் பணம் கொடுத்து விளம்பரம் செய்வதற்குப் பதிலாக நாமே சேனல்ல ஸ்லாட் வாங்கி சீரியல் தயாரித்தால் செலவும் குறையும். வருமானமும் கிடைக்கும் என்றார் வி.ஆர்.ஜி. அதையும் செஞ்சு பார்க்க முடிவு செஞ்சோம்…” என்கிறார் திருமூர்த்தி.

திருமூர்த்தி சகோதரர்கள் களத்தில் இறங்கினார்கள். சன் டிவியில் சிலாட் வாங்கினார்கள். சித்ராலயா கோபு, இயக்குநர் பத்மநாபன் ஆகியோரை வைத்து ‘சுமதி’ என்ற சீரியலைத் தயாரித்தார்கள். அப்போதெல்லாம் சீரியல் என்றால் 13 எபிஸோடுதான். வாரம் ஒருநாள், இரவு 7.30 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பானது சுமதி. அதுவரை ஒலியாக மக்களைச் சென்றடைந்த கல்யாணி கவரிங் ஒளி வடிவத்திலும் சென்றடைந்தது. ‘சுமதி’ சீரியல் பெரு வரவேற்பைப் பெற்றது. நடிகை காவேரி நடித்திருந்தார். அந்தாண்டு சன் டிவியின் சிறந்த சீரியலுக்கான விருதும் கிடைத்தது. அடுத்து. இன்னொரு சீரியலும் செய்தார்கள். அதன்பிறகு சன் டிவியின் கட்டணங்கள் மாறியதால் வெளியே வந்துவிட்டது கல்யாணி கவரிங்.

WhatsApp Image 2021 07 12 at 1 57 59 PM 2 Tamil News Spot
திருமூர்த்தி சகோதரர்கள்

அடுத்து தூர்தர்ஷனில் ‘உன்னால் முடியும் நம்பு’ என்ற பெண்களை மையமாக வைத்து ஒரு சீரியல் தயாரித்தார்கள். ‘வீழ்ந்து கிடந்தால் வெட்கம் வெட்கம் உன்னால் முடியும் நம்பு’ என்று டைட்டில் பாடல் பெரு வரவேற்பைப் பெற்றது. இமான்தான் இசை.

கல்யாணி கவரிங் நிர்வாக இயக்குநர் திருமூர்த்திக்கு சிறுவயது கனவென்பது சினிமாவில் நடிப்பது. போட்டோ ஷீட், ஆல்பம் என முழு மூச்சாக வாய்ப்புத் தேடியிருக்கிறார். வாய்ப்புகள் கைக்கெட்டிய தருணத்தில் வீட்டில் கடுமையான எதிர்ப்பு. அதெல்லாம் நமக்குச் சரியா வராது என்று தடுத்துவிட்டார்கள். சீரியல்கள் வழியாக அவரின் கலைதாகமும் தீர்ந்தது.

திருமூர்த்திக்கு இன்னுமொரு கனவும் இருந்தது. அப்பா நடத்தி வந்த தங்க வணிகத்திலும் கால் பதித்துவிட வேண்டும். திட்டமிட்டு அந்தக் கனவை வளர்த்தெடுத்தார் திருமூர்த்தி. திருச்சி மலைக்கோட்டை அருகே ஜி.டி.தங்கமாளிகை என்ற நகைக்கடை உயிர் பெற்றது. ஆனால், கடையைத் திறப்பதற்குள் அப்பா காலமாகிவிட்டார்.

தங்க வணிகத்திலும் நிறைய புதுமைகள். யாருமே ஹால்மார்க், 916 பற்றியெல்லாம் யோசிக்காத நேரத்தில் ஒரு குண்டுமணி தங்கம் வாங்கினாலும் 916 தான் என்பதில் உறுதியாக இருந்து வணிகம் செய்தார்கள். இப்போது நம்பிக்கையின் சின்னமாக அந்த நிறுவனம் வளர்ந்து நிற்கிறது.

WhatsApp Image 2021 07 12 at 1 58 00 PM 1 Tamil News Spot
கல்யாணி கவரிங்

மூன்றாம் தலைமுறை வணிகத்துக்குள் நுழைந்தபிறகு, அதன் தேடலுக்கு ஏற்ற வகையில் சில மாற்றங்களைச் செய்தது. ஒரு காலத்தில் அவமானமாக கருதப்பட்ட கவரிங் ஆபரணங்கள் காலத்தின் வேகத்தில் பிரதான இடத்தைப் பிடித்தன. பேஷன், மேட்சிங் எல்லாம் வளர வளர, டிசைனிங் நகைகளின் தேவை அதிகரித்தது. கவரிங் வணிகம் வெகு வேகமான வளர்ச்சியை எட்டியது. ஆனால் பாரம்பர்ய டிசைன்களை விட இந்தத் தலைமுறைக்குப் பிடித்தமான டிசைனிங் ஆபரணங்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தியது கல்யாணி கவரிங்.

“இப்போ நம்ம தலைமுறையில வணிகமே வேறு மாதிரியிருக்கு. தொழில்நுட்பம் வளர்ந்த மாதிரி வாழ்க்கைமுறையும் மாறியிருக்கு. அமெரிக்காவுல இப்போ என்ன பேஷன்னு நம்மூர் கிராமத்துல உக்காந்து பார்த்திட முடியும். அந்த அளவுக்கு பார்வை விரிஞ்சிருச்சு. இன்னொரு விஷயம், கவரிங்ன்னா அது எளிய மக்களுக்கான, தங்கநகை வாங்க முடியாத மக்களுக்கான ஆபரணம்ன்னு ஒரு எண்ணம் இருந்துச்சு. அதுவும் மாறிடுச்சு. இன்னைக்கு திருட்டு பயம் அதிகமா இருக்கு. தங்கநகைகள் போட்டுக்கிட்டு வெளியில போறது பிரச்னையா இருக்கு. அப்போ வசதியானவங்களையும் கவரிங் நகைப்பக்கம் ஈர்க்க முடியும். அதுக்கு, அவங்க விரும்புற மாதிரி ஃபேஷனா டிசைனிங்கை மாத்தனும். அதுல நாங்க கவனம் செலுத்தத் தொடங்கினோம். அந்த ‘எலைட் மார்க்கெட்’டை குறிவச்சு ‘மால்யா டிசைனர் பேஷன் ஜூவல்லரி’ன்னு ஒரு கடையை ஆரம்பிச்சோம். இதுல ஒவ்வொரு டிசைன்லயும் ஒரு நகைதான் இருக்கும். அந்த அளவுக்கு யுனிக்கான தயாரிப்புகள். வைரம், தங்கத்துல செய்ற நகைகளையும் அப்படியே அச்சுப்பிசகமாக கவரிங்ல செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சோம். இந்தியா முழுவதும் போய் கண்காட்சிகள் நடத்தினோம். கோயில் நகைகள், இறக்குமதி நகைகள், பாரம்பர்ய இமிடேட் ஜூவல்லரி, ரூமி, எமரால்டு பதியப்பட்ட நகைகள்ன்னு மொத்தமும் எங்க தயாரிப்புகளைக் கொண்ட 20-25 ஸ்டால்கள் மட்டுமே அந்தக் கண்காட்சியில இருக்கும். மலேசியா வரைக்கும் கொண்டு போனோம். இதுவரைக்கும் இந்தியா முழுவதும் 20க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் நடத்தியிருக்கோம். அந்தக் கண்காட்சிகள் மால்யாங்கிற பிராண்டை சர்வதேச அளவுக்கு எடுத்துட்டுப் போச்சு.

ARA3564 Tamil News Spot
கல்யாணி கவரிங்

திருச்சியில 2, சென்னையில 1, விஜயவாடாவுல ஒண்ணுன்னு நாலு மால்யா டிசைனர் பேஷன் ஜீவல்லரி இருக்கு. நிறைய தென்னிந்திய நடிகைகள், பாலிவுட் நடிகைகள் எங்ககிட்ட நகைகள் வாங்குறாங்க. அடுத்து ஆன்லைன் வணிகத்துலயும் இறங்கியிருக்கோம்” என்கிறார்கள் கல்யாணி கவரிங்கின் மூன்றாம் தலைமுறை நிர்வாகிகள், மணிகண்டனும் கணேஷும்.

கல்யாணி கவரிங் இன்று பலநூறு பேரின் வாழ்வாதாரம். நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளம் பேருக்கு வாழ்க்கை தந்திருக்கிறது. யாருமே யோசிக்காத, எதிர்காலம் இருக்காதென்று நினைத்த ஒரு களம். பெரு வணிகமாக அதை நிலை நிறுத்தியிருக்கிறார்கள். முழுமையாக அந்நிறுவனத்தின் வளர்ச்சியை பரிசீலித்தால், கடுமையான உழைப்பு, தோல்விகளையும் சரிவுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம், மனம் தளராமை, புதுமையான சிந்தனை, ரிஸ்க் எடுக்கத் தயங்காமை, தொலைநோக்குப் பார்வை, வாடிக்கையாளர்களுடனான உறவை ஆக்கப்பூர்வமாக பராமரிப்பது, நம்பிக்கை, சமரசமில்லாத தரம், தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்துவது… இவைதான் வெற்றிக்கு வேராக இருக்கின்றன.

ARA3569 Tamil News Spot
கல்யாணி கவரிங்

ஒரு வெற்றியென்பது, பலநூறு பேருக்கு பாதை அமைப்பதாக இருக்கவேண்டும். கல்யாணி கவரிங் அப்படியொரு பாதையை அமைத்திருக்கிறது. மேலாண்மை கல்வியில் படிக்க வேண்டிய பாடம், கல்யாணி கவரிங்கின் வணிக வெற்றி!

அடுத்த வாரம், திருச்சியின் மற்றுமொரு மைல்ஸ்டோன் மனிதரைப் பற்றிப் பார்க்கலாம்!

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *